சினிமா பிசினஸ் இந்த மாதிரி படைப்புகளுக்கு இடம் தருகிறதா?



மனம் திறக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் பிரபு சாலமன். பேயையும், ரத்தத்தையும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் படைப்பாளி. மலையையும் மலைசார்ந்த மக்களையும் படம்பிடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். மனம் விரும்பும் படைப்பை படமாக்கும் ஃபிலிம் மேக்கர் என்பதால் இவருடைய படம் எப்போது வெளிவந்தாலும் ரசிகர்களின் ஆதரவு உண்டு. அந்த வரிசையில் ‘செம்பி’ வருகிறாள்.

*செம்பி யார்? இது மலைவாழ்மக்கள் பற்றிய கதையா?

செம்பி பத்து வயது குழந்தை. அவளுக்கும் அவள் பாட்டிக்குமிடையே நடக்கும் பாசப் போராட்டம், பயணம்தான் ‘செம்பி’. மலைவாழ் மக்கள் என்பவர்கள் நகரவாசிகள்போல் நம்முடைய சமூகத்துக்குள் வந்து போக முடியாது. அவர்கள் இருக்கிற இடம் அதுமாதிரி. அது அவர்களின் தனி உலகம். மிகவும் வெர்ஜின் உலகம். அழகியல் நிறைந்த உலகம் அது. அங்கு தூய்மையான காற்று, மாசில்லாத தண்ணீர், ஆர்கானிக் உணவு என்று எல்லாமே தனிரகம். பரிசுத்தமான உலகம் என்ற வார்த்தை அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

அங்கு இருப்பவர்கள் வெள்ளந்தியான மனிதர்கள். அப்படி இருக்கிற ஒரு பாட்டியும், பேத்தியும் இன்றைய நவீன உலகத்துக்குள் வரும்போது அவர்கள் எப்படி நிராகரிப்படுகிறார்கள், அவர்களால் அதை எப்படி எதிர்கொள்ள முடிந்தது, பிறகு எப்படி எல்லோரும் துணையாக நின்றார்கள் என்பதுதான் ‘செம்பி’.ஒரு பஸ்ஸை சமூகமாக உருவகப்படுத்தியிருக்கிறேன். 24 பயணிகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணம் உடையவர்கள். அவர்கள் அனைவருமே நம் சமூகத்தை பிரதிபலிக்கக் கூடியவர்கள்.

ஆரம்பத்தில் எதிராக நின்றவர்கள் எப்படி ஆதரவாளர்களாக மாறுகிறார்கள் என்பது திரைக்கதை.ஒட்டுமொத்தமாக எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என்பதுதான் ‘செம்பி’. இந்தப் படத்தை கதையாகச் சொல்ல முடியாது. உணர்வுகளின் கோர்வைதான் படம். எல்லாத் தருணங்களையும் முத்து மாலை கோர்ப்பதுபோல் கோர்த்துள்ளேன்.

*கோவை சரளா எப்படி கதைக்குள் வந்தார்?

வீரத்தாய் என்ற மலைவாழ் மூதாட்டியாக வர்றார். மலைவாழ் மூதாட்டி ஒரிஜினலாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று கொல்லிமலை, பச்சைமலை, கல்வராயன் மலை, கொடைக்கானல் என்று ஏறாத மலை இல்லை. அதே மாதிரி செம்பி குழந்தைக்காகவும் அலைந்தேன். தேடல் அதிகமானதால் காலம் கருதி தேர்ந்த நடிகைகளை வைத்து எடுக்க முடிவு செய்தேன். அப்போது மனதில் நின்றவர் ‘சதிலீலாவதி’ கோவை சரளா. கமல் சாருடன் அப்படி ஒரு பெர்ஃபாம் பண்ணியிருப்பார்.   

சிறந்த நகைச்சுவையாளர்தான் சிறந்த நடிகராகவும் இருக்க முடியும். அப்படி சார்லி சாப்ளின், பால் நியூமன் போன்றவர்களைச் சொல்லலாம். சரளா மேடத்திடம் கதை சொல்லி, நிறம், தோற்றம், உடல்மொழி என்று மாற்றங்கள் செய்து பழங்குடிப் பெண்ணாக உருமாற்றம் செய்தேன். அவருடன் வேலை செய்யும்போது அவருடைய எனர்ஜி ஆச்சர்யமாக இருந்தது. சிறந்த நகைச்சுவையாளருக்குள் ஒரு நடிகன் இருக்க முடியும் என்பது அவருடன் வேலை செய்யும்போது தெரிந்தது.

ஒருசில இடங்களில் நான் எதிர்பார்க்காதளவுக்கு தூக்கிச் சாப்பிடும் நடிப்பைக் கொடுத்தார்கள். கைதட்டி ரசித்தேன். தெளிதேன் எடுக்கும் ஒரு காட்சி. பெரிய பள்ளத்தாக்குல படப்பிடிப்பு. அந்த இடத்துக்கு காடுமேடுகளைக் கடந்து வரவேண்டும். துணிச்சலாக தேன் எடுக்கும் காட்சியில் நடித்தார். நிலா என்ற குழந்தை செம்பியா வர்றார். அவினாசியைச் சேர்ந்தவர். சமூக வலைத்தளம் மூலம் கிடைத்தார். பாட்டி, பேத்தி இருவருக்கும் நடிப்பு போட்டி பலமாக இருக்கும். அஸ்வின் பெரியளவில் கவனம் பெறுவார். தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா உட்பட 24 கேரக்டர்கள் இருக்கிறார்கள்.

* இமான் இல்லாத பிரபு சாலமன் படமா?

அப்படி இல்லை. எனக்கும் இமானுக்குமான நட்பு எப்போதும் உண்டு. ‘மைனா’, ‘கும்கி’, ‘தொடரி’ என்று தொடர்ச்சியாக பண்ணியவர். இதுல வேற ஒரு சவுண்டிங்ல வேலை செய்யணும்னு நினைத்தேன். இசையமைப்பாளர்கள் எப்படி வெரைட்டியான இயக்குநர்களுடன் வேலை செய்கிறார்களோ அது மாதிரி நானும் இன்றைய தேதியில் வளர்ந்துவரும் இசையமைப்பாளருடன் வேலை செய்ய நினைத்தேன். அப்படி நிவாஸ் கிடைத்தார். இதுல அவருடைய ஒர்க் பெரியளவில் பேசப்படும்.

ஒளிப்பதிவு ஜீவன். என் கற்பனைகளை எல்லாம் பிம்பங்களாக மாற்றுவது கடினம். ஏனெனில், விடாப்பிடியாக இருப்பேன். அதற்கு அழகாக ஒத்துழைப்பு கொடுத்து பண்ணினார். நாங்கள் போன இடம் எதுவும் சுலபமாக படமாக்கக்கூடிய இடம் கிடையாது. எல்லாமே காடுகள், பள்ளத்தாக்குகள் என்று இரண்டு, மூன்று மணி நேரம் பயணம் செய்யக்கூடிய பகுதிகள். அட்டைப் பூச்சி, விலங்குகள், குளிர், மழை என்ற பல அச்சுறுத்தல்கள். பெரும் பாடுகளுக்கு மத்தியில் படமாக்கினோம்.

தயாரிப்பு ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன், ‘ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட்’ அஜ்மல்கான், ரியா. தயாரிப்பாளர்கள் என்னுடைய நண்பர்கள் என்பதால் இந்த மாதிரி படைப்பை எடுக்க முடிகிறது.

*கமல் என்ன சொன்னார்?

டிரைலர் பார்த்ததும் சரளா மேடத்துக்கு ‘நடிப்பு ராட்சசி’ என்ற பட்டம் கொடுத்தார். படம் பார்த்த பிறகுதான் ஆடியோவுக்கு வருவேன் என்றார். படம் பார்த்தார். ‘மைனா’வுல தோள் மீது கரம்வைத்து பேசிய அந்த தருணத்துக்கு மீண்டும் வெயிட் பண்ணினேன். அது நடந்தது. அதைத்தான் மேடையில் பேசும்போது, ‘நல்ல படங்கள் எடுப்பவர்கள் தோள்கள் மீது என் கரம் இருக்கும்’ என்றார். ‘செம்பி’யை ரசிகனின் ரசனையை உயர்த்தும் படமாகப் பார்க்கிறேன் என்றார். அது பெரிய வார்த்தை.

‘தொடரி’யை தனுஷை வைத்து எடுத்தீர்கள். பெரிய இயக்குநரான நீங்கள் மறுபடியும் பெரிய ஹீரோவை வைத்து படம் பண்ணியிருக்க வேண்டும். இந்த கணக்கு எந்த இடத்தில் இடிக்கிறது?
அப்படி இல்லை. நான் என்றும் என்னை அப்படி வரையறுக்க மாட்டேன்.

 நல்ல திரைக்கதைக்கு யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று பார்ப்பேன். புதுமுகம் என்றால் புதுமுகத்தைத் தேட ஆரம்பித்துவிடுவேன். ஒரு திரைக்கதைக்கு கமல் சார் பொருத்தமாக இருந்தால் நிச்சயம் அவரிடம் போய் கதை சொல்வேன். கதை யாரைக் கேட்கிறதோ அந்த காஸ்டிங்கை நேர்மையாகப் பண்ண நினைப்பேன்.

‘தொடரி’ அப்போதைய சூழ்நிலையைத் தீர்மானித்து எடுத்தது. தனுஷுக்கு இன்னும் நிறைய பண்ணியிருக்கணும்னு தோணும். அது கீர்த்தி சுரேஷ் ஸ்கிரிப்ட்டாக இருக்கும். எல்லாமே குறுகிய காலத்தில் நடந்தது. யார்மீதும் பழி  போட முடியாது. எல்லா பழியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

புதுமுகத்தை வைத்து எடுப்பது மிகவும் கடினம். சிறந்த நடிகர்களை வைத்து எடுப்பது இயக்குநர்களுக்கு சுமை குறைவு. சொல்வதை உடனே செய்துவிடுவார்கள். புது நடிகர்களை வைத்து எடுப்பது யாகம் மாதிரி. எப்படி பார்க்கணும், எப்படி நிற்கணும், எப்படி நடக்கணும் என்று நிறைய பாடம் எடுக்க வேண்டும். கொஞ்சம் வேகமாக நடந்தாலும் சரி, கொஞ்சம் மெதுவாக நடந்தாலும் சரி தவறாக இருக்கும்.

அது கடினம் என்றாலும் என்ஜாய் பண்ணி பண்ணுவதால் சுகமான சுமையாக நினைக்கிறேன். புதுமுகங்களை வைத்து எடுக்கும்போது களைப்பை மீறிய சந்தோஷம் இருக்கும். அந்த சந்தோஷம் புதுமுகங்களை வைத்து எடுக்கும்போது அதிகமாகக் கிடைக்கும்.புதுமுகங்களைத் தேடிச் சென்றதால், ‘மைனா’வில் அமலா பால், விதார்த், தம்பி ராமையா; ‘கும்கி’ ல விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன்; ‘கயல்’ படத்தில் ஆனந்தி, சந்திரன் என்று பல சிறந்த நடிகர்களை அறிமுகம் செய்து வைக்க வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் உருவாக்கும் இடத்தில் இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறது.

*சினிமா என்பது ஒரு வியாபாரம். நீங்கள் கோவை சரளாவை வைத்து படம் பண்ணியுள்ளீர்கள். சினிமா பிசினஸ் இந்த மாதிரி படைப்புகளுக்கு இடம் தருகிறதா?

கண்டிப்பாக. கமல் சார் ‘செம்பி’ மேடையில், சின்ன படம் பெரியபடம் என்று கிடையாது. கன்டன்ட் உள்ள படம், கன்டன்ட் இல்லாத படம் என்று பேசினார். விளக்கமாகப் பேசும்போது, ‘16 வயதினிலே’ படம் வெளியாகி 40 வருடங்கள் ஆகிவிட்டது. அந்தப் படத்தை இன்னும் பேசுகிறார்கள். அப்போது அந்தப் படம் பெரிய பட்ஜெட் படம் கிடையாது. அன்று அதில் எல்லோரும் அறியப்படாத நடிகர்கள் என்றார்.

‘மைனா’வுல எல்லோரும் புதுமுகங்கள். மாலைக் காட்சியில் படம் ஹிட் என்று செய்தி வருகிறது. காரணம் கன்டன்ட். அப்படி சமீபத்தில் வந்த ‘லவ்டுடே’ வரை சொல்லலாம்.
விறுவிறு திரைக்கதை இருந்தால் அந்தப் படம் ஹிட். கன்டன்ட் இருந்தால்தான் வெற்றி என்பது வளர்ந்த நடிகர்களுக்கும் தெரியும். ஸ்டார் இருக்கும்போது முதல் நாள்ஓப்பனிங் கிடைக்கலாம். அடுத்த நாள் ரசிகர்களை உள்ளே இழுக்க வேண்டுமானால் விஷயம் இருக்க வேண்டும். ஆதலால், விஷயம் உள்ள படத்தை எடுக்கிறோம் என்ற நம்பிக்கையில் உழைக்கிறேன். நன்றாக இருந்தால் அது ரசிகர்களை வரவழைக்கும்.

*உங்கள் படங்களை மறுபடியும் பார்க்கும் பழக்கம் உண்டா?

அவ்வளவாக இல்லை. அதைப் பார்க்கும்போது அதில் உள்ள குறைகள்தான் தெரியும். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று தோன்றும். கிளைமாக்ஸை மாற்றியிருக்கலாம் என்று தோன்றும். இது எல்லா கலைஞர்களுக்கும் உள்ள சாபம். உலகமே கொண்டாடும். நாங்கள் மட்டுமே அதை ஒரு படமாக ட்ரீட் பண்ணுவோம். படம் எடுக்கும்போதே சிரிப்பது, அழுவது நடந்துவிடுகிறது. மீண்டும் படமாகப் பார்க்கும்போது கட்டடக் கலைஞன் வேலை மாதிரி பூசுவேலை பிராசஸ்தான் இருக்கும். ஒரு பார்வையாளன் இடத்துக்கு கலைஞன் வந்து படம் பார்ப்பது கடினம்.

*இப்போதுள்ள சூழ்நிலையில் இயக்குநர்களால் தடைகள் இல்லாமல் சுதந்திரமாக கதை யோசிக்க முடிகிறதா?

முடிகிறது. தமிழ் சினிமாவில் நிறைய மாற்றம் நடந்து வருகிறது. ஏழு பாடல்கள் இருந்தது. இப்போது பாடல்கள் இல்லாத படங்கள் வருகின்றன. அதுவே மாற்றம். முன்பு காமெடி டிராக் கதையில் தனியாக இருக்கும். அது குறைந்துள்ளது. சீரியஸ் படமாக இருந்தாலும் கன்டன்ட் நன்றாக இருந்தால் வரவேற்பு கிடைக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் ஓடிடியில்  உலக சினிமாவைப் பார்த்ததால் எல்லாருக்குமே சூத்திரம் தெரிந்துள்ளது. அதனால் வித்தியாசமாக எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் ரசனை அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டது.       

எஸ்.ராஜா