கீழடி தொழிலாளர்களைப் பற்றி முதல் முறையாக ஓர் ஆவணப்படம்!



‘‘பொதுவா, கீழடி அகழாய்வுல அதன் வரலாறும், அங்கு எடுக்கிற பொருட்களும், அதன் கதைகளும், அதனுடன் தொடர்புடைய அரசியல் செய்திகளும்தான் வெளியே வருது.
ஆனா, கடந்த ஏழு ஆண்டு களா அந்த அகழாய்வுல ஈடுபட்டுட்டு வர்ற தொழிலாளர்களின் பணிகள் பற்றி யாருக்கும் தெரியாது. அவங்க வேலையை வெளியுலகுக்குக் காட்டணும்னு தோணுச்சு. அதான் அதை ஓர் ஆவணப்படமா எடுத்தேன்...’’ நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் சரண்ராஜ்.

சமீபத்தில் சென்னை போட்டோ பினாலே நடத்திய இரண்டு மாத கலைக் கண்காட்சியில் இவரின், ‘ஒளி - நிழல் நடுவில் நாங்கள்’ என்கிற கீழடி தொழிலாளர்களின் ஆவணப்படமும் திரையிடப்பட்டது. பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்த இந்த ஆவணப்படம் நல்ல வரவேற்புடன் பலரின் பாராட்டுகளையும் குவித்திருக்கிறது. இதனுடன் கீழடி அகழாய்வு சார்ந்த பணிகளின் புகைப்படங்களையும் காட்சிக்கு வைக்க,  அதற்கு ஏக ரெஸ்பான்ஸ்!    

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு நினைக்கல. ஆரம்பத்துல கீழடியில் பொருட்களை எப்படி எடுக்குறாங்க... அதுக்கான செய்முறை என்ன... இதுக்குள்ள யாரெல்லாம் ஈடுபட்டிருக்காங்க... அறிக்கைகளை எப்படி தயார் பண்றாங்க... உள்ளிட்ட வெளியே தெரியாத பணிகளை அடிப்படையா வச்சு ஓர் ஆவணப்படம் பண்ணுவோம்னுதான் உள்ளே போனேன். ஆனா, நான் நினைச்சதை பண்ணமுடியல.

ஏன்னா யாரும் பேச முன்வரல. அனுமதி வாங்கிதான் ஆவணப்படம் செய்றேன். இருந்தும் நான் உள்ளே போயிட்டாலே இறுக்கமா மாறிடுவாங்க. எனக்கும் கொஞ்ச நாட்கள் ஒண்ணும் புரியல. விட்டுட்டு வெளியே போகவும் மனசில்ல. தொடர்ச்சியா பண்ணிட்டே இருந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் தொழிலாளர்கள்கிட்ட கேட்டே தெரிஞ்சுகிட்டு வந்தேன். அவங்களும் அவங்களுக்கு தெரிஞ்ச விவரங்களைப் பகிர்ந்தாங்க. இதைத் தவிர்த்து அவங்களுடைய ஊர்க்கதைகள், பூர்வீக விஷயங்கள், குடும்பப் பின்னணி, பொருளாதாரம்னு பேசினேன்.

ஒருகட்டத்துல இவ்வளவு விஷயங்கள் தெரிஞ்ச, அகழாய்வு பணியில் முக்கியத்துவமா இருக்கிற இந்தத் தொழிலாளர்கள் ஏன் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படலனு தோணுச்சு. அந்த இடம்தான் தொழிலாளர்கள் பத்தி ஆவணப்படம் எடுக்க என்னைத் தூண்டியது...’’ என்கிற சரண்ராஜ் சென்னை ஓவியக் கல்லூரியில் சிற்பக்கலை பயின்றவர். ‘‘சொந்த ஊர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பக்கத்துல கரடிப்பட்டினு ஒரு கிராமம். அப்பா வனராஜும், அம்மா கருப்பாயியும் கல் உடைக்கும் தொழிலாளர்கள். அதனால்தானோ என்னவோ எனக்கு தொழிலாளர்கள் சம்பந்தமா பணிகள் செய்யவே ரொம்ப விருப்பமா இருக்கு. அப்படியாகவே அமையவும் செய்யுது.

ஊர்லயே பிபிஏ முடிச்சேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஓவியங்கள் மேல ஈடுபாடு. அதனால, ஓவியக் கல்லூரியில் படிக்கணும்னு ஆசை. ஆனா, சென்னையில் எனக்குத் தெரிஞ்சவங்கனு யாருமில்ல. இங்க எப்படி வந்து படிக்கிறதுனு தெரியல. கல்லூரி முடிச்சதும் மதுரை நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த கரிகாலன் பாப்பாத்தி என்பவரின் டெலி பிலிமில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது. சென்னைக்கு வந்து அவருக்கு உதவி இயக்குநராகவும், கலை இயக்குநராகவும், ஸ்டோரி போர்டு ஆர்ட்டிஸ்டாகவும் பணிகள் செய்தேன். பிறகு அவருடைய உதவியாலேயே நான் ஓவியக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு அமைஞ்சது.

அந்நேரம் தோழர் ஒருவர் மூலம் ஓவியர் சந்ரு சாரின் அறிமுகம் கிடைச்சது. அவர்தான் என்னை சிற்பத் துறையை தேர்ந்தெடுத்து படிக்கச் சொன்னார். அவர் கூட பயணிச்சப்பதான் கலைனா என்ன... அதை எப்படி புரிஞ்சுக்கணும்னு எல்லாமே கத்துக்கிட்டேன். 2013ல் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து 2017ல் வெளியே வந்தேன். அதிலிருந்து தொடர்ந்து கலை சார்ந்த பணிகள்ல இருக்கேன்.
படிக்கும்போதே 2016ம் ஆண்டு கொச்சி ஸ்டூடண்ட் பினாலேவில் பங்கெடுத்தேன். அப்ப மிக்ஸ்டு மீடியத்தில் என் கலைப் படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தினேன்.
நான் ஒவ்வொரு மீடியத்தின் தன்மையையும் புரிஞ்சுகிட்டு எந்த  ஆர்ட் ஃபார்மில் எப்படி கொடுத்தால் நல்லாயிருக்கும்னு பார்த்து செய்வேன். இது பெரிய ப்ராசஸ். அந்த மாதிரி யோசிச்சு செய்றதே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மத்தவங்ககிட்டயும் ரீச் ஆகுது.

கொச்சிக்குப் பிறகு, 2018 கோவா செரெண்டிபிட்டி சர்வதேச கலைத் திருவிழாவுல ஒப்பாரி பாடல்களை வச்சு ஒரு நிர்மாணக் கலை பண்ணினேன். அதாவது, பல மீடியத்தை ஒன்றுதிரட்டி ஒரு விஷயத்தைச் சொல்றது. இதுல இருட்டு அறையில் ஒரு சேர் மட்டும் இருக்கும். அதன்மேல் காமாட்சி விளக்கு தொங்கும். அதைச்சுற்றி ஒப்பாரி பாடல் ஒலிக்கும். இதுக்கு நிறைய வரவேற்பு கிடைச்சது. பிறகு, 2019ல் சென்னை கோத்தே இன்ஸ்டிடியூட்ல கல் உடைக்கிறவங்க பத்தி பண்ணினேன். அங்க கற்சிற்பமா செய்தேன்.

அடுத்து, ஆர்ட்டிஸ்ட் ரியாஸ் கோமு என்பவர் மூலம் 2019ல் இருந்து 2020 வரை கொச்சியில் ரெசிடென்ஸி வொர்க் கிடைச்சது. அங்கே ஓராண்டு காலம் தங்கி போர்ட் கொச்சி, மட்டஞ்சேரி ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தேன். அந்நகரம் உருவாகக் காரணமாக இருந்த, அதன் தொடர்ச்சியா இன்றும் உழைச்சிட்டு இருக்கிற பலதரப்பட்ட தொழிலாளர்களை எனது கலைப் படைப்புகளில் பதிவு செய்தேன்.

இந்நேரம் தொடர்ச்சியாக என்னுடைய கண்காட்சிகளைக் கவனிச்சிட்டு வந்த சென்னை போட்டோ பினாலேயின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பூமா பத்மநாபன், என்னை சென்னை போட்டோ பினாலேயின் மூன்றாவது எடிசனில் கலந்துக்க அழைச்சாங்க. அப்புறம், ப்ரொபோசல் பத்தி கேட்டதும் நான் கீழடி பற்றி பண்ணப் போறேன்னு சொன்னேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்படியா நான் இந்த விஷயத்தை எடுத்துப் பண்ணினேன்...’’ என்கிறவர், தொடர்ந்தார்.

‘‘ஆனா, சூழல் மாறினதால மறுபடியும் என் அடையாளமான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டதா மாறுச்சு. இதிலும் எந்தத் தொழிலாளர்களையும் பேச வைக்கல. அவங்க வேலைகளை மட்டுமே பதிவு செய்திருக்கேன். காரணம், என்கிட்ட பேசின ரெண்டு தொழிலாளர்களை ரெண்டு நாட்களுக்குப் பிறகு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்கனு தெரிஞ்சது. அது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. இதன்பிறகு நான் யாரிடமும் பேசாமல் அவங்க வேலைகளை மட்டுமே பதிவு பண்ணினேன்.

இந்தப் பணியை 2020 ஜூன்ல இருந்து 2021 நவம்பர் வரை எடுத்துக்கிட்டு செய்தேன். தொழிலாளர்களைத் தொடர்ச்சியா பின்தொடர்ந்து அவங்க வேலைகளை ஆவணப்படுத்தினேன். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர்னு மொத்தம் நான்கு சைட். நாலிலுமே அந்தந்த ஊர் சார்ந்தவர்களே தொழிலாளர்களா இருக்காங்க.

இதுல குறைஞ்சது 150 பேர்ல இருந்து 200 பேர் வரை இருப்பாங்க. அதிலும் பெண்களே அதிகம். ஒவ்வொரு சைட்டிலும் நாலஞ்சு பேர் மட்டுமே ஆண்கள். இவங்க எல்லோருமே ரொம்ப நுணுக்கமா வேலைகள் தெரிஞ்சிருக்காங்க. ஏழு ஆண்டுகளா இருக்கிறதால அதுல நிபுணத்துவம் வாய்ந்தவங்களா மாறிட்டாங்க. தினமும் காலையில் 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வேலை செய்றாங்க. இதெல்லாம் பதிவு செய்திருக்கேன்.

ஆனா, இந்த அகழாய்வுப் பணிக்கு அவர்களுக்கான கூலிதான் குறைவுனு நான் வருத்தப்படுறேன். பெண்களுக்கு 360 ரூபாயும், ஆண்களுக்கு 420 ரூபாயும் கொடுக்கிறாங்க. ஆண், பெண் பாகுபாடின்றி ரெண்டு பேருக்கும் ஒரே சம்பளம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அப்புறம், இன்னும் சம்பளத்தொகையை அதிகப்படுத்தித் தரணும்னு என் ஆவணப்படத்தைக் காண வந்திருந்த தமிழக முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் சாரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கேன்.

உறுதியாகப் பண்ணித் தருவதாக சார் சொல்லியிருக்கார். அது இன்னும் சந்தோஷத்தைத் தந்தது...’’ என்கிற சரண்ராஜ், ‘‘இப்போதைக்கு என் அடுத்தகட்ட திட்டமா இந்த ஆவணப்படத்தையும் புகைப்படக் கண்காட்சியையும் மதுரையில் நடத்த முடிவு செய்திருக்கேன். மதுரை மக்களுக்கும், கீழடி மக்களுக்கும் இதைக் கொண்டுசேர்க்கணும்னு விரும்புறேன்...’’ நெகிழ்வாகச் சொல்கிறார் ஆவணப்பட இயக்குநர் சரண்ராஜ்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்