காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது...
இயக்குநர், தயாரிப்பாளர் என சரி விகிதத்தில் சினிமாவை நேசிப்பவர் பா.இரஞ்சித். இவருடைய ஒவ்வொரு படமும் சமூக மாற்றத்துக்கான படமாக இருப்பது தனிச்சிறப்பு. அந்த வரிசையில் இவருடைய தயாரிப்பில் ‘தண்டகாரண்யம்’ வெளிவரவுள்ளது.  ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இயக்குநரான அதியன் ஆதிரை இயக்கி யுள்ளார். இவர் எழுத்தின் மீது பேரார்வம் கொண்டவர். சொந்தமாக 3000க்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார். பல்வேறு நூலகங்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கியவர். ரிலீஸ் வேலையில் பரபரப்பாக இருந்த அதியன் ஆதிரையிடம் பேசினோம்.
 எழுத்து ஆர்வம் எப்படி வந்துச்சு?
என்னுடைய சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம். மிகவும் பின் தங்கிய குடும்பம். என்னுடைய தாத்தா மாயவன் கூலித் தொழிலாளி. ஜல்லி கல் உடைக்கும் வேலை. சுற்று வட்டார கிராம மக்களுக்கும் அதுதான் பிரதான வேலை. களைப்போடு வேலை முடித்து வரும் அவர்களுக்கு இரவு நேரத்தில் இராமாயணம், மகாபாரதம், நல்ல தங்காள் என பல புராணக் கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்லி எல்லோரையும் கட்டிப்போடுவார்.  அவர்களிடமிருந்து சிரிப்புச் சத்தமும் கேட்கும். அழுகையின் குரலும் கேட்கும். அந்தச் சூழலில் தாத்தாவின் மடியில் அமர்ந்து கேட்ட அந்தக் கதைகள் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோடு பிற்காலத்தில் இயக்குநராக நானும் கதை சொல்ல முடியும் என்கின்ற நம்பிக்கையைக் கொடுத்துச்சு.
 கல்லூரி காலக்கட்டத்தில் புத்தகங்கள் பரிச்சயமாச்சு. அப்பனின் கைகளால் அடிப்பவன், யாரோ ஒருவன் யாரோ ஒருத்தி என இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளது. அதில் ‘அப்பனின் கைகளால் அடிப்பவன்’ நூல் லயோலா கல்லூரியில் பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. என்னுடைய நூல்களை பல மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைக்காக பயன்படுத்தியுள்ளார்கள்.
சினிமாவை யாரிடம் கத்துக்கிட்டீங்க?
சினிமாவை மொத்தமா கத்துக்க முடியாது. நாளுக்கு நாள் அப்டேட் வந்துகொண்டே இருக்கும். தினம் தினம் புது விஷயங்களை சொல்லிக் கொடுப்பதுதான் சினிமா.ஆரம்பத்தில் சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது. ஆனால், அது என்னுடைய சிந்தனைகளிலிருந்து விலகியிருந்துச்சு.
அந்த இயக்குநர்களின் எண்ண ஓட்டங்கள், ரசனை சினிமாவுக்குரியது என்றாலும் அவர்களுடன் என்னால் இணைந்து வேலை செய்ய முடியவில்லை.மண்ணும் மக்களுமாக வாழ்ந்தவன் நான். அந்த எதார்த்த வாழ்க்கையைத் தேடித்தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால், என்னுடைய மன ஓட்டத்திலிருந்து சினிமா வட்டாரம் விலகி இருந்ததால சினிமா செட்டாகாதுன்னு ஊருக்கு திரும்பிவிட்டேன். இரும்புக் கடையில் வேலை, அனிமேஷன் என கிடைச்ச வேலைகளைச் செய்தேன். அந்த சமயத்தில் ஆர்ட் டைரக்டர் இராமலிங்கம் அறிமுகம் கிடைச்சது. அவர் பா.இரஞ்சித்திடம் அழைத்துச் சென்றார்.‘அட்டகத்தி’யில் வேலை கிடைச்சாலும் பழைய சினிமா ஃபார்முலா ஞாபகத்துக்கு வந்ததால மீண்டும் ஊருக்கு வந்துவிட்டேன். பா.இரஞ்சித் பலமுறை அழைத்தும் நான் போகவில்லை. ‘அட்டகத்தி’ வந்தபிறகு அந்தப் படத்தின் எதார்த்தம் பிடிச்சு பா.இரஞ்சித்திடம் சேர்ந்தேன்.
இரண்டாவது படம் செய்ய ஏன் இவ்வளவு தாமதம்?
என்னுடைய முதல் படம் ‘குண்டு’ நல்ல வசூல் கொடுத்துச்சு. அந்தப் படம் வெளியான முதல் நாள் தனுஷ் சாரிடமிருந்து ஃபோன் வந்துச்சு. ஆனால், அப்போது என்னிடம் கதை இல்லாததால ரெடி பண்ணிட்டு வர்றேன்னு சொன்னேன்.
அவரும் டைம் கொடுத்தார். கதை ரெடி பண்ணிட்டு போவதற்குள் கொரோனா வந்துடுச்சு. நிலைமை சரியான சமயத்துல தனுஷ் சார் ‘கர்ணன்’ல பிசியா இருந்தார்.ஆர்யா, கார்த்தி, சசிகுமார் என முக்கியமான ஹீரோக்களும் கதை கேட்டார்கள். கொரோனா வந்ததால எல்லோருக்கும் கால்ஷீட் சிக்கல் இருந்துச்சு. உடனே படம் பண்ணாமல் போனதற்கு அதுதான் காரணம். ‘தண்டகாரண்யம்’ எதைப்பற்றி பேசுகிறது?
இது எளிய மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம். தண்டகாரண்யம் என்பதற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கு. இதிகாசத்துல இராவணன் சீதையைத் தூக்கிய வனத்துக்கு தண்டகாரண்யம்னு பேர். குற்றவாளிகள் வாழும் இடத்தை தண்டகாரண்யம்னு சொல்லுவாங்க. ‘தண்டம்’ என்றால் குற்றம், ‘ஆரண்யம்’ என்றால் காடு. தண்டத்துக்கு வில் என்ற அர்த்தமும் இருக்கு. தெற்கு ஆசியாவின் அடர்ந்த காடு என்றும் சொல்லலாம்.
இந்தக் காடு ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட் என பல மாநிலங்களை உள்ளடக்கியது.இதில் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொல்லியுள்ளேன். முறைசாரா தொழிலாளிகள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என பல துறைகளில் பல வருடங்கள் அவர்கள் அரசு வேலையில் இருப்பார்கள். ஆனால், பணி நிரந்தரம் இருக்காது. அது மாதிரி ஏ பி டபிள்யூன்னு ஒரு வேலை இருக்கு. அதாவது காடுகளைக் கண்காணிக்கும் வேட்டை தடுப்பு காவலர்கள். தமிழ்நாட்டிலும் அந்த மாதிரி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் அதில் இருப்பவர்கள் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
காடுகளை தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் பாரா பார்க்கணும். ஒவ்வொரு வன அதிகாரியின் அதிகாரத்தின் கீழ் இருபது, முப்பது பேர் இருப்பார்கள். அந்தத் தொழிலாளர்கள் ஐந்து வருடம், பத்து வருடம் என வேலை செய்தாலும் பணி நிரந்தரம் இருக்காது. பத்து வருஷம் காட்டில் இருக்கிற தொழிலாளி வீட்டுக்குப் போக முடியாது. காடு, வீடு வெவ்வெறு இடமாக இருக்கும். வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.
திடீர்ன்னு வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள். அவர்களுடைய குடும்பங்களில் சொல்ல முடியாத பல துயரங்கள் நடந்துள்ளது. அப்படி வேலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒருவன் வேலை தேடி வட இந்தியாவுக்குப் போகிறான். அங்கு அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படம்.
தினேஷ், கலையரசன் இருவரும் ‘நீலம்’ தயாரிப்பு என்பதால் உள்ளே வந்தார்களா?
கதை ரெடியானதும் நிறைய ஹீரோ தேடினேன். சில ஹீரோக்களுக்கு கதை பிடிச்சிருந்தது. ஆனால், கதை பேசும் அரசியல் காரணமா நடிக்கத் தயங்கினாங்க. சிலர் நடிக்கிறேன்னு சொன்னாலும் கால்ஷீட்ல பிரச்னை இருந்துச்சு.கலையரசன் என்னுடைய தம்பி. அதுக்காக அவரை உள்ளே கொண்டு வரல. என்னைப் பொறுத்தவரை கதைக்கு செட்டானாதான் எடுப்பேன். லுக் டெஸ்ட்ல முருகன் கேரக்டருக்கு கலையரசன் சரியா இருந்தார்.
தினேஷ் எனக்கு பிடிச்ச நடிகர். என்னுடைய யோசனையைப் புரிஞ்சு கதாபாத்திரத்துக்கு நேர்மை செய்பவர். இதுல சடையன் என்ற கேரக்டர்ல வர்றார்.கதையில் தீனி இருந்ததால இருவரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. படத்துல ஒரு காட்சி. 300 பேர் வேடிக்கை பார்க்கிறாங்க. எல்லோருக்கும் கன்னடம் மட்டுமே தெரியும். ‘கட்’ சொன்னதும் வேடிக்கை பார்த்தவங்களும், யூனிட்ல இருந்தவங்களும் அழ ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான் அவங்க இரண்டு பேருடைய ஆக்டிங் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம்.
வின்சு ரேச்சல் கலையரசனுக்கு ஜோடியா வர்றாங்க. மாடலிங் பேக்ரவுண்ட் உள்ளவர். இதுல அறிமுகப்படுத்துகிறேன். ரித்விகா, தினேஷ் ஜோடியா வர்றாங்க.ஷபீர், பாலசரவணன் இருவருக்கும் முக்கியமான ரோல். இவர்களுடன் அருள்தாஸ் ‘சார்பட்டா’ முத்துக்குமார், கவிதா பாரதி, யுவன் மயில்சாமி இருக்காங்க.ஆர்ட்டிஸ்ட்ஸ் அனைவரும் பெரிய சப்போர்ட் கொடுத்தாங்க. கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் ஒரு சிறிய கிராமம். அந்த ஊருக்குள் பஸ் போனதில்லை. கேரவன் போக முடியாது.
ஷூட்டிங் வண்டி போவதற்காக சொந்த செலவில் 8 கிலோ மீட்டர் ரோடு போட்டோம். அங்குள்ள மக்கள் உடை மாற்றுவதற்கு தங்கள் வீட்டை கொடுத்தார்கள். அங்குள்ளவர்கள் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள். அதனால நாங்களும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டோம். சினிமாக்களில் இதுவரை காண்பிக்கப்படாத லொகேஷனா இருக்கும்.
இசை ஜஸ்டின் பிரபாகர். ‘குண்டு’ல இருவரும் சேர்ந்து பண்ண வேண்டியது. சில காரணத்துல சேர்ந்து பண்ண முடியல. 5 பாடல்கள். பிரமாதமா கொடுத்தார். பேக்ரவுண்ட் மியூசிக்கும் பேசப்படும்.ஒளிப்பதிவு பிரதீப் கே. ராஜா. ‘சேத்துமான்’, ‘ரைட்டர்’ போன்ற படங்கள் செய்தவர். இது நீண்ட நிலப்பரப்புடன் தொடர்புடைய கதை என்பதால் கேமராமேனுக்கு பெரிய பொறுப்பு இருந்துச்சு. அதை அவரும் புரிஞ்சு பண்ணினார். பாடல்கள் உமாதேவி, தனிக்கொடி, அறிவு. கலை இராமலிங்கம். எடிட்டிங் செல்வா.
தயாரிப்பாளர் பா.இரஞ்சித் படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார்?
நாலஞ்சு தடவை பார்த்துட்டார். ‘கதை படிச்சுட்டு நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு சொல்லலாம். உன் கதையைப் படிச்சதும் ஏன் எனக்கு இப்படி தோணலை’ன்னு சொன்னதோடு டைரக்ஷன் பண்ண ஆசைப்பட்ட கதை என்றும் சொன்னார். ‘‘நீல’த்துக்கு, நல்ல படம் கொடுத்திருக்கீங்க. இந்தப் பிரச்னை நாடு முழுவதும் இருக்கு. படம் பேசப்படும். ஐ லவ் யூ அதியன்’னு விஷ் பண்ணினார்.
எஸ்.ராஜா
|