‘அருந்ததி’, ‘த்ரிஷ்யம்’, ‘ரங்கஸ்தலம்’... இதெல்லாம் நான் நடிக்க வேண்டிய படங்கள்...மீண்டும் மந்த்ரா!
‘‘ஷாட் ரெடி... கேமரா...ரோலிங்... ஆக்ஷன்...’’ என்றதும் கூட்டமாக சிறுவர்கள் பட்டாடை உடுத்திக் கொண்டு தூரத்தில் இருந்து ஓடி வந்தனர்.உடன் சிறுவர்களும், பெரியவர்களும் வண்ணமயமான உடைகள் உடுத்திக்கொண்டு நடந்து வர ஆங்காங்கே இளைஞர்கள் இளம் பெண்களைப் பார்த்து சைகை செய்து கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் இருவராக ஒரு பக்கம் டிஜே அருணாச்சலம், இன்னொரு புறம் ஜனனி குணசீலன்.

டிஜே பார்த்து சிரிக்க வெட்கத்துடன் கன்னம் சிவக்கிறார் ஜனனி. எங்கும் திருவிழாக் கோலம். சுமார் 8 அடி உயரத்திற்கு விநாயகர் சிலை என சித்தூரின் ஒரு சிறு தெரு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முழு ஏற்பாட்டுடன் தயார் நிலையில் இருந்தது. ‘உசுரே’ படத்தின் படப்பிடிப்புத் தளம். அன்று விநாயகர் சதுர்த்தி விழா படப்பிடிப்பு. 
ஊரே சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது போல் படத்தில் ஒரு காட்சி. அந்த வேளையில்தான் நாமும் அங்கே சென்றிருந்தோம். அந்தத் தெரு முழுவதுமே சினிமா தெரு எனச் செல்லமாக அழைக்கப்படுகிறது. மௌலி எம் ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், நவீன் டி கோபால் இயக்கத்தில் கிரண் ஜோஸ் இசையில் உருவாகி வரும் படம் ‘உசுரே’. 
டிஜே அருணாச்சலம், ஜனனி, மந்த்ரா, தங்கதுரை உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ‘‘யார் வேணும்னாலும் எந்த வீட்டிற்குள்ளும் போகலாம். சினிமாக்காரங்க என்றாலே தனி மரியாதை கொடுப்பாங்க. எந்த இடத்தில் கேமரா வைத்தாலும் அதற்கேற்ப இடத்தை காலி பண்ணி கொடுப்பாங்க இந்த மக்கள்...’’ புன்னகைக்கிறார் ‘உசுரே’ படம் மூலம் அறிமுக இயக்குநராகும் நவீன்.
‘‘ஆரம்பத்தில் ஷார்ட் ஃபிலிம்ஸ், பிறகு சிம்புதேவன் சார் கிட்ட அஸிஸ்டெண்ட்டாக இருந்தேன். இந்த சித்தூர் பகுதியில் 2015ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம்தான் கதை. இப்போ இவ்வளவுதான் சொல்ல முடியும்... என்னப்பா ரெடியா?’’ எனக் கேட்டுவிட்டு அடுத்த காட்சிக்கு தயாரானார் இயக்குநர்.
 ‘‘இந்த ஊரே திருவிழா மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லோரும் எங்க போனாலும் என்னைச் சுற்றி வளைச்சுக்கிறாங்க. அடுத்த ஷாட் எனக்குதான். பாவாட தாவணியில் நான் நல்லா இருக்கேனா?’’ கேட்டுக்கொண்டு இயக்குநர் கூப்பிடவும் சற்று வேகமாக நடையை எடுத்து வைத்து கூட்டத்தில் மறைந்தார் ஜனனி. ‘‘மேடம் ரெடியா...?’’ என்னும் கேள்வியுடன் கேரவனருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
 ஒன்பது வயதில் சினிமா பயணத்தைத் துவக்கி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 80க்கும் மேலான திரைப்படங்கள்... 90களில் தமிழ் சினிமாவின் கனவுக் கன்னிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் என பல கதைகளை தன்னகத்தே தாங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தது அந்தக் கேரவன். உள்ளே நுழைந்ததும்... ‘‘வாங்க வாங்க... உட்காருங்க... எத்தனை வருடங்கள் ஆனது ஒரு பேட்டி கொடுத்து. எவ்வளவு படங்கள், எத்தனை பேட்டிகள், எத்தனையோ கேரக்டர்கள்... இப்போ நினைத்தாலும் வசந்த காலம் மாதிரி இருக்கு...’’ நினைவலைகளில் மூழ்கியவராக பேசத் துவங்கினார் நடிகை மந்த்ரா.
‘பிரியம்’ படம் மூலம் தமிழில் களமிறங்கியவரை பிரியத்துடன் ஏற்றுக் கொண்டது தமிழ் சினிமா. தொடர்ந்து ‘லவ் டுடே’, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’, ‘கங்கா கௌரி’, ‘ரெட்டை ஜடை வயசு’, ‘தேடினேன் வந்தது’... எனப் பல படங்களில் நடித்தவர் திடீரென தெலுங்கு உலகத்தில் படு பிசியாக மாறி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அப்போது மறைந்த சௌந்தர்யாவுக்கும், மந்த்ராவுக்கும்தான் அங்கே போட்டியே. பின்னர் 2005ல் ஸ்ரீமுனி என்னும் இயக்குநரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை, குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.
தொடர்ந்து சீரியல், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில படங்கள்... என நடித்துக் கொண்டிருந்தவர் இப்போது மீண்டும் தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘உசுரே’ படத்தின் மூலம் லேட்டஸ்ட் அம்மாவாக களமிறங்கி இருக்கிறார் மந்த்ரா. எப்படி இருக்கீங்க?
சந்தோஷமா இருக்கேன். என் பொண்ணுக்கு ஆறு வயசு. கொஞ்சம் விவரம் தெரிகிறதால வீட்டில் இருக்கும் பெரியவங்க பார்த்துக் கிற அளவுக்கு இருக்கா. நானும் அடுத்தடுத்து என்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கி இருக்கேன்.
இங்கே தொடர்ந்து நடிக்கலை. ‘கவலை வேண்டாம்’ படத்தில் காஜல் அகர்வாலுக்கு அம்மாவாக நடிச்சேன். அதன்பிறகு இப்போதான் அடுத்த படம். அந்தப் படத்திலும் இரண்டொரு காட்சிகள்தான். பிறகு தமிழில் தொடர்ச்சியாக நடிக்கலை. தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிச்சுகிட்டுதான் இருக்கேன். மேலும் சீரியலில் கொஞ்சம் பிஸியா இருக்கேன். சினிமா இப்போ எப்படி இருக்கு?
லக்ஸரியா மாறி இருக்கு. அதாவது அந்தக் காலத்தில் படப்பிடிப்புத் தளம் துவங்கி அத்தனையும் எளிமையா இருக்கும். இன்னைக்கு ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்கிறதா இருந்தா கூட குறைந்தது நாலு கேரவன் நிற்குது. ஆனா, நாங்க நடிக்கிற காலத்தில் கேரவன் எல்லாம் பெரிதா கிடையாது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த வீடுகளில் உடை மாத்திக்குவோம். ஒரு சில வேளைகளில் மறைவான மரத்தடிகளில் கூட உடைகள் மாற்றி இருக்கோம். ஆனா, இப்போ அப்படிக் கிடையாது.
நடிகைகளின் வாழ்க்கை அப்போது இருந்ததைக் காட்டிலும் இப்போது மாறி இருக்கா?
30 வயதில் எல்லாம் நடிகைகள் ஹீரோயின்களாக நடித்ததே கிடையாது அப்போ. இப்போ 40களைக் கடந்துகூட நடிகைகள் ஹீரோயின்களாக நடிக்கறாங்க. அதுவே ரொம்ப பெரிய மாற்றம். த்ரிஷா, நயன்தாரா, சினேகா, இப்போ மஞ்சு வாரியர் வரையிலும் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. எப்படி நடிகர்களுக்கு சினிமா என்கிறது தொழிலோ அதேபோல் நடிகைகளுக்கும் வயதைக் கடந்த தொழிலாக சினிமா மாறணும். அதுதான் ஆரோக்கியமான வளர்ச்சியா இருக்கும்.
90களில் சினிமாவில் இருந்த எந்த ஒன்றை இப்போதைய சினிமாத்துறை இழந்திருக்கிறது?
எதார்த்த சூழல். கேரவன் இல்லை என இப்போது இருக்கும் நடிகர் நடிகைகள் சண்டை இடுகிறார்கள். உண்மையில் கேரவன் வந்த பிறகுதான் தூரம் அதிகமாகிருச்சு. முன்பெல்லாம் ஒரு காட்சி முடிஞ்சா போய் உட்காருவதற்கு எந்தக் கேரவனோ, எந்த ஹோட்டல் ரூமோ இருக்காது. ஆங்காங்கே இருக்கும் மரத்தடிகளில் அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்துதான் ஒரு குடும்பமா பேசி சிரித்து மகிழ்வோம்.
இப்பவும் நான் ரொம்ப பெருமையா சொல்லுவேன்... ஒரு படம்எடுக்க மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் எடுத்தால் கூட அத்தனை படமும் ஒரு குடும்பமாதான் எனக்குக் கிடைத்தது.
படம் முடியும் வரை ஒவ்வொருவரும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள் இப்படித்தான் பழகுவோம். அவ்வளவு கதைகள் பேசி சிரித்து சந்தோஷமா இருந்திருக்கோம்.
ஆனால், இப்போ ஒண்ணு மொபைலைப்பார்த்துக்கிட்டே குனிந்தபடி இருக்கோம். இல்லைனா கட் சொன்னவுடன் கேரவனுக்கு நடையைக் கட்டிடறோம். அந்த குடும்ப மொமென்ட் இன்னைக்கு இல்லை.
எத்தனையோ படங்கள் உங்களிடம் வந்திருக்கும்... ஏன்‘உசுரே’?
தமிழிலிருந்து நிறைய கதைகள் வந்துச்சு. ஆனால், அத்தனையும் அக்கா கேரக்டர் அல்லது அம்மா கேரக்டருக்கு கேட்டாங்க. அம்மா, அக்கா என நடிக்கிறது எனக்கு பிரச்னை இல்லை. ஆனால், படத்தில் நமக்கு என்ன பங்கு, படம் முழுமைக்கும் என் கேரக்டர் ஏதாவது தாக்கம் ஏற்படுத்துமா அப்படின்னு யோசிக்கும் பொழுது அப்படி எந்த கேரக்டரும் என்னைத் தேடி வரலை.
ஆனால், ‘உசுரே’ படத்தில் அம்மாவாக நடித்தாலும் எனக்குன்னு ரொம்ப முக்கியத்துவமான கேரக்டரா இருந்தது. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன்.
இந்த இடைப்பட்ட வேளையில் நீங்கள் தவறவிட்ட படங்கள் இருக்கிறதா?
சொன்னால் நம்ப மாட்டீங்க. ‘அருந்ததி’ படத்தில் அனுஷ்காவுக்கு முன்பு என்னிடம்தான் கேட்டார்கள். திருமணமானதால் அப்படியே அதைத் தவிர்த்திட்டேன். தொடர்ந்து ‘த்ரிஷ்யம்’ படத்தில் மீனாவுக்கு பதிலாக நான்தான் நடிக்க வேண்டியது. ஏற்கனவே திருமணம் ஆகி 10 வருடங்கள் கழித்துதான் எனக்கு குழந்தை செட் ஆனது. அப்போதான் நான் கன்சீவ் ஆனேன். அதனால் அந்தப் படத்தையும் தவிர்த்துட்டேன்.
இப்படி நிறைய பெரிய படங்கள்... அதுவும் மெகா ஹிட் அடித்த படங்கள் என்னிடம் வந்து போன சம்பவம் நிறைய இருக்கு. ‘ரங்கஸ்தலம்’ படத்தில் கூட ரொம்ப முக்கியமான கேரக்டர் எனக்கு வந்துச்சு. ஆனால், எதுவும் கையை விட்டுப் போயிடுச்சு அப்படின்னு நான் வருத்தப் பட்டதே கிடையாது.
காரணம், அதைவிட முக்கியமான பொறுப்பா எனக்கு என் குழந்தைதான் கண்ணில் பட்டாள். இப்போ ஸ்கூலுக்கு போகிற அளவுக்கு அவளுக்கு பக்குவம் இருக்கு. இதோ இப்ப நானும் நடிக்க வந்துட்டேன். அவ பெயர் ரிதிமா. தெலுங்கில் ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன். தமிழில் ‘உசுரே’. தொடர்ந்து ரெண்டு சீரியல்களும் ஏற்கனவே நடிச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு சீனியர் நடிகையாக இப்போது நடந்துகொண்டிருக்கும் ஹேமா கமிட்டி சம்பவங்களை எப்படி பார்க்கிறீங்க?
இதில் யாருக்கு என்ன நல்லது நடக்கப் போகுதுன்னு எனக்குத் தெரியலை. ஆனால், வெளியில் வந்து தைரியமா நடந்த உண்மையைச் சொன்னவங்கதான் இப்போ பிரச்னைக்குரிய மக்களா ஒதுக்கப்படுவாங்க. என்ன சொல்லி என்ன நியாயம் கிடைக்கப் போகுது... உங்க பர்சனல் விஷயங்கள்தான் பொதுவெளிக்கு வந்திருக்கு. இதில் லாபம் யாருக்குன்னு பார்த்தால் சோசியல் மீடியாக்களுக்கும், மீடியாக்களுக்கும்தான்.
என்னப் பத்தியே ‘மந்த்ராவுக்கு என்ன நடந்தது தெரியுமா?’,
‘மந்த்ராவுக்கு இந்த நிலையா?’ இப்படியான தம்ப்நெயில்தான் ஏதாவது நிற்கும். சரி, இந்தக் கமிட்டிகள் காரணமா நடக்கும் எல்லா பிரச்னைகளும் நின்னுடுமான்னு கேட்டா... எனக்கு சந்தேகம்தான். எல்லாம் கொஞ்ச நாளைக்கு பேசுவாங்க.
இதைப்பற்றி விவாதிப்பாங்க. அவ்வளவுதான். ஒண்ணு ரெண்டு வருஷங்களுக்குப் பிறகு திரும்பவும் இந்தப் பிரச்னை ஆரம்பிச்சிடும். இதனால் ஏதேனும் நல்லது நடந்தா... பெண்களுக்கு அவங்க எதிர்பார்க்கிற பாதுகாப்பு கிடைச்சா... சந்தோசம்.
ஷாலினி நியூட்டன்
|