Must Watch



குகி

‘கான்’ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தி திரைப்படம், ‘குகி’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண், குகி. அவளது வயது 16. பல்வேறு கனவுகளுடனும், ஆசைகளுடனும் குகியின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. சப்தரிஷி  என்ற பையன் மீது காதல் வயப்படுகிறாள், குகி. சப்தரிஷியும் குகியின் காதலை ஏற்றுக்கொள்கிறான். போன் மெசேஜ் வழியாகவும், அடிக்கடி சந்தித்தும் தங்களின் காதலை வளர்த்துக்கொள்கின்றனர்.

தன் மகள் காதல் வயப்பட்டிருப்பதை குகியின் அப்பா அறிந்துகொண்டு, மகளுக்கு நல்லவிதமாக சில அறிவுரைகளை வழங்குகிறார். இந்நிலையில் திருவிழாவிற்கு தன் காதலனை வரச் சொல்கிறாள் குகி. அவன் வரத் தாமதமாகிறது. தன் வண்டியை எடுத்துக்கொண்டு, காதலனை அழைத்து வர இருட்டான ஒரு சாலையில் வண்டியில் செல்கிறாள். அந்த சாலையில் மது அருந்திவிட்டு நான்கு பேர் கும்மாளம் அடித்துக்கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவரின் மீது வண்டியை இடித்துவிடுகிறாள். அவர்கள் குகியைக் கொடூரமாக வன்புணர்வு செய்து விட, சூடுபிடிக்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் பிரணாப் ஜே தேகா.

சரிபோதா சனிவாரம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த தெலுங்குப் படம், ‘சரிபோதா சனிவாரம்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக் கிடைக்கிறது. சிறு வயதிலிருந்தே கடும் கோபக்காரனாக வளர்கிறான், சூர்யா. அதனால் பல பிரச்னைகள் வருகின்றன. இது அவனது அம்மாவைக் கஷ்டப்படுத்துகிறது. ‘வாரத்தில் ஒரு நாள் மட்டும் நீ கோபப்படலாம்’ என்று அம்மா அனுமதி தருகிறார். சனிக்கிழமையைத் தேர்வு செய்து, அந்த நாள் மட்டும் கோபத்தை வெளிப்படுத்துகிறான் சூர்யா.

வளர்ந்து, பெரியவனாகி இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டாக வேலை செய்து வருகிறான். ஞாயிறு முதல் வெள்ளி வரை சூர்யாவைக் கோபப்படுத்தும் மனிதர்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்கிறான். சனிக்கிழமை வந்ததும் அந்த நபர்களைத் தேடிச் சென்று அடித்து நொறுக்குகிறான். இதை ஒரு வழக்கமாகச் செய்து வருகிறான். இந்நிலையில் கொடூரமான ஒரு இன்ஸ்பெக்டர் மீது கோபம் வர, சூர்யா அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதே மீதிக்கதை.லாஜிக்கை மறந்து ஜாலியாக படம் பார்ப்பவர்களுக்கு உகந்த படம் இது. இதன் இயக்குநர் விவேக் ஆத்ரேயா.

நடன   சம்பவம்

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘நடன சம்பவம்’.பல குடும்பங்கள் வாழ்கின்ற ஒரு குடியிருப்புப் பகுதிக்கு புதிதாகக் குடி வருகிறார் உன்னி. எஞ்சினியரான அவருக்கு மனைவியும், மகளும் இருக்கின்றனர். அதே குடியிருப்பில் நீண்ட காலமாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் அஜித். இயல்பிலேயே உன்னியும், அஜித்தும் வெவ்வேறான குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

உன்னி மென்மையானவராக, மனைவிக்கு உதவி செய்பவராக இருக்கிறார். வீட்டு வேலைகளைச் செயகிறார். மகளையும் கவனித்துக்கொள்கிறார். ஆனால், அஜித்தோ ஆணாதிக்கவாதியாக இருக்கிறான். மனைவி என்பவள் கணவனுக்கு சேவை செய்வதற்காக படைக்கப்பட்டவள் என்பது அஜித்தின் நிலைப்பாடு.

மட்டுமல்ல; அந்த குடியிருப்பில் இருக்கும் பெண்களுடன் தோழமையுடன் பழகுகிறார் உன்னி. இது அஜித் மற்றும் குடியிருப்பில் வசிக்கும் மற்ற ஆண்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்குகிறது. இது முற்றிப்போய் அஜித்துக்கும், உன்னிக்கும் இடையில் சண்டை உருவாக, சூடுபிடிக்கிறது திரைக்கதை. குடும்பத்துடன் கண்டு களிக்கவும், நம் சிந்தனையைத் தூண்டவும் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு நாராயண்.

டிரபுள்

‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஸ்வீடன் நாட்டுப் படம், ‘டிரபுள்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார், கானி. அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது. வாரத்தில் ஒரு நாள் தனது மகளுடன் செலவழிக்கப் போகும் தருணங்களுக்காகக் காத்திருக்கிறார். ஆனால், திடீரென நடக்கும் ஒரு நிகழ்வு அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது.
 
தவறுதலாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் கானி. சிறைக்குள்ளும் தவறுதலாகக் புரிந்துகொள்ளப்படுகிறார் கானி. இன்னொரு பக்கம் மகளின் பிறந்த நாளுக்கு, பெரிய பரிசாகக் கொடுத்து அசத்த வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார். சிறைக்குள் இருக்கும் அவரால் மகளைச் சந்திக்கவே முடியாது. அதனால் சிறையிலிருந்து தப்பிக்க முடிவு செய்கிறார்.

கானி தப்பித்தாரா? மகளைச் சந்தித்து பிறந்த நாள் பரிசைக் கொடுத்தாரா? என்பதை நெகிழ்வாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.வேற்று மொழிப் படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்தப்படம். தமிழில் ரீமேக் செய்ய நல்ல சாய்ஸ். படத்தின் இயக்குநர் ஜோன் ஹோம்பெர்க்.

தொகுப்பு: த.சக்திவேல்