மனசிலாயோ தீப்தி சுரேஷ்!
சென்னையைச் சேர்ந்த கெமிக்கல் என்ஜினியர் தீப்தி சுரேஷ் ‘மனசிலாயோ...’ (வேட்டையன்) பாடல் வழியாக நாடறிந்த பாடகியாக மாறியதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனெனில் இசைத் துறையில் கடந்த 20 வருடங்களாக தன்னை அர்ப்பணித்து இசையை தனது சுவாசமாக்கிக் கொண்டவர்.டெல்லி சுந்தர்ராஜன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். இசைக் கல்லூரி என பல வித்தகர்களிடம் இசை பயின்றதோடு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் பட்டயப் படிப்பையும் முடித்தவர்.
 இளம்வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான், அனிரூத், இமான், தேவி பிரசாத், ஜிப்ரான், தமன், கோபி சுந்தர், கோவிந்த் வசந்தா என முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தவர்.‘ஆராரிராரோ...’ (ஜவான்), ‘ஒசரட்டும் பத்து தல...’ (பத்து தல), ‘தேர்த் திருவிழா...’, ‘அன்பாளனே...’ (லால்சலாம்), ‘உச்சந்தல...’, ‘கொடி பறக்கிற காலம்...’ (மாமன்னன்), ‘விடியனும் காலையிலே...’ (காந்தாரா), ‘காயம்...’ (இரவின் நிழல்), ‘சூடானது...’ (பொன்னியின் செல்வன்-2) என இவர் பாடிய ஏராளமான பாடல்கள் ரசிகர்களின் கவனம் பெற்றவை.
 ‘ஆராரிராரோ...’ (ஜவான்), ‘ஒசரட்டும் பத்து தல...’ (பத்துதல) போன்ற பாடல்கள் பல கோடி பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ‘மனசிலாயோ...’ (வேட்டையன்), ‘பத்த வைக்கும்...’ (தேவரா) போன்ற பாடல்களும் பல கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளன.பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல், ஏராளமான கவர் சாங்ஸ் வழியாக இணையத்திலும் புகழ் பெற்ற பாடகியாக அறியப்படுகிறார். இளம் வயதிலேயே திறமையான பாடகி என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தீப்தி சுரேஷிடம் பேசினோம்.
உங்கள் வாழ்க்கை முழுவதும் இசைத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?
எனக்கு மியூசிக் பேக்ரவுண்ட் கிடையாது. வீட்ல எல்லோரும் மியூசிக் லவ்வர்ஸ் என்பதால் என்னைச் சுற்றி எப்போதும் மியூசிக் இருக்கும். கச்சேரி, இசைப் போட்டி எங்கு நடந்தாலும் ஆர்வத்தோடு கலந்துகொள்வேன். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து வீட்ல மியூசிக் கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. வாழ்க்கைக்கு கல்வி முக்கியம் என்பதால் டிகிரி முடிச்சேன். அப்பா, அம்மா பெரிய சப்போர்ட் கொடுத்தாங்க. எதிர்காலம் மியூசிக் ஃபீல்டுதான்னு தெரிஞ்சதும் கேம்பஸ் இன்டர்வியூ கூட போகாம இசைத் துறையில் ஐக்கியமானேன்.
காலேஜ் டைம்லயிருந்து ரிக்கார்டிங் போக ஆரம்பிச்சுட்டேன். பேக்ரவுண்ட் வாய்ஸ், டிராக் பாடுவது என பல வாய்ப்புகள் கிடைச்சது. முதன் முதலாக ஜிப்ரான் சார் மியூசிக்ல ‘மாறா’ படத்துல பாடினேன். அது எனக்கு திருப்பு முனையைக் கொடுத்துச்சு. தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மான் சார், அனிரூத் சார், கோவிந்த் வசந்தா சார் என பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாட ஆரம்பிச்சுட்டேன்.
‘மனசிலாயோ...’ பாடல் வெற்றியைப் பற்றி என்ன சொல்றீங்க?
சாங் பெரிசா போகும்னு தெரிஞ்சது. அது நடக்கும்போதுதான் எவ்வளவு பெரிசுன்னு தெரிய வரும். அதுமாதிரிதான் ‘மனசிலாயோ...’ பாடல். ரிக்கார்டிங் போகும்போது என்ன பாடல் என்று தெரியாமதான் போனேன். பாடல் வரிகளைப் படிச்ச பிறகுதான் ரஜினி சாருக்கு பாடுறோம்னு தெரிஞ்சது.ரஜினி சாரின் தீவிர ரசிகை என்பதால் அது எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துச்சு. ரஜினி சார் படத்துல என்னுடைய குரல் இருந்ததை பெரிய ஆசீர்வாதமா பார்க்கிறேன்.
ரஜினி சாருக்குப் பாடணும் என்பது நீண்ட நாள் கனவு. ரஜினி சார் நடிப்பிலிருந்து விலகிட்டார்னா என்ன பண்ணுவது என்றெல்லாம் கவலைப்பட்ட நாட்கள் உண்டு. ‘மனசிலாயோ...’ ஹிட்டுக்கு காரணமா எதைச் சொல்வீங்க?
பின்னணி குரல் என்னுடையதா இருந்தாலும் தலைவருடைய டான்ஸ், ஸ்டைல், ஏஐ தொழில் நுட்பத்துல உருவாக்கப்பட்ட மலேஷியா வாசுதேவன் சார் குரல், அனிரூத் மியூசிக் என எல்லாம் சேர்ந்து பாடலை எங்கேயோ கொண்டு போயிடுச்சு.ரஜினி சார் தன்னுடைய பேட்டிகளில் தீப்தி சுரேஷ் என்று என் பெயரைச் சொன்னது அவர் கைகளால் விருது வாங்கிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. மஞ்சு வாரியர் மேடம் சமூக தளத்தில் என்னை வெகுவாகப் புகழ்ந்து பாராடினார்.
நீங்க மெலடி வாய்ஸ்ல நிறைய பாடியிருக்கீங்க. வழக்கத்துக்கு மாறாக எந்தப் பாடலில் குரலை மாற்றிப் பாடினீர்கள்?
ஒவ்வொரு பாடலுக்கும் மாத்திப் பாடுற சிச்சுவேஷன் வரும். வழக்கமா மெலடி பாடுவேன். ‘ஆராரிராரோ...’, ‘பத்தவைக்கும்...’ போன்ற பாடல்கள் மெலடி. அதுதான் என்னுடைய ஸ்டைல். ‘பத்து தல’ படத்துலதான் ரஹ்மான் சார் வெவ்வேறு குரலில் பரீட்சார்த்த முறையில் பாடும்படி வாய்பை ஏற்படுத்தினார். ‘மனசிலாயோ...’ பாடலை தரை லெவலுக்கு இறங்கி பாடுவதுன்னு சொல்வாங்களே அது மாதிரி இறங்கிப் பாடினேன்.
பாடகியாக உங்களை உருவாக்க நினைத்தபோது யாரை ரோல்மாடலாக எடுத்துக்கிட்டீங்க?
சித்ரா அம்மா குரல் பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடைய பாடலில் பல விஷயங்களை எடுத்துக்க முடியும். எஸ்பிபி சார், ஸ்ரேயா கோஷல் மேடம் என பலர் என்னுடைய வளர்ச்சிக்கு உந்துதலா இருந்திருக்கிறார்கள். எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியும். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவையும் பிடிக்கும்.
குரலைப் பாதுகாக்க என்ன செய்வீங்க?
ஸ்பெஷலா எதுவும் பண்ணமாட்டேன். ரிக்கார்டிங் சமயத்துல சூரணத்தை தேனில் கலந்து சாப்பிடுவேன். அது ஒர்க் அவுட்டாகும். ப்ரொஃபஷனுக்காக என்பதால் ஐஸ் கிரீம் அவாய்ட் பண்ணிடுவேன்.
ஒரு பாடலை மெருகேற்ற என்னவெல்லாம் செய்வீங்க?
இசையமைப்பாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிஞ்சுக்குவேன். ஏனெனில், என்னுடைய ஸ்டைலுக்கு ப்ராக்டீஸ் பண்ணி அது வித்தியாசமா மாறிடக்கூடாது என்பதால் இசையமைப்பாளரின் எதிர்பார்ப்பு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்குவேன். இசையமைப்பாளர் சொன்னதை வெச்சு பாடுவேன். பாடும்போது அவங்க சில இன்புட்ஸ் கொடுப்பாங்க. அப்படி டிராவல் பண்ணினா ஈஸியாகவும், பொருத்தமாகவும் இருக்கும். அதுதான் என்னுடைய கிரியேட்டிவ் பிராசஸ்.
உங்கள் பாடலை யாரெல்லாம் பாராட்டினார்கள்?
என்னுடைய இசைப் பயணத்தில் நிறைய பாராட்டு கிடைச்சிருக்கு. ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசம் இருப்பதால் ‘இந்தப் பாடலைப் பாடிய நீங்கதானா அந்தப் பாடலையும் பாடினீங்க’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டிருக்காங்க. எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கையோடு டிராவல் பண்ணிய என்னுடைய பயணத்தையும் வளர்ச்சியையும் குறித்துப் பேசுவது சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.
கவர் சாங் பாடுவது மியூசிக் ஃபீல்டுக்கு உதவுகிறதா?
கண்டிப்பா உதவுகிறது. அதன் வழியாக நான் என்னவிதமா பாட முடியும் என்று வெரைட்டி காண்பிக்க முடிகிறது. எந்தெந்த டோன் வரும் என்பதை அதுல தெரிஞ்சுக்கலாம். இசையமைப்பாளர்களிடம் டெமோ சிடி கொடுத்து வாய்ப்பு கேட்ட காலம் முடிஞ்சுடுச்சு. இப்போது டெமோ என்பது இன்ஸ்ட்டா, யூடியூப் தான். புது வாய்ஸ் வேணும்னா இணையத்துலதான் தேடுறாங்க. கவர் சாங் உதவி செய்யுது என்பதைவிட தவிர்க்க முடியாது.
யுடியூப்ல எவ்வளவு கல்லா கட்றீங்க?
வருமானம் வர்றளவுக்கு நிறைய வீடியோ பண்ணல. எனக்குப் பிடிச்சதை வீடியோவா போடுறேன். ஆடியன்ஸுக்கு என்ன பிடிக்குமோ அதைப் போட்டா வியூஸ் வரலாம். என்னுடைய சேனல் இன்னும் வளரல. மியூசிக் சர்க்கிளில் அங்கீகாரம் கிடைச்சிருக்கு.
எஸ்.ராஜா
|