3 மனைவிகளுடன் ரிக்ஷா ஓட்டும் அப்பா... 2வது மனைவியின் மகன் நான்...
இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரி!
‘‘எங்களது குடும்பத்தில் யாருமே பெரிதாகப் படித்ததில்லை. எங்கள் வீட்டில் கல்வி என்பது ஒரு பேசுபொருளாகக் கூட இருந்ததில்லை. என்னைச் சுற்றிலும் இப்படித்தான் இருந்தனர். என்னுடைய அப்பா ரிக்ஷா ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு மூன்று மனைவிகள். இரண்டாவது மனைவிதான் என் அம்மா. குடும்ப சூழ்நிலை காரணமாக, என்னுடைய தம்பி பாதியிலேயே பள்ளிப்படிப்பை விட்டுவிட்டான்.
 ஆனால், நான் படிப்பை விடவில்லை. மட்டுமல்ல, இரண்டு சகோதரிகளுக்கும் சிறு வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. நான் ஐஏஎஸ் தேர்வில் பாஸாகிவிட்டேன் என்று குடும்பத்தினரிடம் சொன்னபோது யாராலும் நம்ப முடியவில்லை; எல்லோருமே இன்ப அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்...’’ என்கிறார் அன்சார் ஷேக்.எந்த ஒரு மனிதனையும் உயரமான, மதிப்பு வாய்ந்த ஓர் இடத்துக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே இருக்கிறது என்பதற்கு உதாரணம் இவர்.
 தவிர, சரியாகத் திட்டமிட்டு, விடாமுயற்சியுடன் உழைத்தால் எவ்வளவு பெரிய வறுமையையும் தகர்த்து, வாழ்க்கையில் வெற்றி பெறலாம். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடலாக மாறலாம் என்பதற்கு உதாரணமும் இவரே. நம்பிக்கையின் வெளிச்சத்தைப் பாய்ச்சும் அன்சார் ஷேக் யார்?
மகாராஷ்டிராவில் உள்ள ஜல்னா எனும் நகரத்தில், வாழ்ந்து வந்த ஓர் ஏழ்மையான இஸ்லாமியக் குடும்பத்தில் 1994ம் வருடம் பிறந்தார் அன்சார் ஷேக். இவருடைய தந்தை யூனுஸ் ஷேக் அகமது, ரிக்ஷா ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்தார். அம்மா அடீலா ஷேக்கும் விவசாய வேலைகளுக்குப் போய், குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை சமாளித்தார். மூன்று வேளை உணவுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததால் கல்வியைப் பற்றி நினைக்கக்கூட யாருக்குமே நேரம் இல்லை.
ஆனால், அன்சாரோ பள்ளிப்பருவத்திலிருந்தே நன்றாக படிக்கக்கூடிய மாணவராக இருந்து வந்தார். கல்விதான் தன் வாழ்க்கையை மாற்றும்; வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையுடன் படித்தார். அன்சார் படிப்பதற்காக அவரது சகோதரர்களும், சகோதரிகளும் தங்களின் கல்வியைத் தியாகம் செய்து, வேலைக்குப் போய் அன்சாரின் கல்விக்கு உதவினார்கள். வறுமை மட்டுமல்லாமல், சிறுபான்மையினர் என்ற அடையாளமும் அன்சாருக்குத் தடையாக இருந்தது. அவற்றை உடைத்து படித்துக்கொண்டே இருந்தார்.
இத்தனைக்கும் வீட்டில் அமர்ந்து படிக்கக்கூட இடம் இல்லை. அதிகாலையிலே எழுந்து வீட்டுக்கு முன்பு இருந்த தெரு விளக்கு வெளிச்சத்தில், சாலையில் அமர்ந்து படிப்பார் அன்சார். அவருக்குத் தன்னுடைய குடும்பத்தின் மீதோ, வறுமைச் சூழல் மீதோ எந்த வருத்தமும் இல்லை. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து, பள்ளியிலேயே முதன்மையான ரேங்க்கை எடுத்தார். பன்னிரண்டாம் வகுப்பில் 91 சதவீத மதிப்புடன் தேர்ச்சி பெற்றார். புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்று, ஐஏஎஸ் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
அன்சாரின் நிலையை அறிந்து பயிற்சி மையம் கட்டணத்தில் தள்ளுபடி செய்தது. உடன் படித்த நண்பர்களும் பொருளாதார ரீதியாக உதவி செய்தனர். அதனால்தான் மனதளவிலும், உடல் அளவிலும் துவண்டு போகாமல் தன்னால் படிக்க முடிந்தது என்று ஐஏஎஸ் ஆன பிறகு ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் அன்சார். ‘‘கடின உழைப்புக்கு மாற்று ஏதும் இல்லை...’’ என்கிற அன்சார், தினமும் இரவு, பகல் பார்க்காமல் 12 மணி நேரம் படிப்பார். சில நாட்களில் 15 மணி நேரம் வரைகூட படிப்பார். இப்படி மூன்று வருடம் தொடர்ந்து படித்துத்தான் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் அன்சார்.
ஆம்; 2016ம் வருடம் இந்திய அளவில் 361வது ரேங்க்கைப் பெற்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றார். அதுவும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். அப்போது அன்சாரின் வயது 21. இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையையும் தன்வசமாக்கினார்.சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் உள்ள கூச்பிகார் நகரின் அடிசனல் டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட்டாக பொறுப்பெற்றிருக்கிறார் அன்சார். அதனால் அவருடைய கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
த.சக்திவேல்
|