கொள்ளுத்தாத்தா இந்தியன் வங்கி நிறுவனர்... நான் ஏவிஎம் குடும்பத்து மருமகன்... இப்ப நடிகன்!



இந்தியன் வங்கியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் கொள்ளுப் பேரன், ஏவிஎம் குடும்பத்தின் மருமகன், பிரபல சினிமா பைனான்சியரின் மகன், பன்னாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி... என பன்முகம் கொண்டவர் ஆர்யன் ஷாம். சினிமா மீதுள்ள பேஷனால் நடிக்க வந்துள்ளார்.
இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘அந்த நாள்’.போஸ்டர் திகில் கிளப்புதே?
ஆமா. நாங்க எங்க படத்தை அறிமுகம் செய்து வைக்கும்போது ‘இதய பலவீனம் உள்ளவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் படம் பார்க்க வருவதை தவிர்க்கவும்’னுதான் சொன்னோம்; சொல்றோம்.
அதுக்கு காரணம் ‘நரபலி’தான் எங்க படத்தின் கதைக்கரு.இயக்குநர் மிஷ்கின் டைரக்‌ஷன்லதான் அறிமுகமாக இருந்தேன். ஆனா, அது நடக்கல. அந்த வலியிலிருந்து வெளியே வரணும்னு அதைவிட பெரிய படம் பண்ண நினைச்சோம். அப்படி ஆரம்பிச்ச படம்தான் ‘அந்த நாள்’.

பிளாக் மேஜிக் எனும் பில்லிசூனியம் பற்றிய கதை இது. நரபலி என்ற கான்செப்ட் சினிமா இண்டஸ்ட்ரிக்கு புதுசா இருக்கும். ஆடியன்ஸும் சைக்கோ கில்லர் மாதிரியான படங்களைப் பார்த்திருப்பாங்க. ஆனா, இந்த ஜானர்ல படம் வந்திருக்காது.
அப்படியே வந்திருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களே வந்திருக்கும்.இது கற்பனை கன்டன்ட் கிடையாது. மனித சமுதாயத்தில் முன்பு நரபலி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்தபிறகுதான் இந்தக்கதையைக் கையில் எடுத்தோம். கொரியன் படங்கள், ஜப்பானிய படங்களில்கூட இந்த மாதிரியான படம் வந்ததில்ல. கண்டிப்பா புது ஜானர் படம்னு சொல்லலாம்.

இந்தமாதிரி கதையை கையில் எடுக்க காரணம் இயக்குநர் விவீ சொன்ன லைன்தான். அது பிடிச்சிருந்தது. அதோடு என் மனசுக்குள்ள உதிச்ச சில விஷயங்களைச் சொன்னேன். இப்படியாக நானும் இயக்குநரும் சேர்ந்து இந்த ஸ்கிரிப்ட்டை உருவாக்கினோம்.கதை உருவாக்கத்துக்கே ஒரு வருஷம் எடுத்துக்கிட்டோம்.

15ம் நூற்றாண்டிலிருந்து இதற்கான மேற்கோளை எடுத்திருக்கோம். அந்த டைம்ல இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில்கூட ‘நரபலி’ நடந்திருக்கு. இது நாங்க செய்த ஆய்வுல தெரிய வந்தது. ‘நரபலி’ விஷயத்தில் அந்தந்த நாடுகளின் சடங்குகளுக்கு ஏற்ப பண்ணியிருப்பார்கள்.

‘அபோகலிப்ட்டோ’ படத்துல சூரிய கடவுளுக்கு நரபலி கொடுப்பது மாதிரிதான் காட்டியிருப்பாங்க. ஆனா, அது நரபலி கதை கிடையாது. அந்தக் காட்சி படத்தில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வந்திருக்கும். ஆனா, எங்க படம் பேசும் முக்கிய விஷயமே ‘நரபலி’தான். மனித நாகரீகம் ஸ்பேஸ் டூர் வரை வளர்ந்துள்ள இந்த நிலையிலும் ‘நரபலி’ சில இடங்கள்ல நடப்பதாக சொல்லப்படுது.

இதுல ‘நரபலி’ என்ற பெயரில் நடக்கும் சடங்கு, சம்பிரதாயங்கள் மனிதகுலத்திலிருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும்னு சொல்லியிருக்கோம். இந்த இடத்துல 2013ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசாங்கம் நரபலியை தடைசெய்திருக்கு என்பதை சுட்டிக் காட்றேன்.  

‘அந்த நாள்’ ஏவிஎம் நிறுவனம் வழங்குவதாக செய்திகள் வந்ததே?

எங்களுடைய க்ரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. என்னுடைய மனைவி அபர்ணா ஏவி எம் குடும்பத்தைச் சேர்ந்தவர். நாங்கள் படம் தயாரிக்கிறோம் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஏவிஎம் நிறுவனமே தயாரிப்பில் ஒரு அங்கமாக அவர்கள் பேனரில் படத்தை பிரசன்ட் பண்ணுவதாகச் சொல்லி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்கள்.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினி சார் வெளியிட்டார். அதன்பிறகு சென்சார்ல சில பிரச்சனை ஏற்பட்டது.

அந்த நிலையில், எங்கள் படம் ஏவி.எம் பேனர்ல வெளிவருவது சரியானதாக இருக்காது என்று தோன்றியது. ஏவிஎம் நிறுவனம் இதுவரை ஃபேமிலி படங்கள், கமர்ஷியல் படங்களை மட்டுமே தயாரித்துள்ளார்கள். இந்த மாதிரி படத்தை தயாரித்ததில்லை.கதைக்கரு ‘நரபலி’ என்கிற காரணத்தால எங்களுக்கு சென்சார் கிடைக்கல.

பிறகு ரிவைசிங் கமிட்டி போனோம். போர்டு மெம்பரான நடிகை கெளதமி மேடம் படம் பார்த்துட்டு, ‘சொல்ல வந்த விஷயத்தை சரியா சொல்லியிருக்கீங்க’ என்று பாராட்டினார். ஃபைனலா ‘ஏ’ சர்டிபிக்கேட் கிடைச்சது.இதுவும் ஏவிஎம் பேனர்ல வராததற்கு ஒரு காரணம்னு சொல்லலாம். ஏன்னா, அவங்க தயாரிச்ச எல்லா படங்களும் ‘யு’ சர்டிபிக்கேட் படங்கள்.

படத்துல உங்களுக்கு என்ன கேரக்டர்?

ஃபிலிம் டைரக்டரா வர்றேன். ரிகர்சல் தேவைப்படாத கேரக்டர் என்பதால் இயல்பான நடிப்பைக் கொடுக்க முடிஞ்சது. வழக்கமான ரோல்தானேனு நினைக்க முடியாதளவுக்கு என்னுடைய கேரக்டர்ல சில டுவிஸ்ட் இருக்கும்.நாயகிகளா ஆதயா பிரசாத், லீமா பாபு நடிச்சிருக்காங்க. இருவரும் ஃபீல்ட் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்க என்பதால் அவங்களாலும் யதார்த்தமான நடிப்பை வழங்க முடிஞ்சது. இமான் அண்ணாச்சி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், ‘கைதி’ கிஷோர் முக்கியமான ரோல் பண்ணியிருக்காங்க.

ராபர்ட் சற்குணம் மியூசிக். ஏற்கனவே விஜய்சேதுபதி நடிச்ச ‘சங்கத்தமிழன்’ பண்ணியவர். சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். வேல்ராஜ் உதவியாளர். சூர்யா சாரின் 2டி தயாரிச்ச படங்களில் வேலை பார்த்த அனுபவமுள்ளவர். எடிட்டிங் காஸ்ட்ரோ.இயக்குநர் விவீக்கு இது இரண்டாவது படம். ஏற்கனவே ‘13 ம் நம்பர் வீடு’ பண்ணியவர். ஓடிடி தளத்தில் வெளியான அந்தப் படத்துக்கு பெரிய வரவேற்பு இருந்துச்சு. திகில் படங்களை எடுப்பதில் தேர்ந்தவர் என்பதால் இதிலும் வித்தை காட்டியிருக்கிறார்.

ரஜினி, ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டதும் என்ன சொன்னார்?

மறக்க முடியாத சந்திப்பு அது. இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சார், ரஜினி சாரிடம் ‘தம்பிக்கு உங்க வாழ்த்து வேணும்... அதனால நீங்க கண்டிப்பா வாழ்த்தணும்’னு சொன்னார். ரஜினி சாரும் ‘ரியல் ஹீரோ மாதிரி இருக்கீங்க... நல்லா வருவீங்க’னு வாழ்த்தினார்.ரொம்ப சிம்பிளா பழகினார். பெரிய உயரத்துல இருக்கிற அவர் அவ்வளவு எளிமையா இருக்கிறாரே என்ற ஆச்சர்யம் அந்த சந்திப்பு நடந்த பிறகும் என்மனசுல இருந்துகிட்டே இருக்கு.ஏவிஎம் சரவணன் சாரையும் படம் சம்பந்தமா சில ஆலோசனைகளைக் கேட்க சந்திச்சேன். ‘தம்பி, உங்க டிரெண்ட் வேற, எங்க டிரெண்ட் வேற. உங்க ஸ்டைலில் பண்ணுங்க. நல்லா வரும்’னு விஷ் பண்ணினார்.

மிஷ்கின்கிட்ட உங்களுக்கு என்னதான் பிரச்னை?

மிஷ்கின் சார் என்னை ஹீரோவா வெச்சு ஒரு படம் பண்ணுவதா இருந்துச்சு. தயாரிப்பு செலவுக்காக  ஒரு கோடி கொடுத்தேன். சில காரணங்களால் அந்தப் படம் டேக் ஆஃப் ஆகல. அவர் வேற ஒரு ஹீரோவை வெச்சு படம் பண்ணினார். அது எனக்கு மன உளைச்சலா இருந்துச்சு. மீடியாவுல நடந்த விஷயங்களை சொன்னேன்.நீதிமன்றம் சென்றபிறகு எங்களுக்குள் இருந்த பிரச்சனை தீர்ந்தது. எனக்கு சேரவேண்டிய பணத்தை முழுமையா கொடுத்துட்டார்.

அப்ப, ஒரு ரிக்வெஸ்ட் வெச்சார். இந்த இஷ்யூல எனக்கு ‘பேட் நேம் கிரியேட் ஆயிடிச்சு. அதனால, பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டேன் என்பதையும் மீடியா கிட்ட சொல்லிடுங்க’ என்றார். அதன்படி மீடியாவை சந்திச்சு ‘பிராப்ளம் சால்வாயிடுச்சு’னு சொல்லிட்டேன்.சினிமாவுல கொடுத்த பணத்தை திருப்பி  வாங்குவது கஷ்டம். மிஷ்கின் சார் கொடுத்துட்டார். எனக்கு யாரையும் காயப்படுத்தணும்னு எந்த நோக்கமும் இருந்ததில்லை. மீண்டும் மிஷ்கின் சாருடன் படம் பண்ணும் வாய்ப்பு வந்தால் பண்ணுவேன். இப்ப எங்களுக்குள் சுமுக உறவு இருக்கு.

உங்க தாத்தா இந்தியன் வங்கி நிறுவனர். பிசினஸ் குடும்பத்தைச் சேர்ந்த உங்களுக்கு சினிமா ஆர்வம் எப்படி?

என்னுடைய கொள்ளுத் தாத்தா கிருஷ்ணசாமி இந்தியன்வங்கி நிறுவனர். எங்க குடும்பத்தில் வக்கீல், ஜட்ஜ், சார்ட்டட் அக்கவுன்டன்ட்னு வங்கி, நீதித் துறையில் நிறைய பேர் இருக்கிறாங்க. என்னுடைய அப்பா ரகுநந்தனும் சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட். 350 படங்களுக்கும் மேல் பைனானஸ் பண்ணியிருக்கிறார். விஜயகாந்த் சார் நடிச்ச பெரும்பாலான படங்களுக்கு அப்பாதான் பைனான்ஸியர். ‘கேப்டன் பிரபாகரன்’ மாதிரியான ஹிட் படத்துக்கும் பைனான்ஸ் பண்ணியிருக்கிறார்.

நான் லண்டன்ல எம்பிஏ முடிச்சேன். அம்மாவுக்கு நான் சினிமாவுக்கு போறதுல விருப்பம் இல்லை. 9 - 5 ஜாப் மாதிரி டென்ஷன் இல்லாத வேலைல இருக்கணும்னு நெனைச்சார். அது
மட்டுமல்ல, அப்பா சினிமாவுல சந்திச்ச பேட் எக்ஸ்பீரியன்ஸை கூட இருந்து பார்த்தவர்.அம்மா விருப்பப்படி படிப்பு முடிஞ்சதும் லண்டன்ல ஒரு பன்னாட்டு நிறுவனத்துல வேலை பார்த்தேன்.

சென்னை வந்த பிறகும் அதே நிறுவனத்துல வேலையைத் தொடர்ந்தேன். ஆனாலும் எனக்குள் இருந்த சினிமா ஆசை என்னை விடல. வேலைக்கு பிரேக் கொடுத்துட்டு நடிக்க வந்துட்டேன்.
நான் சினிமாவில நடிக்க என் மனைவி அபர்ணா ஃபுல் சப்போர்ட் பண்ணினார். அவர்தான் என்னை மோடிவேட் பண்ணுவார். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார்னு சொல்வாங்க. என்னுடைய போராட்டம், வெற்றிக்குப் பின் என் மனைவி அபர்ணா இருக்காங்க.

எஸ்.ராஜா