அக்னிபத் A to Z



அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரயில்கள் கொளுத்தப்படுகின்றன.முப்படைகளில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபத்துக்கு இளைஞர்கள் மத்தியில் ஏன் இந்த எதிர்ப்பு?இந்திய ராணுவத்தில் நிரந்தர சேவை, குறுகிய கால சேவை ஆகிய 2 பிரிவுகளின்கீழ் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குறுகிய கால சேவையில் சேருபவர்கள் 10 முதல் 14 ஆண்டுகள் வரை பணியில் நீடிக்கலாம். இதுவும் நிரந்தரப் பணிதான். இவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம், ஓய்வுக்குப் பிறகான ராணுவப் பலன்கள் என அனைத்தும் கிடைக்கும்.

நடப்பு நிதியாண்டுக்கான (2022 - 23) பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5,25,166 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ஓய்வூதியத்துக்காக மட்டும் ரூ.1,19,696 லட்சம் கோடியை ராணுவம் செலவழிக்கிறது. அதாவது, நான்கில் ஒரு பகுதி ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. ராணுவ வீரா்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக ரூ.2,33,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதர தொகையைக் கொண்டே தளவாடங்கள் வாங்குவது உள்ளிட்ட ராணுவத்துக்கான பிற செலவுகள் செய்யப்படுகிறது. எனவே, ராணுவத்தில் தேவையில்லாத செலவைக் குறைக்க மத்திய பாதுகாப்புத்துறை, அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அக்னிபத் திட்டம் என்றால் என்ன?

‘Tour Of Duty’ என்ற புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வித் தகுதியே, அக்னி வீரர்களுக்கும் பொருந்தும். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும்.

இவர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40,000 என மாதாந்திர ஊதியமும், இதனுடன் சேர்த்து இதர படிகளும் வழங்கப்படும். ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்புத் தொகையாக பிடிக்கப்படும். மீதமுள்ள 70 சதவீதம் மட்டும் வழங்கப்படும். வீரர்களிடம் பிடித்தம் செய்யப்படும் அதே அளவிலான பங்களிப்புத் தொகையை மத்திய அரசு தனது பங்களிப்பாகச் செலுத்தும். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்  தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் பணப்பலன் வீரர்களுக்கு வழங்கப்படும். இதற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

4 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு நிரந்தரப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களில் 25 சதவீத அக்னி வீரர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுவர். எஞ்சிய 75 சதவீத வீரர்களுக்கு சேவா நிதி வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவர். ஆக, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னும் பணி நிரந்தரமில்லை... மீண்டும் வேலையில்லாப் பட்டதாரியாக நிற்கவேண்டியிருக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.சமூக ஆய்வாளர்களோ, இத்திட்டம் ஏற்கனவே மேலை நாடுகளில் உள்ளவைதான்... அங்கு குறுகிய காலம் ராணுவ சேவை செய்த இளைஞர்கள் பிறகு வேலையின்றி சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்... இதேநிலை இந்தியாவிலும் ஏற்படும் என அச்சம் தெரிவிக்
கின்றனர்.

நிரஞ்சனா