முன்னாள் ஊழியரை மீண்டும் பணியமர்த்த ரூ.22,000 கோடி கொடுத்த கூகுள்!
‘த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’தான் இச்செய்தியை கொளுத்திப் போட்டிருக்கிறது.நோம் ஷஜீர்... இந்தப் பெயர்தான் இன்று ஈரேழு உலகிலும் ஹாட் டாபிக்.AI உலகில் நோம் ஷஜீர் மிகப் பிரபலமானவர். 48 வயதான நோம் ஷஜீர், கடந்த 2000ம் ஆண்டு கூகுளில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்தார். இவர் தனது சக ஊழியர் டேனியல் டி ஃபிரேடோஸுடன் சேர்ந்து ஒரு சாட் பாட் (CHAT BOT) உருவாக்கினார். இதை வெளியிட கூகுள் நிறுவனம் மறுத்ததால் கடந்த 2021ம் ஆண்டு கூகுளை விட்டு இருவரும் விலகினர்.

பின்னர் கேரக்டர்.AI (Character.AI) எனும் நிறுவனத்தை இருவரும் சேர்ந்து தொடங்கினர்.தொடங்கிய சில வருடங்களில் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர் மதிப்பை அடைந்த கேரக்டர். AI, சிலிக்கான் வேலியில் ‘நீ பொட்டு வைச்ச தங்க குடம்...’ கணக்காக கெத்து ஸ்டார்ட் அப் நிறுவனமாக நின்றது.  இந்த நிலையில் நோம் ஷஜீர் மற்றும் டேனியல் டி ஃபிரேடோஸ் ஆகிய இருவரும் கூகுளின் AI யூனிட்டான டீப்மைண்டில் சேர்ந்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கேரக்டர்.A1 நிறுவனத்தை வாங்கி அந்நிறுவனம் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உரிமம் கோரியுள்ளது. இதனைத் தொடர்ந்து நோம் ஷஜீர் கூகுளில் பணிபுரிய $ 2.7 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக ‘த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கூறியுள்ளது.நோம் ஷஜீரைப் பணியில் சேர்ப்பதற்காகவே கேரக்டர். AI நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர்.கூகுள் நிறுவனத்தின் முந்தைய சி இ ஓ எரிக் ஷ்மிட் கூட நோம் ஷஜீரின் திறமையில் மிகவும் கவரப்பட்டார். அவர் நோமை மிகவும் நம்பினார். அவரும் மனிதனைப் போல உரையாடும் சாட் பாட்டான (CHAT BOT ) மீனாவை (Meena) உருவாக்கினார். பாதுகாப்பு அம்சங்களால் இது வெளியிடப்படவில்லை.
தற்போது நோம் ஷஜீர், கூகுளின் ஜென் AI ஆன ஜெமினியின் அடுத்த வெர்ஷனை மேம்படுத்தும் பணியில் உள்ளதாகத் தெரிகிறது. இது ஓபன்AI இன் ChatGPTக்கு போட்டியாக இருக்கும் எனக் கூறுகிறார்கள்.இப்படியாக கூகுள் நிறுவனம் தன்னுடைய முன்னாள் ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க 22,000 கோடி கொடுத்ததுதான் இப்போது டெக் உலகில் ஹாட் டாக்.l
காம்ஸ் பாப்பா
|