தொடரும் சாதனைகள்...



தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற இந்த ஓராண்டுக் காலத்தில் திமுக அரசு செய்த சாதனைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களால் நாள்தோறும் குறிப்பிடப்படுகின்றன. சென்றவாரம் பத்து சாதனைப் பட்டியல்களை வெளியிட்டோம். அதில் இன்னும் சில துறைகளின் சாதனைகள் பார்க்க ஆச்சரியமூட்டுகின்றன. அவை இங்கே...

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

கலைஞர் நகர்ப்புறத் திட்டம், நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட முன்னோடி திட்டங்களை கடந்த ஆண்டிலிருந்து செயல்படுத்துவதன் மூலம் மக்களின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறது நகராட்சி நிர்வாகத் துறை. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பில் உள்ள இடைவெளியை குறைக்கும் பொருட்டு முன்னெடுத்த திட்டம்தான் கலைஞர் நகர்ப்புறத் திட்டம். இதற்காக அரசு ரூ.1000 கோடியை ஒதுக்கியது.

இதன்வழியே சமுதாயக் கூடங்கள், அறிவுசார் மையம், நூலகங்கள், சந்தைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல், குடிநீர் வசதிப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட திட்டப் பணிகளைத் தொடங்கி செய்து வருகிறது. இதனுடன் நமக்கு நாமே திட்டம் மூலம் நீர்நிலைகளைச் சீரமைத்தல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயன்படும் கட்டடங்கள் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்காக நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழைகளை உயர்த்தும் நோக்கில் ரூ.100 கோடி மதிப்பீட்டில்  செயல்படுத்தப்படுகிறது நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்.

மின்சாரத் துறை

மின்சாரத் துறையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர். ஆனால், ஓராண்டு காலத்திற்குள்ளாகவே இந்த ஒரு லட்சம் மின் இணைப்பையும் வழங்கி சாதித்திருக்கிறது திமுக அரசு. இதுமட்டுமல்ல. அதிக எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியதும் இதுவே முதல்முறை என்கின்றனர்.

சமூக நலத் துறை

திமுக அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்றபோது கொரோனாவால் பலர் இறந்தனர். அப்போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகையாக உடனடியாக ரூபாய் மூன்று லட்சம் வழங்கப்படும் என்றும், அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களையும், பட்டப்படிப்பு வரையிலான செலவுகளையும் அரசே ஏற்கும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டார் முதல்வர்.

இதனுடன் ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் உறவினர் இருந்தால் குழந்தையைப் பராமரிக்கும் செலவாக ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாய் என்று அந்தக் குழந்தை 18 வயதாகும் வரை வழங்கப்படும் என்றார்.

இவையெல்லாம் சமூக நலத்துறையின் கீழ் வருகிறது. இதனை அந்தத் துறை அத்துணை சிரத்தையுடன் கவனமாகச் செய்து சாதித்து வருகிறது.
இதன்பிறகு, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையை வெளியிட்டது சமூகநலத் துறை. தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதும், உரிமைகள் தடையின்றி கிடைப்பதும், அவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறுவதும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை குழந்தைகள் செயற்பாட்டாளர்கள் வரவேற்கின்றனர்.

பால்வளம்

தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆவின்பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு என முதல்வர் தன்னுடைய முதல் கோப்பில் கையெழுத்திட்டதிலிருந்து தொடங்குகிறது பால்
வளத்துறையில் முன்னெடுக்கப்படும் சாதனைப் பணிகள். கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் 100 மெட்ரிக் டன் கால்நடைத் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என்பதும், முதல்முறையாக உறுப்பினர்களுக்கான கால்நடை பராமரிப்பு குறித்த குரல் ஒலி, குறுஞ்செய்தி வாயிலான இலவச சேவை வழங்கப்படும் என்பதும் குறிப்பிட்ட சில பணிகள். இந்த ஆண்டு பல இடங்களில் பால் பண்ணைகள், பால் பொருட்கள் உற்பத்தி பண்ணும் ஆலைகள் உருவாக்கம் உள்ளிட்டவை இத்துறை செயல்படும் வேகத்தை காட்டுகின்றன.
கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை

கடந்த ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்கான கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில், சென்னை கொளத்தூரில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் உள்ளிட்ட 28 திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் இப்போது 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் கால்நடை மருத்துவ சேவைகளுக்காக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 16 அறிவிப்புகள் கால்நடை பராமரிப்புத்  துறையினால் வெளியிடப்பட்டுள்ளன.

சட்டத்துறை

சட்டத்துறையில் கடந்த 2021ல் சட்டக் கல்லூரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்தாண்டு, குறிப்பிட்ட அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சட்டக்கல்லூரி நூலகங்களுக்கும் சட்டப் புத்தகங்கள் மற்றும் ஏனைய இதழ்கள் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும் என்றும், புதிய சட்டப் பட்டதாரிகளுக்கு தன்னார்வ பயிற்சித் திட்டம் ரூ.40.80 லட்சம் செலவில் தொடங்கப்
படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்ட மாணவர்கள் பலரும் பயனடைவார்கள்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

கடந்த ஆண்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் 30 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, பொதுமக்கள் வாங்கத்தக்க அளவில் வீடுகள் வழங்கிடும் அரசின் முயற்சியை நிறைவேற்றும் நோக்கில் சுயநிதித் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்பதும், பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் குறைந்த வருவாய், மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குபவர்களின் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு தவணை முறை திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தும் என்பதும் பெரிதும் வரவேற்பை பெற்றன.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

அனைத்து துறைகளுக்கும் முதுகெலும்பு என்றால் அது வருவாய் நிர்வாகத் துறைதான். ஆனால், மழை மற்றும் வெள்ளக்காலங்களில்தான் இத்துறையின் செயல்பாடுகள் பெரிதும் பேசப்படும். ஏனெனில், பேரிடர் மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் அப்படியானது. பட்டா வழங்குதல், சான்றிதழ் பெறுதல் எல்லாமே இத்துறையின் கீழ்தான் வருகின்றன.

ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் மின்னணு மாவட்ட திட்டம் வாயிலாக 28 லட்சத்து 74 ஆயிரத்து 868 சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர். துறை சார்ந்த நடவடிக்கைகளை
உடனுக்குடன் எடுத்துள்ளனர். இப்போதைய மானியக் கோரிக்கையில் 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மூன்று லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார் இத்துறையின் அமைச்சர்.

பிகே