உணவு நல்லதா கெட்டுப்போனதா..?



சென்சார் செய்து பார்க்கலாம்!

பொதுவாக ஓர் உணவு நல்லதா அல்லது கெட்டுப்போனதா என்பதை அதிலிருந்து வரும் வாசனையைக் கொண்டு சொல்லிவிடலாம்தான். ஆனால், அதுவே பேக்கேஜிங் செய்துவரும் உணவுகளை எப்படி கண்டறிவது? இதற்கு குறிப்பிட்ட உணவில் அமிலத்தன்மை எவ்வளவு இருக்கிறது என்பதை, அதிலுள்ள பிஹெச் அளவுகளைக் கொண்டு  கண்டறிவார்கள். அதன்மூலம் உணவு கெட்டுப்போய் இருக்கிறதா என்பது தெரியவரும். ஆனால், இதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
 

இந்நிலையில்தான் இதற்கென பிரத்யேக பிஹெச் சென்சார் ஒன்றை மிகச் சிறிய அளவிலும், குறைந்த விலையிலும், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய வகையிலும் உருவாக்கி அசத்தியுள்ளார் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் ஆய்வாளரான கெங்டவுலியு சாவாங்.

இந்தத் தனித்துவமான பிஹெச் சென்சார் இரண்டு மில்லிமீட்டர் நீளமும், பத்து மில்லிமீட்டர் அகலமும் உடையது. இதன்வழியே பிளாஸ்டிக்கால் கட்டப்பட்டிருக்கும் உணவுப் பேக்கேஜிங்கில்கூட எளிதாக சென்சார் முடியும்.

இப்போது பெரிய நிறுவனங்கள் உணவுகளில் உள்ள பிஹெச் அளவுகளைக் கண்டறிய ஒரு இன்ச் நீளமும், ஐந்து இன்ச் உயரமும் உடைய பெரிய அளவீடுகளைப் பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், பல்வேறு நேரங்களில் ஒவ்வொரு உணவுப் பேக்கிங்கையும் அளவிட முடியவதில்லை. இதனால், கெட்டுப்போன உணவுகள் சந்தைக்கு வந்துவிடுகின்றன. அதனாலேயே இதனை உருவாக்கியுள்ளார் சாவாங்.

பொதுவாக உணவுகளில் அமிலங்கள் இருக்கும். இவை ஹைட்ரஜன் அயனிகளை வெளியிடும். இந்த ஹைட்ரஜன் அயனிகள் உணவில் புளிப்புச் சுவையை உண்டாக்கும். இதனையே நாம் உணவு கெட்டுப்போனதாக சொல்கிறோம்.

உணவில் இந்த அமிலத்தன்மையைக் கண்டறியவே அதில் பிஹெச் அளவுகள் எவ்வளவு என சென்சார் மூலம் பார்க்கப்படுகிறது. பிஹெச் அளவுகள் நார்மல் நிலையைவிட அதிகமாக இருந்தால் உணவு கெட்டுப்போனதாக அர்த்தம். ஏனெனில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் அதிக பிஹெச் சூழல்களில் செழித்து வளரும்.

இந்நிலையிலேயே சாவாங்கின் பிஹெச் சென்சார் முக்கியத்துவம் பெறுகிறது. நாகலாந்து மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி மாணவியாக இருக்கிறார். 

அங்கிருந்துதான் இந்த சென்சாரை வடிவமைத்துள்ளார். ‘‘நான் பிஹெச் சென்சார்களை ஒரு சிறிய வயர்லெஸ் ரேடியோ அதிர்வெண் அடையாள சாதனமாக, அதாவது விமான நிலையங்களில் நம்முடைய லக்கேஜை டேக் பண்ணினபிறகு உள்ளே இருப்பதை செக் செய்யும் சென்சார்களைப் போல் வடிவமைத்தேன்.

காரணம், உணவுகள் வீணாக்கப்படுவதை தவிர்க்க நினைத்தேன். ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் சுமார் 1.3 பில்லியன் மெட்ரிக் டன் உணவுகள் ஒவ்வொரு ஆண்டும் வீணாகின்றன.அதனால் குறைந்த விலையில், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும்படியான ஒரு சாதனத்தை கண்டறிய முற்பட்டேன். அதன்விளைவே இந்த சென்சார்.

இதனால் கெட்டுப்போன உணவை உண்பதை தடுக்கவும், உணவு உற்பத்தியாளர்களின் நஷ்டத்தை தவிர்க்கவும்முடியும். தவிர, வீணாகும் உணவுகளால் சுற்றுச்சூழலும் மாசுப்படுகிறது. 

இப்படி பலவிஷயங்களை கவனத்தில் கொண்டே இந்த சென்சாரை செய்தேன்.  இந்த பிஹெச் சென்சார் கருவி இணைக்கப்பட்ட உணவு பேக்கிங்கள், கப்பல் தளவாட மையங்கள், துறைமுகங்கள், பல்பொருள் அங்காடிகளின் நுழைவு வாயில்கள் போன்ற சோதனைச் சாவடியைக் கடக்கும் ஒவ்வொரு முறையும், அவை ஸ்கேன் செய்யப்பட்டு பிஹெச் அளவைக் கண்காணிக்கும் சர்வருக்குத் தரவுகளை அனுப்பிவிடும்.   

இந்த பிஹெச் அளவீடுகளில் ஏற்படும் மாறுபாடுகளைக் கொண்டு உணவு ஃப்ரஷ்ஷாக உள்ளதா என்பதை அறியலாம். இதனை மீன், பழங்கள், பால் மற்றும் தேன் ஆகிய உணவுகளில் வெற்றிகரமாக சோதித்தும் பார்த்துவிட்டேன். 

சிறப்பாக அளவுகளைக் காட்டுகிறது...’’ என உற்சாகமாகச் சொல்லும் கெங்டவுலியு சாவாங்கிடம், இந்த சென்சார் பயன்பாட்டுக்கு வருமா எனக் கேட்டபோது, ‘‘​​சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இருப்பதாகவும், அது என் சென்சாரைத் தயாரித்து வணிகமயமாக்க திட்டமிட்டுள்ளதாகவும்...’’கூறியுள்ளார்.

ஹரிகுகன்