போதையால் தடுமாறும் இந்தியா!
சர்வதேச போதைப்பொருள் உபயோகத்திற்கு எதிரான நாள்: ஜூன் 26
போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்துப் படம் எடுத்தால் கோடி கோடியாய் வசூலாவது ஒருவகை எதார்த்தம் என்றால் போதைப்பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிவது தொடர்பான செய்திகள் அன்றாடம் நாளிதழ்களில் வெளியாகி பீதியைக் கிளப்புவது இன்னொரு எதார்த்தம். இன்று பள்ளிச் சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பலரும் கஞ்சா முதல் எல்எஸ்டி எனப்படும் சிந்தடிக் ட்ரக் வரை பலவிதமான போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்று சொன்னால் பலரும் அதிர்ச்சியடையக்கூடும். ஆனால், அதுதான் கசப்பான உண்மை.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பத்து பேர் போதைப் பழக்கத்தால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறது ஒரு பகீர் புள்ளிவிவரம். போதை என்பது ஆல்கஹால் மட்டும் இல்லை; புகையிலை முதல் கஞ்சா, ஹெராயின் வரை உள்ள அனைத்துமே போதைப் பொருட்கள்தான். இது மட்டுமல்ல; சில இருமல் மருந்துகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தின்னர் போன்றவற்றையும் போதைப்பொருளாகப் பயன்படுத்துகின்றனர் சிலர். கிராமங்களைவிட நகரங்களிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ளனர்.
தவிர, இந்தியாவில் உள்ள 75 சதவிகிதக் குடும்பங்களில் யாராவது ஒருவரேனும் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கிறார் என்கின்றன புள்ளிவிவரங்கள்.
*போதைகள் பலவிதம்
போதைப் பழக்கம் என்று பொதுவாக நாம் சொன்னாலும் இதில் பலவகை உள்ளன. சிலவகை போதைப்பொருட்களை விற்பனை செய்ய அரசே அனுமதி அளித்துள்ளது. உதாரணமாக, சிகரெட், மதுபானங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். இதைத் தவிர மருத்துவக் காரணங்களுக்காக மெத்தடோன் (Methadone), ஆக்ஸிகோடோன் (Oxycodone), சோல்பிடெம் (Zolpidem) போன்ற மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை சிலர் போதைப்பொருளாக சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர கஞ்சா, ஹெராயின், எல்.எஸ்.டி உட்பட பலவகையான போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றன.
 டிப்ரசண்ட் (Depressant): ஆல்கஹால் நிறைந்த பானங்களையும் சால்வெண்ட்ஸ் எனப்படும் சில திரவங்களையும் டிப்ரசண்ட் என்கிறார்கள். மூளை செல்களைக் கட்டுப்படுத்தி மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. ஹல்லூசினேஷன்கள்: இல்லாததை இருப்பது போல் காட்டுவது ஹல்லூசினேஷன் எனப்படும். நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஒலிகள் ஆகியவற்றில் குழப்பங்களை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ள போதைப்பொருட்கள் இவை. கானபிஸ் (Cannabis), எல்எஸ்டி (LSD) போன்றவை இந்த வகையில் அடங்கும்.
 வலி நிவாரணிகள்: நரம்பு மண்டலத்தை மட்டுப்படுத்தி வலியை, உணர்வுகளை உணரச்செய்வதைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் இவை. மருத்துவக் காரணங்களுக்காக இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்பிரின் போன்ற மருந்துகளும் ஹெராயின் போன்ற லாகிரி வஸ்துகளும் இந்தப்பிரிவில்தான் வருகின்றன.செயலூக்கிகள் (Performance enhancer): நம் தசைகளின் ஊக்கத்துக்கு உதவும் மருந்துகள் இந்தவகையைச் சேர்ந்தவை. குறிப்பாக, அனபாலிக் ஸ்டீராய்டு மருந்துகள். இவையும் மருத்துவக் காரணங்களுக்காகத்தான் அதிகம் பயன்படுத்தபடுகின்றன. ஆனால், சிலர் சட்டத்துக்குப் புறம்பாக மருத்துவக் காரணங்களுக்கு வெளியே போதைக்காகப் பயன்படுத்துகின்றன.
 தூண்டிகள் (Stimulants): மூளையில் உள்ள செல்களைத் தற்காலிகமாகத் தூண்டி செயல்பட வைக்கும் திறனுடையவை. புகையிலை, காபின் மற்றும் எக்ஸ்டசி போன்ற போதைப் பொருட்கள் இந்தவகையைச் சேர்ந்தவை.
 *எது போதைப்பொருள்?
மருத்துவர்கள் பயன்படுத்தும் போதை தரும் மருந்தையோ அல்லது அதில் உள்ள போதை தரும் அம்சத்தை மட்டும் பிரித்தெடுத்து அதை போதைக்காக மட்டுமே பயன்படுத்துவதைத்தான் அப்யூஸ் என்கிறோம். ட்ரக் அப்யூஸ் என்பது எல்லாவகை போதைப்பொருளையும் பயன்படுத்துவதுதான். இந்த போதைப்பொருளைத் தொடர்ந்து ஒருவர் பயன்படுத்தும்போது அவர் போதையைச் சார்ந்திருத்தல் (Drug Dependant) என்ற நிலைக்குச் செல்கிறார். இதன் தொடர்ச்சியான அடுத்த நிலைதான் போதைக்கு அடிமையாதல் (Drug addiction).
*போதை அடிமைகள்!
தமிழகத்தில் மதுவுக்கு அடிமையான கூட்டத்தைப்போலவே பல்வேறு வகையான போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புகையிலையையும், ஆல்கஹாலையும் போதைப்பழக்கத்தின் நுழைவாயில் என்பார்கள். ஒருவர் இந்தப் பழக்கங்களுக்குள் நுழைந்துவிட்டால் மெல்ல மெல்ல ஹெராயின், கஞ்சா, எல்எஸ்டி என ஒவ்வொரு போதைப்பொருளாகப் பயன்படுத்தும் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஹெராயின் உள்ளிட்ட டிசைனர் ட்ரக்ஸ்களுக்கு இன்றைய இளைய தலைமுறை நேரடியாகவே அடிமையாகி இருக்கிறது என்பதுதான் கொடுமை.
இவற்றின் விலை தங்கத்தின் விலையைவிட அதிகம் என்பதால் வசதியான வீட்டுப்பிள்ளைகளே அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் வார இறுதி பார்ட்டிகளில் இந்த டிஸைனர் ட்ரக்ஸ்களை ஆண், பெண் பேதமின்றி பயன்படுத்துகின்றனர். இதனால் செக்ஸுவல் அப்யூஸ் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
போதைக்கு அடிமையானவர்கள் போதைப்பழக்கத்துக்காக எதையும் செய்யும் நிலைக்குச் செல்வார்கள். பொய் சொல்வது, திருடுவது, வன்முறையில் ஈடுபடுவது என குற்றச்செயல்களில்கூட தயங்காமல் இறங்குவார்கள்.போதைக்கு அடிமையாவது என்பது நம்மையும் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும். முதன்முறை பயன்படுத்தும்போது பெரும்பாலானவர்களுக்கு பெரிய இன்பம் இருக்காது. வித்தியாசமான அனுபவமாக மட்டுமே இருக்கும். தொடர்ந்து இதைப் பயன்படுத்தும்போது மனமும் உடலும் மெல்ல இதற்கு அடிமையாகின்றன.
பிறகு இது இல்லாவிட்டால் இன்பமே இல்லை என்ற நிலைக்கு உடல் செல்கிறது. ஒருவர் தொடர்ந்து ஒரு மாதம் சிகரெட் பிடித்தால் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிறார் என்றால் தொடர்ந்து 20 நாட்கள் குடிப்பவர் குடிக்கு அடிமையாகிறார். ஆனால், இதுவே ஹெராயின், கஞ்சா போன்ற போதை மற்றும் லாகிரி வஸ்துகள் என்றால் பத்தே நாட்களில் அடிமையாகிவிடுவார்.
*வித்ட்ராயல் அறிகுறிகள்!
போதைப் பழக்கத்தை நிறுத்தும்போது ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்புகளை வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ் (Withdrawal symptoms) என்பார்கள். அந்தப் பொருளை உடனே நுகரவேண்டும் என்ற ஆர்வம் தோன்றும், உடலெங்கும் நடுக்கம் ஏற்படும். பதற்றமும், கோபமும், எரிச்சலும் ஏற்படும். எதிலும் ஆர்வம் இன்மை, கவனச்சிதறல் போன்றவை ஏற்படும். கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர் போன்ற டிசைனர் ட்ரக்ஸ்களுக்கு அடிமையானவர்களுக்கு இந்த வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ் மிகவும் தீவிரமாக இருக்கும். கடுமையான உடல் வலி, குடலே வெளிவந்துவிடுவதைப் போன்ற வாந்தி, தலைவலி போன்றவை தீவிரமாக இருக்கும்.
*பாதை மாறுவோம்!
இன்று போதை அடிமைகள் மறுவாழ்வு மையங்கள் நாள் தோறும் பெருகிவருகின்றன. போதை அடிமைகள் பெருகிவருவதன் சாட்சி இது. அரசின் அனுமதி பெற்ற போதை அடிமைகள் மறுவாழ்வு மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் முறையான சிகிச்சை பெற்றால் போதைக்கு அடிமையானவர்கள் மறுவாழ்வுக்குத் திரும்பலாம். போதை அடிமைகளின் மறுவாழ்வுக்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
மாலை நேரம் அல்லது அவர்கள் தினசரி போதைப்பொருளைப் பயன்படுத்தும் நேரம் வந்தால் அவர்கள் கடுமையான மன உளைச்சலையும், உடல் பாதிப்பையும் அடைவார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும் இதைப் புரிந்துகொண்டு ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல் அவர்களைக் கவனிக்க வேண்டும். ஓரளவு உடலும் மனமும் தேறி வரும்வரை அவர்களை கிண்டல் செய்வது, திட்டுவது, அவர்கள் மனம் வெறுக்கும்படி நடந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இளங்கோ கிருஷ்ணன்
|