சிறுகதை-சிக்னல் பெண்
நூறடி சாலையும், நான்காவது அவென்யூ சாலையும் குறுக்கிடும் இடத்தில் உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்தேன் - சாலைதாண்டிய முகவரி ஒன்றில் டெலிவரி செய்யவேண்டிய உணவுப் பார்சல் பின்னால் பெட்டியில்! இந்த இடம் சிறிது சிக்கலானது. அங்கு எப்போதும் வாகனங்கள் நின்றுதான் செல்ல வேண்டியிருக்கும்.  ஓரிரண்டு சிறுவர், சிறுமியர் கையில் பொம்மைகள், கார் தூசு தட்டும் நீண்ட பிரஷ், காது குடையும் ‘பட்ஸ்’ என சிக்னலுக்குக் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். பள்ளி செல்ல வேண்டிய வயதில், வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி வெயிலிலும், மழையிலும் அலையும் குழந்தைகளைப் பார்க்கப் பாவமாய் இருக்கிறது. ஆனாலும் யாரும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. “அண்ணே, பிரஷ் வாங்கிக்கங்கண்ணே...” வேப்பிலை அடிப்பதைப்போல பிரஷை ஆட்டிய சிறுமிக்கு எட்டு வயதிருக்கலாம். “வேண்டாம்மா...” நானும் ஒழுங்காகப் படித்திருந்தால், இப்படி தெருத்தெருவாய் டெலிவரி செய்ய அலைய வேண்டியதிருக்காது. சிக்னல் விழும் வரைதான் இந்த சிந்தனைகள். பின்னர் அவரவர் வழி அவரவர்களுக்கு! மூடியுள்ள கார் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டும் பிச்சைக்காரர்களையும், திருநங்கைகளையும் ஆதரிப்பவர் சிலரே. இவர்கள் ஏன் முடிந்த வேலையைச் செய்து பிழைக்க முடியாது? பிச்சை எடுப்பது ஒரு பிழைப்பா?
எண்ணியபடி நின்றிருந்தவனின் கண்களில் அந்தப் பெண்மணி, இடுப்பில் ஒரு குழந்தையுடன் வருவது தெரிந்தது. முப்பது வயதிருக்கலாம். சுமாரான உடை. தலையில் அன்றைய ஒற்றைப் பூ. காலில் பழைய செருப்பு. குழந்தை கையில் ஏதோ பொம்மை. பரட்டைத் தலை. கால்களில் யாரோ கொடுத்திருந்த ஷூ. இவள் பிச்சைக்காரியா? கணவன் இருக்கிறானா? இருக்கலாம். குழந்தை ஒன்று இடுப்பில் இருக்கிறதே!
ஒவ்வொரு காராகச் சென்று, குழந்தையைக் காட்டிப் பிச்சை கேட்டவாறு இருந்தாள். பார்த்தால் அப்படியொன்றும் ஏழை போலில்லை. கை, கால்கள் ஊனமில்லை. குழந்தை பெற்றுக்கொள்ள வலுவிருக்கும்போது, ஏதாவது வேலை செய்து வயிற்றைக் கழுவ முடியாதா? கோபமாக வந்தது. என் கோபம் யாரை என்ன செய்துவிடும்?
கருப்புக் கண்ணாடியணிந்திருந்தவன், கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கி, அவளை மேலும் கீழும் பார்த்தான் - கண்ணாடி இருந்ததால் அவன் எங்கு பார்க்கிறான் என்று தெரியாது - அவள் அதைப் பற்றி கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை! ஒரு பத்து ரூபாய் நோட்டை அவளிடம் கொடுத்தான். அவளுக்கு அந்தப் பணத்தில் பெரிய விருப்பம் இல்லாததுபோல அலட்சியமாக வாங்கிக் கொண்டாள். எதையோ தேடுவதைப் போல காருக்குள் எட்டிப்பார்த்தாள். ‘இவள் திருடுவாளோ’ என்ற பயம் கண்ணாடிக்காரனுக்கு வந்திருக்க வேண்டும், அவசரமாக ஜன்னல் கண்ணாடியை உயர்த்தினான்.
சிக்னல் விழுந்தது.அன்று வியாழக்கிழமை. சாயிபாபா கோயிலில் அன்னதானம் பத்தரை மணிக்கு என்பதால், பெரிய வரிசை காத்திருந்தது. கோயிலின் உள்ளே சென்று வெளியே வந்தவன், வரிசையில் குழந்தையுடன் அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
இருவர் தாராளமாகச் சாப்பிடும் அளவுக்கு ஒரு பாக்கெட்டில் கலந்த சாதமும், ஒரு வாழைப்பழமும், ஒரு பாக்கெட் தண்ணீரும் தானமாகக் கொடுப்பார்கள். இதை நம்பியே வாழும் நடைபாதை வாசிகளுடன், பிரசாதம் என வாங்கிச் செல்லும் பாபா பக்தர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். குழந்தையின் கையில் ஒரு பன் இருந்தது. பிரசாதம் இவளுக்குப் போலிருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.
வரிசையில் வந்தவள், பாபாவுக்கு ஒரு கும்பிடு போட்டு, சாப்பாடு பாக்கெட்டை வாங்கிக்கொண்டு, விரைவாகச் சென்றாள். சிறிது தூரம் சென்றவள், நின்று இடுப்பிலிருந்து செல்போன் எடுத்துப் பேசினாள்!
பேசியபடியே, தெருவின் இடதுபக்கம் திரும்பி, மறைந்தாள்.‘வித்தியாசமான பிச்சைக்காரியாக இருக்கிறாளே, பிச்சைதான் எடுக்கிறாளா அல்லது வேறு ஏதாவது தொழில் செய்து பிழைப்பை நடத்துகிறாளா? இவள் நடை, உடை, பாவனைகள் மற்ற பிச்சைக்காரர்களிடமிருந்து இவளை வேறாகக் காட்டுகின்றனவே’ எண்ணியவாறு என் இரண்டு சக்கர வண்டியில் கிளம்பினேன். இரண்டு மூன்று முறை அந்த சிக்னலிலும், மற்றொருமுறை வடபழனி சிக்னலிலும் அவளை வேறொரு குழந்தையுடன் பார்த்தேன். அடிப்பாவி, இரண்டு குழந்தைகளா... “அண்ணே, ஒரு குவாட்டர் வாங்கிக்குடுண்ணே...” கையில் குழந்தையுடன், டாஸ்மாக் வாசலில் அழுக்கு லுங்கியுடன் இருந்தவனிடம் பணத்தை நீட்டியவளைப் பார்த்தேன். ஓ, இந்தப் பழக்கம் வேறயா? நினைத்தபடி வண்டியை நிறுத்தினேன்.
“நீ ஏம்மா இங்கெல்லாம் வர்ற, இந்தக் கால வயசுப் பொண்ணுங்களைப் போல?” என்றபடி முள்தாடியை சொறிந்தான் லுங்கிக்காரன்.“ப்ச... பரவால்லெண்ணே. ஒரு வாரமா தூக்கம் வரலைன்றாரு. இரண்டு நாள் சாப்ட்டா நல்லா தூங்கிடுவாரு...”“பாத்துக்கம்மா, பழக்கமாயிடப் போவுது. அப்புறம் என்ன மாதிரி தெருவுல நிக்க வேண்டியதுதான்...” “அப்டி நிக்க மாட்டார்ண்ணா. நான் பாத்துக்கறேன். அவரு அப்படிப்பட்டவரில்லே...”கையில் சரக்குடன், வேகமாக நடந்து அருகில் தேர்தலுக்குப் பிறகு புதிதாய்த் தோன்றியுள்ள குடிசைப் பகுதிக்குள் மறைந்தாள்.
அன்று எனக்கு வேலை இல்லை. ஊர் ஞாபகம் வந்தால், உடனே நான் பார்த்துப் பேசும் நண்பன், கிராமத்தில் ஒன்றாகப் படித்த நடராஜன் - மளிகை, காய்கறிகளை வீட்டிற்கு டெலிவரி செய்யும் கம்பெனியில் வேலை. அவனும் என்னைப் போலவே தனிக்கட்டை. நல்ல டிபன் சாப்பிட்டு, ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ஊர்க்கதை பேசுவது வழக்கம்.
“என்ன, நட்டு ஊருக்குப் போவலையா?”“இல்லெ மணி, மனசு கேக்க மாட்டீங்குது. வீராப்பா மொறச்சிக்கிட்டு வந்துட்டேன். இப்பொ செய்யற வேலையச் சொன்னா அப்பா காரித்துப்புவாரு. நம்ப கடையிலே வேலை செய்யாம, இங்க வந்து டெலிவரி பையனா வேலை செய்யறத அப்பா எப்படி ஒத்துக்குவாரு? நல்ல வேலை, நல்ல சம்பளம் கெடைக்கிற வரைக்கும் ஊருக்குப் போக மனசில்லெ மணி...”“எந்த வேலை செய்தா என்ன நட்டு.
நியாயமா ஒழைச்சு, சொந்தக் காலில நின்னா அதுதான் பெருமை. எந்த வேலையும் மட்டமில்ல...”பேசிக்கொண்டே வர, அந்தப் புதுக் குடிசைப் பகுதிக்கருகில் அவள் இடுப்பில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். நான் நட்டுவிடம் அவள் பிச்சை எடுத்து ஏமாற்றுவதைச் சொல்ல, நட்டு புன்னகைத்து, ‘‘எனக்கு இவங்களைத் தெரியும். வா...” என்று என்னை அழைத்துச் சென்றான். குடிசை வாசலில் கைகள் ஊனமாயிருந்த பெண்ணிடம், குழந்தையைக் கொடுத்துவிட்டு, “இந்தா இன்னித்திக்கான வாடகை. ரொம்ப அழுது அடம்புடிச்சி உயிர வாங்கிட்டா ஒம் பொண்ணு...” பணத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு குடிசை தள்ளியிருந்த தன் குடிசைக்குள் சென்றாள்.கை கால்களின்றி பலகையில் அமர்ந்திருந்த கணவன். கையில் கொண்டு வந்திருந்த பாபா பிரசாதத்தை ஊட்டி, தண்ணீர் கொடுத்தாள்.
“ரெண்டு நாள்ல கால் ரெடியாயிடும்னு சொன்னாங்க. போய் மாட்டிக்கிட்டு வரலாம். பழகப் பழக நல்லா நடக்கலாம்யா...” சொல்லியபடி, வாய் துடைத்து, கைத்தாங்கலாய் சுவரில் சாற்றி அமர வைத்தாள். ‘‘காதலித்துக் கல்யாணம் செய்துக்கிட்டவங்க. ஒரு ரயில் விபத்துல கை,கால்களை இழந்து, இப்டி ஆயிட்டாரு. என்ன வேலை செய்ய முடியும்? ரொம்பப் படிக்காதவங்க. அவுங்க என்ன வேலை செய்து வயிற்றைக் கழுவ முடியும்?
இந்த மோசமான உலகத்துல, தன்னையும் காத்துக்கிட்டு, இப்படிப்பட்ட புருஷனையும் பாத்துக்கிட்டு வாழறது எவ்வளவு சிரமம்னு அவங்க சொல்லுவாங்க. கையில்லாத அந்தப் பெண்ணோட குழந்தைய எடுத்துக்கிட்டுப் போனா, சும்மா பிச்சை என்பதை விட, குழந்தைக்காகன்னு பரிதாபத்துல பணம் குடுக்கிறவங்க இருக்காங்க.
அதுக்கு அந்தக் குழந்தைக்காக ஒரு வாடகைத் தொகையக் குடுப்பாங்க. ‘வேற ஏதாவது வேலை செய்யலாமே’ன்னு கேட்டா, விரக்தியா சிரிச்சு, ‘இந்த உலகத்தை நீங்க இன்னும் புரிஞ்சிக்கல தம்பி’ ன்னுவாங்க...” என்ற நட்டுவை வியப்புடன் பார்த்தேன்.“எந்த வேலை செஞ்சா என்ன, சின்சியரா இருக்கணும். ஒரு நியாயம் வேணும்...” மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
ஜெ.பாஸ்கரன்
|