உலகின் வலிமையான சிறுமி!
உங்களது கனவுகளை நோக்கிச் செல்லும்போது வயது ஒரு தடையல்ல; வயது என்பது வெறும் எண்தான் என்று முதியவர்கள் ஏதாவது சாதனைகளைச் செய்யும்போதுதான் சொல்வோம்.
இது நான்கு வயதான குழந்தை ஆர்யா எஸ் காடியாவுக்கும் பொருந்தும்.  பளு தூக்குதலில் பல சாதனைகளைச் செய்து வருகிறார் இந்தச் சிறுமி. சமீபத்தில் 30 கிலோ எடையைத் தூக்கி, குறைந்த வயதில் அதிக எடையைத் தூக்கிய பெண் குழந்தை என்ற உலக சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறார். 30 கிலோ எடையைத் தூக்கி, 3 நொடிகள் வைத்திருந்தார். இந்தச் சாதனையைச் செய்யும்போது ஆர்யாவின் வயது, 4 வருடங்கள், 7 நாட்கள்.  தவிர, ஆர்யாவின் பளு தூக்கும் திறமையை அங்கீரிக்கும் விதமாக 2024ம் வருடத்துக்கான ‘இண்டர்நேஷனல் ஸ்டார் கிட்ஸ்’ விருதும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் பிறந்தவர், ஆர்யா. அப்பா சஞ்சய் காடியா ஃபிட்னஸ் விஷயத்தில் தீவிரமாக இருப்பவர். ஆர்யாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே தன்னுடன் ஜிம்மிற்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்துவிட்டார் சஞ்சய். அப்பா உடற்பயிற்சி, பளு தூக்குவதைப் பார்த்து, அதே மாதிரி தானும் செய்ய வேண்டும் என்ற ஆசை ஆர்யாவுக்குள் துளிர்விட்டது.
மூன்று வயதிலிருந்தே அப்பாவுடன் சேர்ந்து பளு தூக்க ஆரம்பித்துவிட்டார். ஆம்; ஆர்யாவின் ஃபிட்னஸ் குரு, பளு தூக்க பயிற்சியளிப்பவர் எல்லாமே அவரது தந்தை சஞ்சய் காடியாதான். தற்போது பளு தூக்குதலில் மாநில அளவில் இரண்டு முறை சாம்பியனாகி, விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ரோல் மாடலாக மாறி வருகிறார் ஆர்யா. இதுபோக தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் இறுதிப்பட்டியல் வரை சென்றிருக்கிறார்.
உலகின் வலிமையான பெண் என்று அழைக்கப்படும் ரெபெக்கா ராபர்ட்ஸ்தான் ஆர்யாவின் ரோல் மாடல். பளு தூக்குதலில் பல சாதனைகளைச் செய்தவர் ரெபெக்கா. 2021 மற்றும் 2023ல் நடந்த உலகின் வலிமையான பெண்ணுக்கான போட்டியில் பங்கேற்று, பட்டத்தை தன்வசமாக்கியிருக்கிறார் ரெபெக்கா. அதிகபட்சமாக 280 கிலோ வரைக்கும் தூக்கியிருக்கிறார். இப்படியான ரெபெக்காவைத்தான் தனது ரோல் மாடலாக வைத்து, இயங்கி வருகிறார் ஆர்யா.
த.சக்திவேல்
|