இறந்த அப்பா என்கூட பேசறதா தோணின கணத்துல இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்!டாம் கேர்ள் லுக், பாப் கட்டிங் ஹேர் ஸ்டைல், ஜீனியஸ் கண்ணாடி, சுற்றிலும் பிணங்கள், அதில் அமைதியாக அமர்ந்து சாப்பிடும் அமலா பால்... என ‘கடாவர்’ பட போஸ்டரே ஆயிரம் கேள்விகளை ஏற்படுத்துகின்றன. இங்கே ‘குட்டி ஸ்டோரி’ கொடுத்துவிட்டு அப்படியே மலையாளம், தெலுங்கு, இந்தி என பிஸியாகிட்டீங்களே நியாயமா?

‘ஆடை’ படத்துக்குப் பிறகு முழுமையா நடிக்கக் கூடிய கதைக்காகக் காத்திருந்தேன். நிறைய கதைகள் கூட கேட்டுட்டு இருந்தேன். எனக்கு மொழி ஒரு விஷயம் இல்லை. கதையிலே நான் யார்... இதிலே நான் இம்ப்ரஸ் ஆகிட்டா நிச்சயம் அது 15 நிமிஷ படமானாலும் ஓகே சொல்லிடுவேன். அதனால்தான் ‘குட்டி ஸ்டோரி’, ‘பிட்ட காதலு’ மாதிரியான ஆந்தாலஜி படங்கள் கூட நடிச்சேன்.

இப்ப வாழ்க்கை எப்படி இருக்கு?

சந்தோஷமா இருக்கு, இருக்கேன். அமைதியா, நிம்மதியா இருக்கேன். நான் என்னை நேசிக்கிறேன். சுதந்திரமா முடிவுகள் எடுக்கறேன். என்னைப்பத்தி நிறைய யோசிக்கிறேன். சின்ன வயசிலே இருந்தே என்னுடைய கனவு சினிமாதான். அதிலே எனக்குன்னு ஒரு தனித்துவத்தை உருவாக்கியிருக்கேன்.எத்தனையோ தடைகள், பிரச்னைகள், சர்ச்சைகள்... அதற்கு இடையிலேயும் எப்படி படங்கள், வெப் சீரீஸ்கள் கொடுக்க முடிஞ்சது?அத்தனை போராட்டங்களும், பிரச்னைகளும், சர்ச்சைகளும் இந்த நடிப்பு, சினிமா மேலே இருந்த ஆசையாலதானே. அதை விட்டுட்டு என் பிரச்னைகளை மட்டுமே நான் பார்த்துட்டு இருந்தா எப்படி நான் நேசிக்கற சினிமாவிலே எனக்கான இடத்தை தக்க வெச்சுக்க முடியும். எத்தனை தடைகள் இருந்தாலும் நடிப்பை விட மாட்டேன். அதனால்தான் என் பயணம் எங்கேயும் நிற்கல.

‘கடாவர்’ பெயர்க்காரணம் என்ன?

‘ஆடை’ கதைக்கு அப்படி ஒரு லுக்ல போஸ்டர், அப்படியான கவர்ச்சி தேவைப்பட்டது. இந்தப் படத்துக்கு முழுக்கவே இந்தலுக்.  இந்தப் படத்திலே என்னை பேன்ட் ஷர்ட்ல மட்டும்தான் பார்க்க முடியும். எனக்குத் தெரிஞ்சு அதீத கவர்ச்சி காட்டினாலும் ஆபாசம்னு சொல்ல முடியாத அளவுக்கு ‘ஆடை’ பட லுக் அமைஞ்சது. அதேபோல ஒரு டாம் கேர்ள் கேரக்டர் செய்தாலும் லுக் செட் ஆனதுதான் ரொம்ப ஸ்பெஷலா உணர்றேன்.

சடலம், உயிரற்ற உடலைத்தான் ‘கடாவர்’னு (Cadaver) சொல்வோம். ஃபாரன்சிக் டிபார்ட்மெண்ட்ல இது முக்கியமான வார்த்தை. படத்தினுடைய தீம் ஃபாரன்சிக் கான்செப்ட்தான். நிறைய உண்மைச் சம்பவங்களை அடிப்படையா வெச்சுதான் இந்தக் கதை உருவாகியிருக்கு. எங்கே இந்தக் கதை உங்களை இம்ப்ரஸ் செய்தது? இயக்குநர் அனூப் பனிகர் பற்றி சொல்லுங்க?
இந்தக் கதை எந்த அளவுக்கு அனூப் பனிகருக்கு முக்கியமா இருந்திருந்தா அவர் 2016ல இருந்து 2022 வரை வெயிட் செய்திருப்பார்..? என்கிட்ட கதை சொல்லிட்டார். அப்ப அந்த சூழல்ல நான் நடிச்சிட்டு இருந்த படங்கள்... ‘கடாவர்’ கதையிலே என்னை ஏத்துக்குவாங்களா என்கிற கேள்வி... எல்லாம் சேர்ந்து நான் ஓகே சொல்லல.

ஹீரோக்கள் கிட்டே கொண்டு போனால் கதையிலே மாற்றங்கள் செய்யச் சொல்லிக் கேட்டிருக்காங்க. மேலும் இந்தக் கதை அவ்வளவு கவனமா நடிக்க வேண்டிய கதை. அதனால் எனக்கும் தயக்கம். ஆனா, அனூப் ‘ஆடை’ படத்துக்கு அப்பறம் மறுபடியும் என் கிட்டேயே வந்தார். நான் இடையிலே சில புராஜெக்ட்கள் கூட நடிச்சு வெளியாகிடுச்சு. ஆனால், அனூப் டெடிகேஷன்... சான்சே இல்லை.

இந்தக் கதை எழுதினது அபிலாஷ் பிள்ளை. என் அப்பா 2020லே உடம்பு சரியில்லாம படுத்தவர், 2021ல் இறந்துட்டார். ஒரு கட்டத்திலே அப்பாவுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை.
அப்பாகிட்ட கேட்க, பேச வேண்டியது நிறைய இருந்துச்சு. ஆனால், அவர் என்னை விட்டு தூரமா போயிட்டு இருந்தார். நினைக்கும்போது உடல் அளவிலும், மனசளவிலும் உடைஞ்சிட்டேன். ஒரு கட்டத்திலே அப்பாவுடைய ஆத்மா என் கூட பேசுற மாதிரியெல்லாம் தோண ஆரம்பிச்சிடுச்சு.

அப்பதான் அந்த உடல், ஆத்மா இதெல்லாம் சேர்ந்து ஏன் ‘கடாவர்’ படத்தை நாமே செய்யக் கூடாதுன்னு தோணுச்சு.என் வாழ்க்கையினுடைய அங்கமா ‘கடாவர்’ மாறிப்போன காரணத்தாலதான் இந்தக் கதைக்குள்ள திரும்ப நான் வந்தேன். டாக்டர் பத்ரா... கேரக்டர் பத்தி சொல்லுங்க?

சீனியர் போலீஸ் சர்ஜிக்கல் ஆபீசர். பக்கா இன்வெஸ்டிகேஷன் ஃபாரன்சிக் கதை. என்னைச் சுத்தி ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவுமே ஒரு பிணவறை செட்தான் இருக்கும். டாக்டர் பத்ரா செம சேலஞ்சிங்கான கேரக்டர். படு புத்திசாலி. கொஞ்சம் இறுக்கமான பொண்ணு. பயங்கர தைரியசாலி. என் லைஃப்ல ரொம்ப முக்கியமான படம்.தயாரிப்பாளர் அமலா பாலா... படத்தின் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க?

நான் நடிக்கற படத்தை மத்தவங்க தயாரிக்க முன்வரும் போது, ஏன் நான் தயாரிக்கக் கூடாது? அந்தக் கேள்விதான் ‘கடாவர்’ படத்தை என்னையே தயாரிக்க வைச்சது.
ஆக்ச்சுவலி நான் இந்தப் படம் மூலமா தயாரிப்பாளரானது ரொம்ப சந்தோஷம். ஆனால், இந்தப் படத்துக்கு முன்னாடி வரைக்கும் கூட நான் ஒரு தயாரிப்பாளர் ஆவேன்னு நினைக்கவே இல்ல. டைரக்டர் ஆசை கூட இருக்கு, அப்பப்போ கதைகள் கூட யோசிப்பேன்.

அதுல்யா, ரித்விகா, ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ், ஹரீஷ் உத்தமன், ஆதித் அருண், ‘ராட்சசன்’ பட டீச்சர் வினோத் சாகர்... இப்படி படம் முழுக்க நல்லா நடிக்கக் கூடிய நடிகர்கள் நல்ல நல்ல கேரக்டர்கள்ல இருக்காங்க. ஒவ்வொருத்தர் கேரக்டரும் கடந்து போகவே முடியாத அளவுக்கு மனசிலே நிற்கும். படத்துக்குக் கதை அபிலாஷ் பிள்ளை. ‘டிமான்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’… உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அரவிந்த் சிங் இந்தப் படத்துக்கும்  சினிமாட்டோகிராபி செய்திருக்கார். ரஞ்சின் ராஜ் பேக்
ரவுண்ட் ஸ்கோர் படத்துக்கு இன்னொரு ஸ்பெஷல்.

சான் லோகேஷ் எடிட்டர், சிங் சினிமா சச்சின் ஆடியோ மிக்ஸிங் செய்திருக்கார். ஆர்ட் டைரக்டர்தான் படத்தினுடைய இன்னொரு முகம்னு சொல்லணும். ஒரு ஃபுல் மார்ச்சுவரியவே செட்டா போட்டார். சிங்கிள் வுமன்... இன்னைக்கு இந்த வார்த்தையே ஒரு ஜட்ஜ்மெண்டுக்குள்ள போகுதே... இதை எப்படிப் பார்க்கறீங்க?

எல்லாருக்குமே விதவிதமான பிரச்னைகள் இருக்கு. இறுக்கங்கள் இருக்கு. அதை உடைச்சு வெளியே வரணும்னு யாரும் பெரிதா யோசிக்கறதே இல்லை. அதை நினைச்சு நினைச்சு தன்னையே தொலைச்சு வாழ்ந்திட்டு இருக்கோம். ஒருசிலர் அந்தத் தடையை உடைச்சு தனியா ஒரு பாதையை தேர்வு செய்யறதை ஒருவேளை ஏத்துக்க முடியாம அப்படி ஜட்ஜ் பண்றாங்களோன்னு தோணும்.

நான் எதிர்மறை கருத்துகள், நெகட்டிவ் விமர்சனங்கள் ஆரோக்கியமானதா இருந்தா மட்டும்தான் ஏத்துக்குவேன். இல்லைன்னா குறைஞ்சபட்சம் பார்க்கக் கூட மாட்டேன்.
ஒவ்வொருத்தருடைய கஷ்டங்களை அவங்க இடத்திலே போய் பார்த்தாதான் புரியும். நினைச்சு நினைச்சு மத்தவங்களுக்கு கஷ்டம் கொடுத்து நம்மளையும் கஷ்டப்படுத்திக்கிட்டு ஏன் வாழணும். ஒரு வாழ்க்கை. சுதந்திரமா, சந்தோஷமா வாழலாமே. பல தடைகளைக் கடந்து நிற்கும் அமலா பால் அனுபவம் மூலமா கத்துக்கிட்ட பாடம் என்ன?

என் அனுபவங்களை ஆலோசனையா சொல்ற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆளு இல்லை. ஆனால், சக மனுஷியா சில விஷயங்களை ஷேர் பண்ணிக்க விரும்பறேன். நான் என்னை எந்த அளவுக்கு ரசிச்சேனோ, எந்த அளவுக்கு நான் அழகுன்னு யோசிச்சு என்னை விரும்பினேனோ அதனுடைய வெளிப்பாடுதான் சினிமா ஆசை. ஆனால், அந்தக் கனவு நிறைவேறின உடனேயே என்னை நான் விரும்பறதை நிறுத்திட்டேன். வேற வேற பிரச்னைகளை எனக்குள்ள ஏத்திக்கிட்டேன் அல்லது யாருக்காகவோ என்னையே தொலைச்சேன்.

நான் மட்டும் இல்லை, நிறைய பெண்கள் இந்தத் தவறை செய்யறோம். ஒவ்வொருத்தரும் நிறைய கனவுகள், ஆசைகள்னு எவ்வளவோ முயற்சி செய்து அந்த இடத்தை அடையறோம். அந்த அடையாளம், நினைச்ச இடம் கிடைச்ச உடனேயே  நம்மை விரும்பறதை நாமே நிறுத்திடுறோம். உங்களை நீங்க முதல்ல விரும்புங்க... நிச்சயம் உங்களைச் சுத்தி இருக்கற
வங்களும் நல்லா இருப்பாங்க.

ஷாலினி நியூட்டன்