ரஜினியிசம்தான் வேட்டையன்



ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்... ‘கற்றது தமிழ்’ படம் தந்த கேமரா காதலன். தொடர்ந்து ‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’... என இவரது ஒளிப்பதிவால் ஒளிர்ந்தன பல படங்கள்.  
இவரின் விஷுவலில் ‘ஜெய் பீம்’ கொடுத்த தாக்கத்தால் தமிழ் சினிமாவே ஒளிர்ந்தது என்றால் மிகையாகாது. இதோ இப்போது ‘வேட்டையன்’. விஷுவல் விருந்துக்கு மட்டுமின்றி சமூகத்துக்கான மருந்தும் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் இருக்கும் என்கிற நம்பிக்கையில் தமிழ் சினிமா தயாராகிக் கொண்டிருக்கிறது.

‘‘ரஜினி சார் டெடிகேஷன்... வார்த்தைகளில் சொல்லிட முடியாது. அவருடைய ஒரு போட்டோ இருந்தாலே போதும்... அது என்ன படம் என்ன காட்சி என்கிறது வரை  சொல்லிடலாம். அந்த அளவுக்கு அந்தப் படத்தில் இயக்குநர் துவங்கி படக்குழுவைத் தாண்டி ரஜினி சார் தன்னை இப்படித்தான் ரசிகன்கிட்ட காட்டிக்கணும் என்கிறதில் சின்னச் சின்ன விஷயங்களைக்
கூட மெனக்கெட்டு செய்வார்...’’படத்தின் ரிலீஸ் வேலைகள் தலைக்கு மேலே இருந்தும் எந்தப் பரபரப்பும் காட்டாமல் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் ‘வேட்டையன்’ படத்தின் விஷுவலுக்கு சொந்தக்காரரான ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்.

‘வேட்டையன்’..?

‘ஜெய் பீம்’ ஒரு பர்சனல் கதை. ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்துக்கொண்டு நடந்த உண்மையான கோர்ட் ரூம் டிராமா. ‘வேட்டையன்’ இப்போ நடந்துகிட்டு இருக்கும் ஒரு பிரச்னையின் மேலே உண்மையும் கற்பனையும் கலந்து சொல்லப்பட்ட ஒரு கதை . நிச்சயம் இந்தக் கதை பல விவாதங்களையும், சமூகம் சார்ந்த உரையாடல்களையும் உருவாக்கும். ஒரு நேர்மையான வக்கீலின் உண்மைக் கதைதான் ‘ஜெய் பீம்’. ‘வேட்டையன்’ தன்னுடைய வேலைக்கு மட்டுமே பயப்படும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கற்பனைக் கதை. பெருவாரியான மக்களின்பிரச்னையை இந்தப் படம் பேசும். 
ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம்..?

ஒரு படத்தில் இதுதான் லுக் அப்படின்னு சொல்லிட்டா தன்னை இந்தப் படத்தில் இயக்குநர் இப்படித்தான் காட்ட விரும்புகிறார் என்கிறதை முழுமையா உள்வாங்கிக் கொண்டு, தானும் தன் பங்குக்கு தன்னை ரசிகர் மத்தியில் எப்படி காட்டிக்கணும் அப்படின்னு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார் ரஜினி சார். அவருடைய டெடிகேஷன் எல்லாம் வார்த்தைகள்ல சொல்லிட முடியாது.  

உதாரணத்துக்கு ‘மனசிலாயோ...’ பாடலுக்கான செட்டிங் அவுட்டோரில்தான் போட்டிருந்தோம். அதனால் படப்பிடிப்பு இரவில் மட்டும்தான் நடத்த முடியும்.
தொடர்ச்சியா அஞ்சு நாட்கள் இரவு ஷூட்டிங். ஆனால், ஒவ்வொரு நாளும் ரஜினி சார் அவ்வளவு எனர்ஜியா நடிப்பார். அவர் செட்டுக்குள்ளே வந்துட்டாலே கைத்தட்டல்கள் பறக்கும்.
பாட்டுக்கான எனர்ஜி மட்டுமல்ல... மொத்த படக்குழுவுக்கான எனர்ஜியும் ரஜினி சார்தான். 
இரவு ஷூட்டிங் என்கிற நினைப்பே இல்லாம நாங்க வேலை செய்ய உந்து சக்தியே சார்தான்.
அறிமுக நடிகர்கள் தங்களுடைய முதல் படத்துக்கு எப்படிப்பட்ட மெனக்கெடல் கொடுப்பாங்களோ அதே ஆர்வத்தை இத்தனைப் படங்களுக்குப் பிறகும் நான் ரஜினி சார் கிட்டப் பார்த்தேன். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.

டி.ஜே ஞானவேல் இயக்கம் + மீண்டும் உங்கள் ஒளிப்பதிவு..?

படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நானும் ஞானவேலும் ரஜினி சாரை சந்தித்தோம். இப்ப வரையிலும் அந்த சந்திப்பு ஒரு கனவு மாதிரி இருக்கு எனக்கு.

அவர் பேச ஆரம்பித்தாலே பாசிட்டிவ் வைப் என்பார்களே அது தானாகவே நம்மகிட்ட வந்திடும். அப்புறம் அவர் மட்டும்தான் பேசுவார் நாம மெய்மறந்து கேட்டுகிட்டே இருப்போம்.

மிகப்பெரிய கலைஞர் ரஜினி சார். அவருக்கு ஒரு கொண்டாட்டமாக, அவரைக் கொண்டாடும் விதமாக வெளியான படம்தான் ‘ஜெய்லர்’. ஒவ்வொரு காட்சியும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல மொத்த இந்திய சினிமாவும் மறக்காது.

அப்படிப்பட்ட தாக்கத்திலிருந்து அடுத்த படம்... அந்தப் படத்திலும் ரஜினி சார் ஒரு ரிட்டையர்டு காவல்துறை அதிகாரி. இந்தப் படத்தில் ஆன் டியூட்டி அதிகாரி. அந்தப் படத்தின் சாயல் இருந்திடக் கூடாது... அதே சமயம் அந்தப் படம் உருவாக்கிய கொண்டாட்டத்தையும் இடையூறு செய்திடக் கூடாது. இதிலே ஞானவேல் ரொம்ப தெளிவா இருந்தார். அதில் ரஜினி சாரும் உறுதியாக இருந்தார். அவருடைய இத்தனை வருட சினிமா அனுபவத்துக்கும், டெடிகேஷனுக்கும் ஞானவேல் என்ன சிறப்பு சேர்க்க முடியுமோ சேர்த்திருக்கார்.

ஞானவேல் நல்ல படித்த மனிதர். அதாவது ஒவ்வொரு மனிதனையும் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் வேலை வாங்குகிற ஒரு மனிதர். அதிர்ந்து கூட பேச மாட்டார். அவ்வளவு பக்குவமாக வேலை செய்கிற ஓர் இயக்குநர். அவருடைய சமூகப் பாதுகாப்பு பத்தின எண்ணம், கனவு... அதனுடன் சேர்ந்து ரஜினி சார் கொண்டாட்டமாக இந்தப் படம் உருவாகியிருக்கு. எந்த ஓர் இக்கட்டான சூழலிலும் தன் நிலை மாறாத மனிதர் ஞானவேல். தன்னைத் தானே சரியான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு மனிதர்னு கூட சொல்லலாம்.

எந்த மெனக்ெகடலும் இல்லாமல் நடிகர்கள் இளமையாகத் தெரிவதை உங்கள் ஒளிப்பதிவில் பார்க்க முடிகிறது. அதன் பின்னணி மேஜிக் என்ன?

‘பாத்திரத்தில் ஏதாவது இருந்தால் நிச்சயம் கரண்டியில் வரும்’ என்னும் பழமொழி இருக்கு. அப்படி நான் இதுவரை வேலை செய்த அத்தனை நடிகர்களுமே திறமை
சாலிகள். தன்னை இப்படித்தான் மக்கள் பார்க்கணும் என்கிற ஆர்வம் இருக்கும் எந்த நடிகனையும் ஒரு கேமராமேன் கஷ்டப் படாமல் விஷுவலில் அழகாகக் காட்ட முடியும். 

உதாரணத்திற்கு சசிகுமார் உடன் நான் வேலை பார்த்த அத்தனை படத்திலும் ஹீரோயின்கள் பெரும்பாலும் புது நடிகைகள். அடிப்படையிலேயே முதல் படம் என்கிற ஆர்வம் அவங்க கிட்ட இருந்தது. அதற்கு சரியான ஆங்கிள் மற்றும் லைட்டிங் கொடுத்து மெருகேற்றும் போது இன்னும் சிறப்பா அழகா தெரிவாங்க.

ஒவ்வொரு சருமத்துக்கும் ஏற்ற லைட்டிங்,  ஆங்கிள் வைத்தாலே போதும்... அவங்க ஸ்பெஷல் அழகு வெளியே வரும். இதுதான் நான் கடைப்பிடிக்கற டெக்னிக். இதோ இந்தப் படத்தில் ரஜினி சார் ஏற்கனவே ஒரு நடிகராக தன்னை எப்படி ரசிகர்கள்கிட்டே ப்ரொஜெக்ட் செய்துக்கணும் என்கிறதில் தெளிவாக இருக்கார். அவருடைய லுக், உடல்வாகு எல்லாம் மிகக் கச்சிதம். அதற்கு சிறப்பு சேர்க்கற விதமா உடைகள், லைட்டிங் கொடுத்தோம் மற்றதை அவர் பார்த்துக்கிட்டார்.

இவர் இப்படிப்பட்ட கதைக்குதான் செட்டாவார் என்கிற எவ்வித டெம்ப்ளேட்டிற்குள்ளும் நீங்கள் சிக்குவதே கிடையாதே?

ஒரு படம் கதை கேட்கும்போதே எனக்கு இயல்பா கனெக்ட் ஆகணும். கதை கேட்கும்போதே ஏதாவது ஒரு வகையில் என்னை அந்தக் கதை பாதிக்கணும் . அப்படித்தான் நான் கதையை தேர்வு செய்வேன். அதேபோல் ஒருமுறை ஒரு படம்தான். அதை முழுமையா முடிச்சிட்டு குறைந்தது ஒரு வாரம் இடைவேளை எடுத்துக்கிட்டு என்னை நானே தயார் செய்துகிட்டுதான் அடுத்த படத்தில் வேலை செய்யத் துவங்குவேன். அதனால்தான் படங்களின் எண்ணிக்கையும் குறைவா இருக்கும்.

தவிர்க்க முடியாத காரணத்தால் நான் தவிர்த்த படங்கள் பட்டியல் கேட்டா கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். அதுவும் கதை கேட்டு அல்லது இதுதான் கதை அப்படின்னு தெரிஞ்ச பிறகு நானே அடடா தவற விட்டுட்டோமே அப்படின்னு நினைத்த படங்கள் இருக்கு. இப்படித்தான் ‘ஆரண்ய காண்டம்’ படத்தை எடுத்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவை பாராட்டினேன். நான் பாராட்டுவதை 3 மணி நேரத்திற்கு மேல் கேட்டுட்டு ‘உங்களைத்தான் இந்தப் படத்துக்கு கேட்கலாம்னு இருந்தேன்’ அப்படின்னு சொன்னார்.

‘ஏன் கேட்கலை’ அப்படின்னு கேட்டபோது ‘நீங்க ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கீங்க, அஞ்சு வருஷத்துக்கு பிஸி’ன்னு இன்னொரு நபர் சொன்னதால் வேறு ஒருத்தர் கதைக்குள் வந்துட்டார் அப்படின்னு சொன்னார். ‘நீங்க என்கிட்ட கேட்டு இருக்கலாமே’ அப்படின்னு நானே இந்தப் படத்தில் நான் இல்லாமல் போயிட்டேனே என வருத்தப்பட்ட ஒரு படம் அது.

அடுத்து ‘96’. படத்தின் கதை இதுதான் என ஒன்லைன் துவங்கிய காலகட்டத்தில் இருந்து நானும் பிரேம்குமாரும் ஒண்ணாதான் பயணிச்சோம். ஆனால், அவருக்கு அது முதல் படம் என்கிறதால் இதெல்லாம் எனக்கு வேணும் என கேட்டு வாங்குகிற சூழல் அவருக்கு அமையலை.

அடுத்து ‘மெய்யழகன்’, ‘கோட்’ இரண்டு படங்களுமே சரியா ‘வேட்டையன்’ படத்தின் வேலை துவங்கிய கட்டத்தில்தான் ஆரம்பித்தன. அதனால் என்னால் இந்தப் படங்களில் வேலை செய்ய முடியாமல் போனது. நிறைய படங்களைத் தவறவிட்டு இருக்கேன். ஆனால், இந்த நான்கு படங்களும் நான் எனக்கே தெரியாமல் அல்லது தவிர்க்கமுடியாத காரணத்தால் தவறவிட்ட படங்கள் என்கிறதால் கொஞ்சம் வருத்தம்தான்.  ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி ஒரு சிட்டி அடிப்படையிலான கேங்ஸ்டர் மூவி செய்யணும்னு ரொம்ப நாள் ஆசை. அது இன்னமும் எனக்கு நிறைவேறலை.

உங்களின் கண்கள் வழியாகத்தான் நாங்க படங்களைப் பார்க்கறோம்.  நீங்கள் சினிமாவை எப்படி பார்க்கறீங்க?

நான் கேட்கற ஒரு கதை எனக்குள் ஒரு தாக்கத்தை உருவாக்குவது மட்டுமில்லாம இந்தக் கதையை ரசிகர்கள்கிட்ட சொல்லும்பொழுது அதில் என்னுடைய பங்கு இருக்கணும் என்கிற உந்துதல் இருக்கணும்.  இப்படித்தான் நான் சினிமாவைப் பார்க்கறேன். அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்கள் ஒப்புக்கொண்டு என்னை நானே குழப்பிக்கொள்வது கிடையாது. இப்போகூட ஒருசில முக்கியமான ஆஃபர்கள் வந்திருக்கு. எல்லாமே ‘வேட்டையன்’ ரிலீசுக்குப் பிறகுதான்.

‘வேட்டையன்’ எப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுக்கும்?

‘ஜெய் பீம்’ படம் உங்களுக்குத் தெரியாத ஓர் உண்மை உலகத்தைக் காண்பித்து அதிர்ச்சியாக்கி இருக்கும். ‘வேட்டையன்’ உங்களைச் சிந்திக்க வைக்கும். ஒரு விஷயத்தை ஆதரிக்கிறதுக்கும், எதிர்க்கிறதுக்கும் முன்பு அதைத் தீர விசாரிக்கணும்... அது சார்ந்த அடிப்படை அறிவை நாம் வளர்த்துக்கணும் என்கிற புரிதலை இந்தப் படம் உருவாக்கும். படத்தில் என்ன இருக்கு என்கிற கேள்விக்கு ஒரே பதில்தான் ‘ரஜினி சார் இருக்கார்’. அதை மட்டும் யோசிச்சிட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வாங்க... நிச்சயம் படம் ரொம்ப நல்ல சினிமா அனுபவத்தையும், பல புரிதல்களையும் கொடுக்கும்.

காரணம், ரஜினி சார் மட்டுமல்ல... இந்தப் படத்தில் அமிதாப் சார் உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர்கள் இருக்காங்க. எப்போது ரஜினி சாரும், அமிதாப் சாரும் ஒருசேர படத்திற்குள் வந்தார்களோ... அப்போதே இந்தக் கதை என்ன செய்யணும் என்கிற நோக்கம் நிறைவேறிடுச்சு. மீதி பொறுப்பை நாங்கள் எடுத்துக்கிட்டு எங்களுடைய பெஸ்ட் கொடுத்திருக்கோம். பார்த்திட்டு
சொல்லுங்க.

ஷாலினி நியூட்டன்