டஸ்கி ஸ்கின்தான் மாஸ்!கண்சிமிட்டும் சஞ்சனா!

கலாவதி வரதராஜன் (எ) கயல் (‘நோட்டா’), வள்ளி (‘ஜகமே தந்திரம்’), லட்சுமி (‘சார்பட்டா பரம்பரை’)... என எடுத்துக்கொண்ட கேரக்டர்கள் எண்ணிக்கை குறைவானாலும், அத்தனையும் மனதில் நிற்கும் ரகமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தனித்துவமான நடிகையாக நிற்கிறார் சஞ்சனா நட்ராஜக. இதோ இப்போது ‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தில் மலைவாழ் பெண்ணாக மாஸ் காட்டியிருக்கிறார்.

2013 - 2023 பத்து வருடங்கள் சினிமாவில் கற்றதும் பெற்றதும் என்ன?

இப்போ இந்த நிமிடம் வரையிலும் கூட கத்துக்கிட்டேதான் இருக்கேன். பொதுவா பொறுமை ரொம்ப அவசியம்னு கத்துக்கிட்டேன். ஆனாலும் அதைக் கடைப்பிடிக்க இன்னும் சினிமாவிலே சில காலங்கள் உழைக்கணும், அந்த உழைப்புதான் பொறுமையையும் சேர்த்துக் கொடுக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன்.

கை நிறைய படங்கள்... 25வது, 50வது படம் என்கிற தலைப்பெல்லாம் வேண்டாமா?

யாருக்குதான் வேண்டாம்னு தோணும். ஆனால், நான் நம்பர்ஸ்க்காக படங்கள் செய்கிற ஆள் இல்லை. ஒரு கதையிலே எதோ ஒரு விதத்திலே நான் உந்து சக்தியாக இருக்கணும்னு தேடுவேன். அதனால்தான் நான் நடிச்ச படங்கள் மிகக் குறைவு. நடிக்கணும், எனக்கு சவாலா அந்தக் கேரக்டர் இருக்கணும்னு நினைப்பேன். மேலும் இங்கே எந்த வாய்ப்புகளையும் பெற ஒரு பெரிய வெற்றி தேவைப்படுது. அந்த வெற்றி கிடைக்கும் போது மற்றவை எல்லாம் தானாகவே நடக்கும்.

தமிழ் பேசும் நடிகையாக என்ன பிளஸ், மைனஸ் சினிமா துறையிலே பார்க்கறீங்க?

கதையையும், கேரக்டரையும் உள்வாங்கி நடிக்கறது சுலபமா இருக்கு. நமக்குக் கதையும், நம் கேரக்டரும் புரிஞ்சிட்டாலே பாதி வேலை முடிஞ்சுடும் இல்லையா... அதுதான் பிளஸ்.
முக்கியமான விஷயம்... இந்தக் கேரக்டர் நம்ம மண்ணுக்கான கேரக்டர் அப்படின்னு இயக்குநர்கள் யோசிக்கும்போது என் பெயர் எப்படியாவது சாய்ஸில் வந்திடுது. மைனஸ்... பெரிதா நான் ஏதும் பார்க்கலை. ஆனால், கமர்ஷியல், பெரிய பட்ஜெட் படங்கள்னு வரும்போது நமக்கான கேரக்டர் கிடைக்கறதில் சிரமம் இருக்கும்.

இந்திய சினிமாவில் டஸ்கி பியூட்டிகள் என்றாலே எதாவது ஒரு வகையில் புரட்சி செய்திருப்பார்கள்... அப்படியான புரட்சிகரமான நாயகி அவதாரம் எப்போது?

இயக்குநர்களும், கதையாசிரியர்களும்தான் இதற்கு பதில் சொல்லணும். தபு மேடம், நந்திதா தாஸ், ஏன் பாலுமகேந்திரா சார் நாயகிகள் எல்லாமே மாஸ் காண்பித்த நடிகைகள்தான். அப்படியான கதாபாத்திரங்களும், கதைகளும் இன்னும் நிறைய வரணும். நானும் கஷ்டப்பட்டு, சவாலா ‘சார்பட்டா பரம்பரை’ மாதிரியான கேரக்டர்கள் செய்யணும்னு காத்திருக்கேன். உணர்வுகள் சூழ கதையமைக்கும் காலம் திரும்ப வரணும். அது நடந்தா நிச்சயம் பெண்களுக்கான கதாபாத்திரங்கள் இன்னும் வலிமையானதா அமையும்.
‘ஜிகர்தண்டா டபுள் X’?

படத்திற்கு அழைப்பு வந்தவுடனே எதுவும் கேட்காமல் ஓகே சொல்லிட்டேன். அப்படியான வரலாறு உருவாக்கிய படம். நிறைய மெனக்கெட்டு வேலை செய்தோம். மலைமேலேதான் படப்பிடிப்பு. அந்த பயணமும், அங்கே சூழலும் ரொம்ப சிக்கலா இருந்துச்சு. 

தினம் தினம் அந்த இடத்துக்கான டிராவல்... குளிரும் அதிகமா இருக்கும், வெப்பமும் அதிகமா இருக்கும். அதிலே ஷூட்டிங். இதிலே குறிப்பிட்ட நேரம்தான் வெளிச்சம் வேறு இருக்கும். அதற்குள்ள படப்பிடிப்பு நடத்தலைன்னா அப்படியே மேகம் சூழ்ந்திடும். அந்த அளவுக்கு நிறைய ரிஸ்க் இருந்தது. இதற்கிடையிலே அத்தனை பேரும் அவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்கோம்.

உங்களைக் கவர்ந்த கதாபாத்திரம் அல்லது கனவுக் கதாபாத்திரம் என்ன?

எனக்கு கமல் சார், மணி சார் ரெண்டு பேரையும் அவ்வளவு பிடிக்கும். கமல் சாருடைய ‘அன்பே சிவம்’, மணி சாருடைய ‘அலைபாயுதே’ இந்த மாதிரி ரெண்டு படங்களில் அல்லது அதைவிட சிறந்த படங்களில் நடிக்கணும். குறிப்பா இந்த ரெண்டு லெஜெண்ட்ஸ் கூட வேலை செய்யணும்னு நீண்ட நாள் கனவு.

அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க..?

‘நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் தினகரன் சார் இயக்கத்தில் ‘பாட்டில் ராதா’; அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், பிஜோய் நம்பியார் இயக்கத்தில் ‘போர்’; ரோஹித் விஎஸ் இயக்கத்தில் ‘டிக்கி டகா’ மலையாளப் படம் உட்பட நடிச்சிட்டு இருக்கேன். மற்ற படங்கள் பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு. விரைவில் அறிவிப்புகள் வரும்.

ஷாலினி நியூட்டன்