நம்பர் 2



உலக மக்களில் பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்திக் கொண்டிருக்க, அந்த மக்களைப் பயன்படுத்தி, உலகின் 2வது பெரிய பணக்காரர் ஆகியிருக்கிறார் ஃபேஸ்புக்கின் சிஇஓவான மார்க் ஜுகர்பெர்க். இதுவரை அந்தப் பட்டியலில் இரண்டாவதாக இருந்த அமேசான் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தைப் பிடித்துள்ளார் மார்க்.
உலகின் 2வது பெரிய பணக்காரர் ஆகியிருக்கும் மார்க்கின் இப்போதைய சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (அதாவது சுமார் 17 லட்சம் கோடி ரூபாய்). உலகின் முதல் பணக்காரரான எலன் மஸ்க், இப்போது அவரைவிட 50 பில்லியன் டாலர்களை மட்டுமே கூடுதலாக வைத்திருக்கிறார்.

மென்லோ பார்க் என்ற கலிபோர்னிய நிறுவனத்தில் மார்க் ஜுகர்பெர்க், 13 சதவீத பங்குகளை வைத்திருந்தார். அந்தப் பங்குகளின் மதிப்பு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வளர்ந்ததால், இப்போது உலக பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தை எட்டியுள்ளார் மார்க் ஜுகர்பெர்க்.

மார்க் ஜுகர்பெர்க்கின் சொத்துகளில் அதிக விலைமதிப்புள்ள பொருட்களில் ஒன்றாக அவரது சொகுசுக் கப்பல் இருக்கிறது. Launchpad என்ற பெயரில் உள்ள இந்த சொகுசுக் கப்பலின் மதிப்பு 2,505 கோடி ரூபாய். 49 ஊழியர்களைக் கொண்ட இந்த கப்பலில் 13 அறைகள் உள்ளன. கூடவே நீச்சல்குளம், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன.

கலிஃபோர்னியா நகரில் 417 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீட்டையும், ஹவாயில் 968 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொரு வீட்டையும் சொந்தமாக வைத்திருக்கிறார் மார்க். இதில் ஹவாய் தீவில் உள்ள வீட்டின் பரப்பளவு மட்டும் 707 ஏக்கர். 

இதைத்தவிர ஹவாய் தீவின் மற்றொரு பகுதியில் 442 கோடி ரூபாய் மதிப்பில் 600 ஏக்கர் நிலத்தையும் வாங்கிப் போட்டிருக்கிறார் மார்க்.இதைத்தவிர சொந்த விமானம், சொகுசுக் கப்பல்கள் என பல்வேறு சொத்துகளை அவர் வாங்கிக் குவித்துள்ளார். எல்லாம் நாம் ஃபேஸ்புக் பார்ப்பதால் சேர்ந்த சொத்து!

காம்ஸ் பாப்பா