ஆம்பூர் அன்னை தெரசா...
மருத்துவர் ஆலிஸ் ஜி பிராயரின் மறைவு ஆம்பூர் சுற்றுவட்டார மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘ஆம்பூரின் அன்னை தெரசா’ எனப் போற்றப்படும் அவர் சுமார் 57 ஆண்டுகள் அந்தப் பகுதி மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து மருத்துவ சேவை செய்து வந்தவர்.ஏழை, எளிய மக்களுக்கு ஒளிவிளக்காய் இருந்தவர். கடந்த செப்டம்பர் 30ம் தேதி உடல்நலக் குறைவால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வயது மூப்பின் காரணமாகக் காலமானார்.
 அமெரிக்காவிலிருந்து மிஷனரி பணிக்கென தனியொரு பெண்ணாக தன்னுடைய முப்பது வயதில் தமிழகம் வந்தவர் ஆலிஸ் ஜி பிராயர். ஆம்பூர் மக்கள் அவரைச் செல்லமாக ‘மிஸ்ஸியம்மா’ என்றே அழைத்து வந்தனர். இப்போது அவரின் பிரிவு அவர்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தந்துள்ளது. இந்நிலையில் ஆலிஸ் குறித்து கடந்த பத்து ஆண்டுகளாக ஆவணப்படம் எடுத்துவரும் ஆவணப்பட இயக்குநர் சாரோனிடம் பேசினோம்.
 ‘‘முதல்ல இந்த ஆவணப்படத்தைப் பத்தி சொல்லிடுறேன். இந்த ஆவணப்படத்தின்பெயர், ‘ஐந்து தேவதைகள்’. இது ஆலிஸைப் பத்தின ஆவணப்படம் மட்டும் இல்ல. இந்திய பெண் கல்வி மற்றும் பெண் மருத்துவத்திற்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த ஐந்து பெண்களைப் பத்தினது.நான் பண்ண ஆரம்பிக்கிறப்ப அந்த ஐந்து தேவதைகள்ல நான்கு பேர் இறந்திட்டாங்க. ஒருவர் மட்டுமே உயிருடன் இருந்தார். அவர்தான் மருத்துவர் ஆலிஸ் ஜி பிராயர்.

மீதி நான்கு பேர்ல ஒருத்தர் ஐடா ஸ்கட்டர். புகழ்பெற்ற வேலூர் சிஎம்சி உருவாகக் காரணமாக இருந்தவங்க. ரெண்டாவது, டாக்டர் அன்னா சாரா கூக்ளர்.
இவங்க 1886ம் ஆண்டு 23 வயது இளம்பெண்ணாக ஆந்திராவுல உள்ள குண்டூருக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆசிரியராக வேலை செய்றாங்க. அப்ப பிரவசத்துல நிறைய இளம்பெண்களின் இறப்புகளைப் பார்க்கிறாங்க.
அதனால், திரும்பி அமெரிக்காவிற்குப் போய் மருத்துவம் படிச்சிட்டு வந்து இந்திய பெண்களுக்குச் சேவை செய்றாங்க. குண்டூர்லயே மருத்துவமனையும் கட்டுறாங்க. அதுவே இப்ப கூக்ளர் மருத்துவமனைனு அழைக்கப்படுது.மூன்றாவது, லூயிஸ் எல்லர்மேன். இவங்க 1912ம் ஆண்டு முதல் பர்கூர்ல ஒரு குடிசைக்குள்ள கிளினிக் ஆரம்பிச்சு காலரா, பிளேக் நோய்களுக்கு மருத்துவம் பார்க்கிறாங்க.அடுத்து மிஸ் டோரா பூம்ஸ்ரா அப்படினு ஒரு அம்மா. ராணிப்பேட்டையில் விஆர்வினு ஒரு பெண்கள் பள்ளியும், ஆசிரியர் பயிற்சி மையமும் இருக்குது. அங்க 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்து பெண் கல்விக்காக பாடுபடுறாங்க இவங்க.
இந்த ஐந்து பேரும் திருமணம் செய்துக்காமல் தங்கள் வாழ்வை அர்ப்பணிச்சவங்க. இவங்களைப் பத்தியும், இவங்க என்ன சேவை செய்தாங்கனும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் குறித்தும் என் ஆவணப்படத்துல சொல்றேன்...’’ என்றவர், மருத்துவர் ஆலிஸ் குறித்து தொடர்ந்தார்.‘‘ஆலிஸ் பிறந்தது நாகர்கோவில்ல. அவங்க அப்பா ரிச்சர்ட் ஹென்றி பிராயர் அங்க மிஷனரியாக இருந்தார். அவரின் பூர்வீகம் ஜெர்மனி. வாழ்க்கையின் பொருட்டு அமெரிக்காவிற்கு குடியேறுகிறார்.
பிறகு, அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மிஷனரியாக வர்றார். 1925ம் ஆண்டிலிருந்து 1956 வரை மிஷனரியாகப் பணியாற்றுகிறார். அப்ப 1931ல் அமெரிக்காவில் இருந்து வந்த மிஸ் ஏர்னா மிடில்டா என்ற பெண்ணை சந்திக்கிறார்.செல்வச் சீமாட்டியான அந்தப் பெண் கப்பல்ல உலகம் சுத்திட்டு வர்றாங்க. அப்படி தூத்துக்குடிக்கு வந்தவங்க, ஒரு ஃப்ரெண்டைப் பார்க்க நாகர்கோவில் போறாங்க. அங்க மிஷனரியாக இருக்கிற ரிச்சர்ட் ஹென்றியைச் சந்திக்கிறாங்க.
அப்ப ரெண்டு பேரும் பேச, பிடிச்சுப் போயிடுது. அப்புறம் அமெரிக்கா போய் 1931ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி திருமணம் பண்ணிட்டு மீண்டும் நாகர்கோவில் வந்து சேவையைத் தொடர்றாங்க. இவங்களுக்கு முதல்ல 1932ல் ஒரு ஆண் குழந்தை பிறக்குது. மூன்றாண்டுகள் கழித்து இரண்டு பெண் குழந்தைகள் ட்வின்ஸாக பிறக்கிறாங்க. அப்புறம், நான்காவதாக 1938ம் ஆண்டு ஆலிஸ் பிறக்கிறாங்க.
அவங்க அக்காக்களும், அண்ணனும் கொடைக்கானல்ல லாக் எண்ட் பள்ளியில் படிக்கிறாங்க. மேற்கொண்டு படிக்க கொடை இன்டர்நேஷனல் பள்ளிக்குப் போறாங்க. ஆலிஸும் தன் ஆறாவது வயதில் கொடைக்கானல் லாக் எண்ட் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்றாங்க. 1948ல் நான்காவது முடிக்கிறப்ப அவங்க அண்ணன் பள்ளிப் படிப்பை முடிச்சிடுறார். அப்ப இந்தியாவில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பில்லை. அதனால் அவங்க அப்பா நான்கு பிள்ளைகளையும் அழைச்சிட்டு அமெரிக்கா போறார். அங்க படிக்க வைக்கிறார். மனைவி ஏர்னாவின் பராமரிப்பில் குடும்பத்தை விட்டுவிட்டு மறுபடியும் இங்க மிஷனரியாக வந்திடுறார்.
1948ல் இருந்து 1968ம் ஆண்டு வரை ஆலிஸ் அமெரிக்காவில் படிக்கிறாங்க. அவங்க அண்ணன் ஆசிரியர் ஆகிறார். ஒரு அக்கா எக்ஸ்ரே டெக்னீஷியனாகவும் இன்னொரு அக்கா ஆசிரியராகவும் ஆகிடுறாங்க. அவங்க மூணு பேரும், அவங்க விருப்பப்படி திருமணம் செய்துக்கிறாங்க.ஆனா, ஆலிஸ் மருத்துவம் முடிச்சிட்டு அப்பா மாதிரி இந்தியா வந்து மிஷனரி சர்வீஸ் பண்ணணும்னு ஆசைப்படுறாங்க. இதற்கிடையில் டாக்டர் ஐடா ஸ்கட்டரைப் பத்தின நூல் ஒன்றையும் வாசிக்கிறாங்க. இதனால், இந்தியா வந்து சேவை செய்யும் ஆசை வலுப்படுது.
அப்ப எல்சிஎம்எஸ்னு லூத்ரன் சர்ச் மிஷனரி சொசைட்டிக்கு எழுதி கேட்குறாங்க. அந்நேரம் ஆம்பூர்ல பெதஸ்டா மருத்துவமனை இந்த எல்சிஎம்எஸ் மிஷனரிகளால் 1919ல் தொடங்கி நடந்திட்டு வருது. அப்ப பெதஸ்டாவுல இருந்த டாக்டர் புஷ்ஷல், ‘இங்குள்ள மக்கள் ரொம்ப ஏழ்மையானவங்க. கிராமத்திலிருந்து இந்த மருத்துவமனைக்கு வர சிரமப்படுறாங்க. குறிப்பாக குழந்தையைப் பெத்தெடுத்து ஊசி போட வருவதற்கு துன்பப்படுறாங்க. நமக்கு யாராவது கம்யூனிட்டி உதவி செய்கிறமாதிரி ஒரு டாக்டர் அவசியம்’னு எல்சிஎம்எஸ் மிஷனரிக்குக் கடிதம் எழுதுறார்.
இந்நேரம்தான் ஆலிஸும் இந்தியா போய் சர்வீஸ் பண்ண விருப்பப்படுறேன், மருத்துவமும், கூடவே சமூக மருத்துவக் கல்வியும் முடிச்சிருக்கேன்னு அப்ளை பண்றாங்க. அப்படியாக அவங்க 1968ம் ஆண்டு ஆம்பூர் வர்றாங்க. இங்க லேடீஸ் பங்களால தங்குறாங்க. கடைசிவரை அவங்க அங்கதான் தங்கியிருந்தாங்க. இவங்க மக்களைப் போய் பார்க்கிறப்ப மொழிச் சிக்கல் வருது. உடனே மதுரை பல்கலைக்கழகம் போய் ஓராண்டு காலம் தமிழ் எழுத, படிக்க, பேசனு கத்துக்கிறாங்க. புலவர் சண்முகம் பிள்ளை என்பவர்தான் அவங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்குறார்.
தமிழ் கத்துக்கிட்டு வந்து 1969ல் சர்வீஸை தொடங்குறாங்க. அப்ப ஜீப் ஓட்டிக்கிட்டு அவங்களே கிராமங்களுக்குப் போறாங்க. ஒரு இளம்பெண் ஜீப் ஓட்டிட்டு கிராமங்களுக்கு வர்றது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுது. ஒரு நாளைக்கு ஏழெட்டு கிராமங்களுக்குப் போறாங்க.பெதஸ்டா மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் லிஸ்ட்டை வாங்கிட்டு அந்தக் குழந்தைகளைத் தேடிப் போய் தடுப்பூசி போடுறாங்க. அப்ப அந்தக் கிராமத்துலயே சுகப்பிரசவமாகப் பிறந்த குழந்தைகளுக்கும் சேர்த்து தடுப்பூசி போடுறாங்க.
அந்நேரம் ஆம்பூர் பகுதிகள்ல மக்கள் போலியோ, அம்மை, கக்குவான் இருமல், இரண ஜன்னி உள்ளிட்ட நோய்களால் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கிறாங்க. நிறைய மரணங்களும் நடக்குது. இவை வராமல் தடுக்க ஆலிஸ்தான் தடுப்பூசி போடுறாங்க.அப்புறம், கொஞ்ச நாட்கள்ல குழந்தைகளுக்கு பலம் இல்ல, தாய்மார்கள் உடல்லயும் வலுவில்லனு தெரிஞ்சுக்கிறாங்க. அதுக்கு ஊட்டச்சத்து அவசியம்னு உணர்றாங்க. இதுக்கு அந்த மக்கள்கிட்ட சில மூடநம்பிக்கைகளும் இருந்திருக்கு.
மீன், மட்டன், கோதுமை எல்லாம் சூடுனு நினைச்சிருக்காங்க. ஆலிஸ் தன்னை அமெரிக்கர்னு சொல்லிக்கிறதில்ல. நாகர்கோவில்காரினுதான் சொல்லிப்பாங்க.
அவங்க அந்த மக்கள்கிட்ட ‘எங்க ஊர்ல மூணு வேளையும் மீன்தான் சாப்பிடுவாங்க. அவங்க குழந்தை பெத்துக்கலயா... வளர்க்கலயா... வடஇந்தியாவில் மூணு வேளையும் கோதுமை ரொட்டிதான் சாப்பிடுறாங்க. அவங்களுக்குக் குழந்தைகள் பொறக்கலயா’னு கேட்டு புரிய வைக்கறாங்க.
அப்புறம், தாய்ப்பாலின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சொல்றாங்க. இதுக்காக தொடங்கின திட்டத்தின் பெயர் ‘இன்ஃபன்ட் கேர் புரோகிராம்’. ஐசிபினு சொல்வாங்க. இதுக்காக ரெண்டு நர்ஸ்களுக்குப் பயிற்சி கொடுத்து கூடவே வச்சிருந்தாங்க. அதுமட்டுமல்ல. போகிற கிராமங்கள்ல உள்ள குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கிஃப்ட் கொடுப்பதையும் ஆலிஸ் வாடிக்கையாக வச்சிருந்தாங்க. குறிப்பாக குளிர்காலத்துல ஸ்வெட்டர், கம்பளி போர்வை எல்லாம் கொடுத்திருக்காங்க. அதனால, மக்கள் எல்லோரும் அவங்கள ‘மிஸ்ஸியம்மா’னு செல்லமாக அழைச்சிருக்காங்க.
இவ்வளவு பணிகள் அவங்க முன்னெடுத்தும், ஊட்டமான உணவு இல்லாமல் சத்துக் குறைபாடு இருந்திருக்கு. அதனால, ஹைதராபாத் போய் ஒரு பயிற்சி எடுத்திட்டு வந்து சத்துமாவு தயாரிக்கிறாங்க.கோதுமை, மக்காச்சோளம், வேர்க்கடலை உள்ளிட்ட தானியங்களைக் கொண்டு சத்துமாவு தயாரிச்சு அதில் பால்பவுடர் சேர்த்து குறைந்த விலைக்கு கொடுக்குறாங்க. அன்னைக்கு ஒரு பாக்கெட் 25 பைசாவுக்கு கொடுத்திருக்காங்க. அது 50 பைசா, ஒரு ரூபாய்னு மாறி, சமீபத்துல 60 ரூபாய்க்குக் கொடுத்தாங்க.
அந்த சத்துமாவால் வலுவான பலபேர் இருக்காங்க. ஆலிஸ் இதற்கு சத்துமாவுனுதான் பெயர் வச்சாங்க. ஆனா, மக்களோ ஆலிஸை மட்டுமில்லாமல் அந்த மாவுக்கும் ‘மிஸ்ஸியம்மா’னு பெயர் வச்சாங்க. ‘ரெண்டு மிஸ்ஸியம்மா கொடு’னு கேட்டு வாங்கிட்டு போவாங்க. அது இன்னும் சுருங்கி ‘மிஸிமா’னு மாறுச்சு...’’ என்ற சாரோன், நிறுத்தி நிதானமாகத் தொடர்ந்தார்.
‘‘லாக்டவுன் வரை தொடர்ந்து வேலை செய்தாங்க. லாக்டவுன்ல ஒரு நாள் இரவு கீழ விழுந்து இடுப்பெலும்பு உடைஞ்சிடுச்சு. அதன்பிறகு வீல்சேர்ல இருந்தபடியே பணிகளைத் தொடர்ந்தாங்க.
இவங்க லேடீஸ் பங்களாவுல இருந்தப்ப கூட நிறைய பெண் மிஷனரிகள் தங்கியிருந்தாங்க. அவங்க எல்லாம் குறிப்பிட்ட காலத்துல ரிசைன் பண்ணிட்டு தாய் நாட்டுக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.
ஆனா, ஆலிஸ் மட்டும் போகல. ஏன்னா, அவங்க அந்தந்த கிராமத்துக்கு சரியான நாளுக்குப் போயிட்டு இருந்திருக்காங்க. குழந்தைகளும், பெண்களும் தனக்காகக் காத்திட்டு இருப்பாங்கனு நினைச்சு மக்கள் சேவையே முக்கியம்னு இருந்திட்டாங்க.அவங்ககிட்ட ‘கல்யாணம் ஏன் பண்ணல’னு கேட்டேன். அதுக்கு அவங்க, ‘எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும், குழந்தைங்க பெத்துக்கணும்னு விருப்பமாகத் தான் இருந்தது. ஆனா, ஒரு பெண் திருமணம் பண்ணிக்கிட்டால் அவள் குடும்பத்தையும், குழந்தையையும் பராமரிக்கிறதுதான் முதல் வேலைனு இருக்கிற மனநிலை இந்திய ஆண்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஆண்களுக்கும் இருக்குது.
அப்படி இல்லாத ஒரு ஆளை நான் சந்திச்சிருந்தால்... அவர் என்னிடம், நீ போய் சர்வீஸ் பண்ணு, நான் உனக்குத் துணை நிற்கிறேன்னு சொல்லியிருந்தால்… நிச்சயம் திருமணம் செய்திருப்பேன்.
குடும்ப வாழ்க்கையா, சமூக வாழ்க்கையானு வந்தப்ப நான் சமூக வாழ்க்கைனு முடிவு பண்ணினேன்’னு சொன்னாங்க. ஆலிஸுக்கு பிராணிகள் மீதும் ரொம்பப் ப்ரியம். 1968ல் வந்ததும் கோழிகள், நாய்கள், பூனைகள் எல்லாம் வளர்த்தாங்க. அதுக்கு அவங்க அக்கா பசங்க, அண்ணா பசங்க பெயர்களை வச்சு உறவினர்கள் கூடவே இருக்கிறமாதிரி நினைச்சாங்க.
இந்த உயிரினங்கள் ஏதாவது இறந்திட்டால் ரொம்ப வருத்தப்பட்டு கண்ணீர் விடுவாங்க. இவங்க பங்களா பின்னாடி நிறைய நாய்களுக்கான கல்லறைகள் உள்ளன. இவங்க மருத்துவம் பார்த்திட்டு இருந்த நேரம் இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு கொண்டு வர்றாங்க. அது ஒருபுறம் இருந்தாலும் படிப்படியாக குழந்தையின்மை அதிகரிப்பதையும் கவனிக்கிறாங்க. இதை சரிசெய்ய வேண்டி ஒரு கோர்ஸ் போய் படிச்சிட்டு வந்து குழந்தையின்மைக்கு ஒரு மருத்துவம் தொடங்குறாங்க.
இந்த சிகிச்சையை மட்டும் அவங்க லேடீஸ் பங்களாவில் வச்சே செய்தாங்க. ஏன்னா, சம்பந்தப்பட்டவங்க ஊருக்கே போய் செய்தால் ஊர் முழுக்க குழந்தையின்மைனு தெரிஞ்சிடும்னு பயந்தாங்க.வாரத்துக்கு 50 தம்பதிகள் ஆலிஸைப் பார்க்க வருவாங்க. இதை நான் நேரடியாகவே பார்த்திருக்கேன். அவங்ககிட்ட பேட்டியும் எடுத்திருக்கேன்.15 ஆண்டுகள் குழந்தை இல்லாதவங்ககூட அம்மாகிட்ட வந்ததும் குழந்தை பிறந்திருக்குனு சொன்னாங்க. செவ்வாய்க்கிழமை தோறும் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிச்சாங்க. 1990களில் இருந்து சுமார் 35 ஆண்டுகள் குழந்தையின்மைக்கான சிகிச்சை செய்தாங்க.
இதனால், இந்தப்பகுதி மக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆலிஸ்னு அவங்க பெயரைச் சூட்டி மகிழ்ந்தாங்க. என் சித்தப்பா பெண்ணின் பெயர்கூட ஆலிஸ்தான். ரொம்ப எளிமையாக இருப்பாங்க. அவங்ககிட்ட ஆண்ட்ராய்டு போன் கூட கிடையாது. ஒரே ஒரு பட்டன் போன் வச்சிருந்தாங்க. அதுவும் அவங்க கையில் இருக்காது. 2015ம் ஆண்டு பெதஸ்டா மருத்துவமனை மூடின பிறகு அங்க மின்சாரமும், குடிநீரும் நிறுத்தப்பட்டது.
அதனுடன் சேர்ந்த இந்த லேடீஸ் பங்களாவிலும் எல்லாம் நிறுத்தப்பட்டுச்சு. மின்சாரமும், குடிநீரும் இல்லாமல் பலகாலம் சிரமப்பட்டாங்க. அப்பவும் அவங்க சந்தோஷமாக இருந்தாங்க. மொத்தமே ஐந்து ஃப்ராக்தான் வச்சிருக்காங்க. அதைத்தான் திரும்பத் திரும்ப துவைச்சுப் போட்டுப்பாங்க. ரொம்ப நீட்டாக இருப்பாங்க.
தனக்கென எதைப் பத்தியும் கவலைப்படாம மற்றவங்களுக்காக நிறைய உதவிகள் செய்தாங்க. அதனால்தான் அமெரிக்காவில் ஆலிஸை ‘ஐஇஎல்சியின் அன்னை தெரசா’னு சொல்றாங்க. தன் கடைசி மூச்சு வரை மருத்துவத்தை சேவையாகச் செய்தவர் ஆலிஸ். அவரைப்போல இன்னொருவரை இந்த மண்ணுலகம் இனி காணுமானு தெரியல. ஆம்பூர் பகுதி மக்கள் தங்கள் மிஸ்ஸியம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுவாங்க...’’ எனக் குரல் உடைந்து வேதனையாகச் சொன்னார் சாரோன்.
பேராச்சி கண்ணன்
|