சிறுகதை - தென்னையப் பெத்தா எளநீரு



‘‘டாடி, ரெடியா?’’ என்று கேட்டபடி மகன் இவனுடைய அறைக்குள்ளே பிரவேசித்தபோது, ‘‘எதுக்குடா ரெடியாண்ற?’’ என்று இவன் புருவங்களை உயர்த்தினான்.
‘‘டாடி, நீங்க நெஜம்மாவே மறந்துட்டீங்களா, இல்ல சும்மா டிராமா போடறீங்களான்னு தெரியல...’’ என்று அதிருப்தியடைந்தான் அருமை மகன். “இன்னிக்கி ஒங்களோட முதியோர் இல்லத்துக்குப் போக வேண்டிய நாள்னு போன வாரமே சொன்னேன்ல?”

“என்னோட முதியோர் இல்லமா! முதியோர் இல்லம் எதுவும் நா நடத்தலியேடா!”“இந்த எடக்குப் பேச்சையெல்லாம் விடுங்க டாடி. சீக்கிரம் ரெடியாகுங்க. பத்து ட்டூ பதினொண்ணு நல்ல நேரம்...”“பெத்த அப்பன முதியோர் இல்லத்ல சேக்கறதுக்கு நல்ல நேரம் என்ன கெட்ட நேரம் என்னடா!”“சரி டாடி... இப்டியெல்லாம் பஞ்ச் டயலாக் எடுத்து வுடாதீங்க. அப்புறம் நா எமோஷனலாயிருவேன். ஸூட் கேஸ பேக் பண்ணீங்களா, இன்னும் இல்லையா?”

“பேக் பண்றேன் மகனே... ஒங்க அம்மா இருந்திருந்தா இப்டியெல்லாம் நடக்குமாடா!”
“மம்மி இருக்கும்போதே நாங்க இத ப்ளான் பண்ணிட்டோம் டாடி. இந்த மேட்டர ஒங்கட்ட அப்ப நாங்க சொல்லல. ஒங்க மருமக அப்ப என்ன சொன்னா தெரியுமா? கேட்டா நீங்க எமோஷனலாயிருவீங்க...”“சொல்லேன், நா என்ன ஆகறேன்னு பாத்துருவோம்...”“ஒங்க மருமக என்ன சொன்னான்னா, ஒங்க மம்மியையும் டாடியையும் ஒரே ஓல்ட் ஏஜ் ஹோம்ல சேப்போங்க... தனித்தனி ஹோம்ல சேத்து, வயசான தம்பதியப் பிரிச்சி வக்கிற பாவச் செயல நாம செய்யக்கூடாதுங்கன்னா...”

“ஆஹா, மேட் ஃபார் ஈச் அதர் ஜோடிடா நீங்க!”
“ஆனா, அதுக்குள்ள மம்மி அவசரப்பட்டுப் போய்ட்டாங்க...”
“அவ குடுத்து வச்சவ, போய்ட்டா. பரவாயில்லடா, இதுக்கெல்லாம் வருத்தப்படாத. கண்ணத் தொடச்சிக்க...”

“சரி டாடி, இப்டியே நாம வெட்டி அரட்ட அடிச்சிட்டிருந்தா நல்ல நேரம் போயிரும்...”“கொழந்தைங்கட்ட சொல்லலியேடா, அதுங்கட்ட சொல்லிட்டுக் கௌம்பறேனேடா...”“இன்னிக்கி ஸண்டே, அதுங்க ரெண்டும் அதுங்க மம்மியோட மார்னிங் ஷோ சினிமாக்குப் போயிருக்குங்க டாடி. சினிமா முடிஞ்சி, வெளிய லஞ்ச் சாப்ட்டுட்டுத்தான் எல்லாரும் வருவாங்க. முதியோர் இல்லத்ல ஒங்கள அட்மிட் பண்ணிட்டு, நா போய் என்னோட ஃபேமிலியோட லஞ்ச்ல ஜாய்ன் பண்ணணும்...”

“அப்ப, நா ஒன்னோட ஃபேமிலி இல்லியா மகனே?”

“ஸென்ட்டிமென்ட்ஸுக்கு இது நேரமில்ல டாடி. ஒங்களுக்கு லஞ்ச் அந்த முதியோர் இல்லத்ல. ஏற்கனவே எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சி...”

“முன்யோசனையோட செயல்பட்டிருக்க. ஆனாலும், எனக்கொரு கடேசி ஆசை மகனே. என்னோட பேரக் கொழந்தைங்களோட இன்னிக்கி ராத்திரி டின்னர் சாப்ட்டுட்டு, நாளக்கிக் காலைல வீட்டக் காலி பண்றேனே...”

“புரியாமப் பேசாதீங்க டாடி... இன்னிக்கிக் காலைல ஒங்கள அட்மிட் பண்றதுக்கு எல்லா ஃபார்மாலிட்டியும் முடிச்சாச்சி. ஈவ்னிங் போகலாம்னா, ஈவ்னிங் எனக்கு ரோட்டரி க்ளப் மீட்டிங் இருக்கு. இப்ப நீங்க கௌம்பியே ஆகணும். பேரப் புள்ளைங்களோட நீங்க டின்னர் சாப்புடறதுக்கெல்லாம் நா கைவசம் ஒரு ப்ரோகிராம் போட்டு வச்சிருக்கேன். ஜனவரி பதினாறு ஒங்க பர்த்டே வருதுல்ல, ஒங்க பர்த்டே அன்னிக்கி ஓல்ட் ஏஜ் ஹோம்ல பர்மிஷன் வாங்கிக்கிட்டு டின்னருக்கு ஒங்கள வெளிய கூட்டிட்டுப் போறோம்...”

“ஜனவரி பதினாறுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கேடா!”“இருந்தா என்ன? இப்பவே அட்வான்ஸ் ப்ரோக்ராம் போட்டு வச்சாச்சி...”

“பயங்கரமான தொலைநோக்குப் பார்வைடா ஒனக்கு!”“டின்னர் எங்கன்னு தெரிஞ்சா நீங்க ரொம்ப சந்தோஷப்படுவீங்க. என்னோட பதினாறாவது பர்த்டேக்கு எல்லாரையும் நீங்க அண்ணா சாலை புஹாரிக்கிக் கூட்டிட்டுப் போனீங்களே... ஞாபகமிருக்கா?”

“எனக்கு ஞாபகமிருக்கு, நீயும் அத மறக்காம இன்னும் ஞாபகம் வச்சிருக்கியேடா மகனே! ஒடம்பெல்லாம் எனக்குப் புல்லரிக்கிதுடா!”
“அப்பப் புடிச்சி உயர்வு நவிற்சியிலயே நவில்றீங்க. சரி, கேட்டுக்கோங்க, அதே மவுண்ட் ரோடு புஹாரிக்கித்தான் ஒங்க பர்த்டே டின்னருக்கு, ஜனவரி பதினாறுக்கு, எல்லாரையும் நா கூட்டிக்கிட்டுப் போறேன்...”“எல்லாரையும்னா, ஒன்னோட ஃபேமிலியையும், என்னையும்...”“திரும்பவும் வளவளன்னு சாட் பண்ணிட்டேயிருக்கோம். நேரத்த வேஸ்ட் பண்ணாம ரெடியாகுங்க டாடி...”

“என்னோட இறுதி விருப்பத்தக் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுடா, ப்ளீஸ். இன்னிக்கி ஒரு நாள் விட்டுட்டு நாளக்கிக் கௌம்பறேனே...”

“நோ டாடி, இன்னிக்கே, இப்பவே. நீங்க முதியோர் இல்லத்ல அட்மிட் ஆகறதுக்கு இன்னிக்கித்தான் சரியான, பொருத்தமான நாள். இன்னிக்கித்தான் விசேஷமான நாள். இன்னிக்கி விட்டா, இந்த ஸ்பெஷல் டேய்க்கி அப்புறம் ஒரு வருஷம் காத்திருக்கணும்...”

“புரியிறமாதிரி சொல்லுடா...”
“சொல்றேன். இன்னிக்கு என்ன தேதி?”
“ஜூன் பத்தொம்போது...”
“இன்னிக்கி, ஜூன் பத்தொம்போது, என்ன விசேஷம்?”
“தெரியல, நீயே சொல்லு.”
“ஜூன் பத்தொம்போது, அகில உலகத் தந்தையர் தினம்.
வேர்ல்டு ஃபாதர்ஸ் டே!”
                      
 - ஏ.ஏ.ஹெச்.கே.கோரி