தயாரிப்பு புதிய பாடகர்கள் மீண்டும் ஆஸ்கர் ரஹ்மான் பெயர் வந்த விதம் மனம் திறக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
‘ராயன்’ படம் கொடுத்த மாபெரும் வெற்றியாலும் அதன் இசை ஏற்படுத்திய தாக்கத்தாலும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இசை நிகழ்ச்சிகளுக்காக அவர் வெளிநாடு பறக்கும் முன் நமக்காக பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்கினார். ‘99 சாங்ஸ்’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் அறியப்பட்டீர்கள்..?
இந்தப் படத்துக்கு கதை எழுதியது தனி அனுபவம்தான். ஆனால், திரைக்கதையை அதுபோல் எழுத முடியவில்லை.திரைக்கதையில் நிறைய விஷயங்கள் உள்ளன. திரைப்படத் தயாரிப்பு என்பது வெறும் கதை மட்டும் அல்ல. அதில் சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் உள்ளன. இசை, காட்சிகள், சவுண்ட் டிசைன் ஆகியவை சேர்ந்து ஒரு மேஜிக்தான் சினிமா. அது டைரக்டராக இருந்த அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் வரும். இயக்குநர் விஸ்வேஷ் நிறைய விளம்பரம் பண்ணியிருந்தார். இசை ஆவணப்படங்கள் தயாரித்திருக்கிறார். இருவரும் அமர்ந்து, சிந்தித்து உருவாக்கிய திரைப்படம்தான் அது. அதனால் திரைக்கதை பணியை அவரிடம் கொடுத்தேன். முதல் முறையாக கதை எழுதும்போது, நமக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என முயற்சி செய்வோம். 300 சதவீதம் கதை எழுதி அதை 100 சதவீதமாக வடிகட்டி அதை எப்படி கொடுக்க முடியும் என்பதை நான் இந்தப் படத்தில் கற்றுக்கொண்டேன்.பல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளீர்கள்.
அவர்களை வைத்து ஏன் நீங்கள் படம் தயாரிக்கக் கூடாது?
நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மிகச் சிறந்த படம் எடுத்தவர்கள். எனது படங்கள் ஒரு சின்ன முயற்சி. அதாவது புது வாய்ஸ். ‘99 சாங்ஸ்’ மட்டுமல்ல. இனி எடுக்கப்போகும் படங்களும் அதுபோலத்தான். இசையைப்பற்றிய, இசையை பரப்புகிற கதைகளைத் தேர்வு செய்ய விரும்புகிறேன். அதனால் அதற்குத் தகுந்தார்போல் எனது தேடல்களும் இருக்கிறது.சூஃபி இசையை பெருமளவுக்கு சினிமாவுக்குள் கொண்டு வந்த பெருமை உங்களையே சேரும்...
இறைவனை நேரடியாகச் சென்றடையும் வழியாகவும் அந்த இசையைச் சொல்லலாம். சூஃபியிசம் எனக்குள் வந்ததும் அதிலிருந்து நிறைய கற்க ஆரம்பித்தேன். அந்த இசையை உணர ஆரம்பித்தேன். அதன்மூலம் சூஃபி இசைக்காக ஆல்பங்கள் செய்தேன். இப்போது இந்திப் படங்களிலும் அதிகம் சூஃபி இசையை பயன்படுத்துகிறேன். தமிழிலும் அதை பயன்படுத்துகிறேன். சூஃபி இசையும் என்னை இசையின் பக்கமாக வழிநடத்தும் ஒன்று.
வழக்கமாக வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்தும்போது வெறுமனே தமிழ்ப் பாடல்களை மட்டும் நீங்கள் பாடுவதில்லை என புகார் இருக்கிறதே..?
இனி தமிழ்ப் பாடல்களை மட்டும்தான் பாடப் போகிறோம். நான் தமிழ்நாட்டில் பிறந்தவன். நான் தமிழ்நாட்டு எல்லையைவிட்டு வெளியே போனதே பெரிய விஷயம். என்னை வெளி மாநிலத்து மக்கள் ஏற்றுக் கொண்டதே பெரிய விஷயம். ஆகவே, அவர்களுக்கும் மரியாதை கொடுக்கும் விதமாக இந்திப் பாடல்களையும் சேர்த்துப் பாடி வருகிறோம்.
இது தமிழருக்கு ஒரு பெருமை இல்லையா? இதற்கான முக்கிய நோக்கம் அதுதான். ஆனாலும் சில பேர் முழுமையாகத் தமிழ்ப் பாடல்களையே பாடலாமே என்கிறார்கள். வழக்கமாக இசைக்கச்சேரி 2 மணிநேரம் என்றால், வேறு மொழியும் சேர்த்துப் பாடுவதால் 4 மணி நேரத்திற்கு மேல் கச்சேரி செய்கிறோம்.
அது நல்லதுதானே?
ஆஸ்கர் அவையில் பலரும் ஆங்கிலத்தில் பேசியபோது நீங்கள் தமிழைச் சொன்னதே பெரும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டதே?
அது நம் ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது இல்லையா? அதை எப்படி விட முடியும்? ஓர் எறும்பு கடித்தால் கூட ‘அம்மா...’ என்றுதானே நாம் கத்துகிறோம். ஆகவே தமிழை எப்படி மறக்க முடியும்?
பாடல்களில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறீர்களே..?
நாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? ஏன், ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்று முன் முடிவுடன் இருக்க வேண்டும்? பழந்தமிழ்ச் சொற்களை நாம் இளம் தலைமுறைக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.
அதைச் செய்யவில்லை என்றால் நாம் எதற்கு இருக்கிறோம்?
அது நம் கடமை இல்லையா?
உங்கள் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி பாடப்படும் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா..?
கேட்டிருக்கிறேன்! ஆனால், சில வரிகள் மட்டுமே சரியாகப் பொருந்தியுள்ளன. நூறு சதவிகிதம் சரியாக அந்தக் குரல் - ஏஐ குரல் - அமைந்துவிட்டால், என்னால் 35 வருடங்களாக இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடிந்திருக்குமா! ஆஸ்கர் விருதை இப்போது எடுத்து பார்ப்பீர்களா?
ஆஸ்கர் விருது வாங்கிய மறுநாள் மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்தேன். அடுத்த நாள் இந்தியா வரும்போது விமானநிலையத்தில் பைக்குள் என்ன இருக்கிறது என்று அதிகாரிகள் விசாரித்தார்கள். அதை (ஆஸ்கர் விருதுகளை) வெளியே எடுத்ததைப் பார்த்ததும் கிட்டத்தட்ட 200 பேர் அங்கே கூடி விட்டார்கள். அதன்பிறகு சிரித்துவிட்டு அதைக் கொடுத்தார்கள்.
வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் அதைக் கையில் எடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதைப் பார்த்து அம்மா உடனே ஒரு பெட்டியில் வைத்து விருதைப் பூட்டி விட்டார். அதன்பிறகு நான் அதைப் பார்க்கவே இல்லை. அது துபாய் ஸ்டுடியோவில் உள்ளது!
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
நான் முடிந்தபோதெல்லாம் சென்னையை விட்டு வெளியேறி, மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள சூஃபி தர்காவுக்குச் செல்வேன். நான் அதை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தேன். நான் அங்கு மிகுந்த அமைதியை உணர்கிறேன். இது ‘சலாத்தை’ பரிமாறிக்கொள்வது போன்றது. ‘சலாம்’ என்றால் அமைதி என்று பொருள். கடவுளுக்கும் சூஃபி துறவிக்கும் ஒரு தொடர்பை நான் காண்கிறேன். அங்கு இருப்பது அனைத்து அழுத்தங்களையும் நீக்குகிறது.தர்கா என்றதும் ‘ரஹ்மான்’ என எனக்கு பெயர் வரக் காரணமாக இருந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
அங்கிருந்த பெரியவர், சில பெயர்களைப் பரிந்துரைத்தார்: ‘அப்துல் ரஹ்மான்’ மற்றும் ‘அப்துல் ரஹீம்’ உள்பட எந்த பெயர் எனக்கு நன்றாக இருக்கும் என்று விளக்கமாகக் கூறினார்.
‘ரஹ்மான்’ என்ற பெயரை நான் உடனடியாக விரும்பினேன். பிறகு எனது தாயாருக்கு ‘அல்லாஹ்ரக்கா’ (கடவுளால் பாதுகாக்கப்பட்டது) சேர்க்க வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தது.
இப்படியாக நான் ஏ.ஆர் ரஹ்மான் ஆனேன். அதாவது ‘அல்லாஹ் ரக்கா ரஹ்மான்’. இது ஓர் அசாதாரண பெயர். 1991ல், எனது முதல் படமான ‘ரோஜா’வில் வேலை செய்யத் தொடங்கியபோது , திரைப்படம் மற்றும் ஆல்பத்தின் வரவுகளுக்கு எனது புதிய பெயர் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். என் குருநாதர் மணிரத்னமும், ரோஜா படத்தின் தயாரிப்பாளர் கே.பாலசந்தரும் மனதார ஒப்புக்கொண்டனர்.
இந்தியத் திரைப்பட இசை ஒருசில பின்னணிப் பாடகர்களை நம்பியிருந்தது. நீங்கள் சினிமா துறைக்கு வந்ததும், பல புதிய குரல்களைத் தேர்ந்தெடுத்து பாடகர்களின் வரிசையை விரிவுபடுத்தினீர்கள். இப்படிச் செய்ய ஏதாவது முக்கிய காரணம் இருக்கிறதா?
நான் விளம்பரங்களை இசையமைக்கும்போது குழந்தைகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் பலருடன் பணிபுரிந்தேன். அதனால் நான் பலவிதமான பாடும் திறமைகளைக் கேட்டேன். இந்திய சினிமாவின் பொதுவான நடைமுறை என்னவென்றால், ஒரு பின்னணிப் பாடகர் ஒரு குறிப்பிட்ட நடிகருக்காக அனைத்துப் பாடல்களையும் பாடுகிறார். எனவே, பார்வையாளர்கள் பாடும் குரலை ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துடன் தொடர்புபடுத்தத் தொடங்கினர்.
உதாரணமாக, டி.எம்.சௌந்தரராஜன் சிவாஜி கணேசனின் குரலாகக் கருதப்பட்டார். முகேஷ், ராஜ்கபூரின் பாடும் குரலாக மாறினார். பி.பி.ஸ்ரீனிவாஸ் என்றால் ஜெமினி.
நான் இந்திய சினிமாவுக்கு இசையமைக்கத் தொடங்கியபோது, ஏன் ஒரு பாடகரிடம் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
அந்த நேரத்தில் பதிவு தொழில்நுட்பம் மாறிவிட்டது. எங்களிடம் மல்டி-ட்ராக் ரெக்கார்டர்கள் இருந்தன, மேலும் எனது சொந்த வேகத்தில் ஒரு புதிய பாடகரை உருவாக்குவதிலும் பயிற்சி அளிப்பதிலும் நேரத்தைச் செலவிட முடியும். பாடகர் தயாரானதும், நாங்கள் வாய்ப்பு தருகிறோம். ஒரு பாடலை நன்றாகத் தயாரித்து, அதற்கு ஏற்ற குரலைப் பயன்படுத்தினால், அது பாடலுக்கும் திரைத் தன்மைக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது. அதிக அளவிலான குரல்கள் சினிமாவில் ஒலிக்க வேண்டும். நாம் எப்போதும் ஒரே குரலைக் கேட்க வேண்டும் என்பது அவசியமில்லை. பின்னணிப் பாடகி மின்மினியின் முதல் திரைப்படப் பாடலான ‘சின்னச் சின்ன ஆசை...’ ‘ரோஜா’வில் வந்தபோது, அவரது குரலை மக்கள் விரும்பினார்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது.
அவர் இதையே இந்தியிலும் (‘தில் ஹை சோட்டா சா’), மலையாளம் மற்றும் தெலுங்கு பதிப்புகளிலும் பாடினார். புதிய பாடகர்களை ஊக்குவிப்பதும் நல்லது. இது அவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைத் திறக்கிறது. எந்த சூழ்நிலையிலும் சினிமாவுக்குள் வரலாம் என்ற நிலை எல்லா பாடகர்களுக்கும் ஏற்பட வேண்டும் என்பதும் இதன் நோக்கம். தொடர்ந்து இசைக்கான படங்களை தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா?
நான் தயாரிக்கப் போகும் படங்கள் இசைப் படங்களாகவே இருக்கும். ‘லீ மஸ்க்’ ஒரு மியூசிக்கல் ஸ்டோரி, இந்தியிலே தயாரிச்ச ‘99 சாங்ஸ்’ பக்கா இசையோடு கூடிய காதல் கதை. இசைக்காகத்தான் புரொடியூசர், ஸ்கிரிப்ட் ரைட்டருங்கிற இந்த ரெண்டு ரோலையும் எடுத்தேன். அதனால் தொடர்ந்து மியூசிக்கல் படங்களை கொடுப்பேன். ‘லீ மஸ்க்’கிற்குப் பிறகு டைரக்ஷன் பக்கம் போகமாட்டேன். ஒரு படம் இயக்கினா, அதுல ரெண்டு வருஷமாவது செலவிட வேண்டியிருக்கும். அதுக்கான நேரம் இல்லை.
அப்போ கமர்ஷியல் படங்களை உங்க தயாரிப்புல எதிர்பார்க்க முடியாதா?
அதுக்குதான் நிறைய பேர் இருக்கிறாங்களே! இப்போ நிறைய சவால்கள் இருக்கு. ஒரு ஆக்ஷன் படம் பண்ணினா, இதுல எதுக்கு இசைக்கு முக்கியத்துவம்னு ஹீரோ கேள்வி கேட்கலாம். இசைக்காகவே யோசிச்சு படம் பண்றதுக்கு கே.விஸ்வநாத் சார், பாலசந்தர் சார் இருந்தாங்க. இப்ப அப்படி யாரும் இல்லை. அதனால என்னால முடிந்தளவுக்கு இசைப் படங்களை தயாரிக்கலாம்னு இருக்கேன்.
டிஎம்எஸ், சுசீலா, எஸ்பிபி, பாலிவுட்ல முஹம்மத் ரபி, லதா மங்கேஷ்கர் மாதிரி அடையாளங்கள் இனிமே உருவாக வாய்ப்பில்லையா? எனக்கும் தெரியல (சிரிக்கிறார்)! நான் ஓரிடத்துல இல்ல. உலகம் முழுக்க சுத்திட்டுதான் இருக்கேன். யாராவது இருக்கலாம். அவங்க குரல் கேட்காமல் இருக்கலாம். நல்ல விஷயம் நடக்கும். நம்பிக்கை இருக்கு.25 வருட சினிமா அனுபவம் உங்களுக்கு கற்றுக்கொடுத்த விஷயம்னு எதை சொல்வீங்க?
தேவையில்லாம எதுவும் பேசக்கூடாது. டுவிட்டர்ல அரசியல் கருத்து, அது இதுன்னு மத்த விஷயங்களைத் தவிர்க்கணும். வேலைதான் மகிழ்ச்சி. நம்ம பணிதான் நம்ம அடையாளம். அதை ஒழுங்கா பார்க்கணும். அதிகாரத்தை தவறா பயன்படுத்தக்கூடாது. இதெல்லாம்தான் நான் கத்துக்கிட்ட விஷயங்கள்.சின்ன பட்ஜெட் படங்களுக்கு நீங்க இசையமைக்கிறதில்லேன்னு இயக்குநர்கள் புகார் சொல்றாங்களே?
சின்ன படம், பெரிய படம்னு எதுவும் கிடையாது. ஐடியா பெரிசா இருக்கணும். அதே சமயம், ஒரு படத்துக்கு இதுதான் பட்ஜெட்டுன்னு நிர்ணயிச்சி பண்ணும்போது, அதுல என் பெயரை சேர்க்கிறதால, அவங்க நினைச்ச பட்ஜெட்ல எடுக்க முடியாத நிலை வரலாம். என்னால அவங்களுக்கு சிரமம் வரக்கூடாதுன்னுதான் பார்க்கிறேன். இளையராஜாகூட சேர்ந்து எம்எஸ்வி இசையமைச்சிருக்காரு. உங்களுக்கு அந்த வாய்ப்பு வந்தா பண்ணுவீங்களா?
இளையராஜா சாருன்னு கிடையாது... யாரா இருந்தாலும் என்னோட சுபாவத்துக்கு அந்த மாதிரி ரெண்டு பேரா ஒர்க் பண்றது முடியாதுன்னு நினைக்கிறேன். ஹாலிவுட்ல ‘எலிசபெத்’ படத்துக்கு க்ரேக் ஆம்ஸ்ட்ராங் கூட சேர்ந்து பண்ணியிருந்தேன். ஆனா, இசையமைப்பாளருக்கு தனக்குன்னு ஒரு பேர், அடையாளம் வேணும்னு நான் பார்ப்பேன். அதனால இசைக் கலைஞனா இன்னொருத்தர் கூட சேர்ந்து ஒர்க் பண்ணலாம். இசை அமைப்பாளரா பண்றது கஷ்டம்.
தமிழ்ப் படங்கள் அதிகம் பண்றதில்லேன்னு விமர்சனம் இருக்கே?
இந்திப் படங்களைவிட தமிழ்லதான் அதிகம் பண்றேன். இப்போவும் தமிழ்ப் படங்கள்ல பிசியாக ஓடிட்டுதான் இருக்கேன்.
உங்களுக்கு அடுத்த ஆஸ்கர் எப்போன்னு ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்களே?
இதுவே போதும்னு நினைக்கிறேன். வாழ்க்கையில நான் எதிர்பார்த்ததும் எதிர்பார்க்காததும்னு நிறைய கிடைச்சிருக்கு. எல்லா புகழும் இறைவனுக்கே.(‘தினகரன் தீபாவளி மலர் 2024’ல் வெளியாகியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியின் சுருக்கப்பட்ட வடிவம் இது.ஏ.ஆர்.ரஹ்மானின் Exclusive பேட்டியை முழுமையாக ‘தினகரன் தீபாவளி மலர் 2024’ புத்தகத்தில் வாசிக்கலாம்.)
ஜியா
|