குப்பைக் கிடங்கில் மறைந்த ரூ.6 ஆயிரத்து 500 கோடியைத் தேடும் 39 வயது இளைஞர்..!
‘இந்த ஊர் என்ன விலைனு கேளு... இந்தத் தெரு என்ன விலைனு கேளு...’ என ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி, செந்திலிடம் கேட்பார். ஏனெனில், அவருக்கு லாட்டரி டிக்கெட்டில் 15 லட்சம் ரூபாய் பணம் விழுந்திருக்கும்.  இதனால், சந்தோஷத்தில் அவரின் சவரப்பெட்டியைப் பிடுங்கி ஆற்றிலேயே வீசிவிடுவார் செந்தில். பின்னர், வீட்டிற்கு வந்து அந்த லாட்டரி டிக்கெட் எங்கே என மனைவியிடம் கேட்பார் கவுண்டமணி.அவரும் எங்கோ மறந்து வைத்துவிட்டதாகக் கூறி வீடு முழுவதும் தேடுவார். பிறகு, நினைவு வந்தவராக அதனை சவரப்பெட்டிக்குள் வைத்திருப்பதாகச் சொல்வார். 
இதனைக் கேட்டு ஆடிப்போய்விடுவார் கவுண்டமணி. இப்பதானே இவன் அதை ஆற்றில் தூக்கி எறிஞ்சான் என்பார். ஏறக்குறைய அப்படியொரு கதைதான் இதுவும். ஆனால், சவரப்பெட்டியை ஆற்றில் வீசியெறிந்த செந்தில் போல இந்தக் கதையில் இருப்பது சம்பந்தப்பட்ட நபரின் முன்னாள் மனைவி.  அதுமட்டுமல்ல. இங்கே சவரப்பெட்டிக்குப் பதில் ஹார்டு டிஸ்க். லாட்டரி டிக்கெட்டிற்கு பதில், அதற்குள் இருக்கும் பிட்காயின்கள். அவ்வளவுதான் வித்தியாசம். சரி; கதைக்குள் வருவோம். இங்கிலாந்து அருகிலுள்ள வேல்ஸ் நாட்டின் நியூபோர்ட் நகரத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹோவெல்ஸ். ஐடி எஞ்சினியரான இவர் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிட்காயின் எனும் கிரிப்டோகரன்சியை வாங்கினார். அன்று பிட்காயின் பற்றி உலகத்தில் யாருக்கும் தெரியாது.
பிட்காயின் என்பது கிரிப்டோகரன்சி அல்லது வெர்ச்சுவல் எனும் மெய்நிகர் நாணயம் அல்லது டிஜிட்டல் நாணயம் ஆகும். இது முற்றிலும் நாம் கையில் பயன்படுத்தும் நாணயங்கள் அல்லது ரூபாய் தாள்கள் போல் அல்லாமல் மெய்நிகர் நாணயமாக இருக்கும். கண்ணில் பார்க்கமுடியாத டிஜிட்டல் கரன்சி.
இந்த பிட்காயின் கரன்சியை அப்போதே உலக அளவில் வைத்திருந்த ஐந்து பேரில் ஜேம்ஸ் ஹோவெல்ஸும் ஒருவர். இவர் 2009ம் ஆண்டு தன் லேப்டாப்பில் இந்தக் காயின்களை ஒரு செயல்முறை மூலம் சேகரித்திருந்தார். அப்படியாக அவர் ஒருகட்டத்தில் 8 ஆயிரம் பிட்காயின்களை வைத்திருந்தார். ஆனால், அப்போது அதற்கு பெரிய அளவில் மதிப்பு இல்லை.
முதல்முறையாக இந்த பிட்காயின் கரன்சி 2010ம் ஆண்டுதான் நிஜ உலகிற்குள்ளேயே பரிவர்த்தனை ஆனது. அதாவது ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஒருவர் அப்போது 10 ஆயிரம் பிட்காயின்களுக்கு இரண்டு பீட்சாக்களை வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று பொருட்கள் வாங்கவும், சில சேவைகளைப் பெறவும் பிட்காயின்களை பயன்படுத்த முடியும். இருந்தும் பல கடைகள் பிட்காயினை ஏற்றுக்கொள்வதில்லை. பல நாடுகளும் இந்தக் கரன்சிக்குத் தடை விதித்துள்ளன.
ஆயினும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்த பிட்காயின் கரன்சியின் மதிப்பு அதிக அளவில் உயர்ந்தது. கடந்த டிசம்பரில் ஒரு பிட்காயினின் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலரைக் கடந்தது. அதாவது இன்றைய இந்திய மதிப்பிற்கு ஒரு பிட்காயின் என்பது 87 லட்சம் ரூபாய் ஆகும்.
இப்படி பார்க்கிறபோது இன்றைய மதிப்புப்படி அன்று இரண்டு பீட்சாக்களை ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளனர். அதாவது இன்றைய மதிப்புப்படி சுமார் 8,700 கோடி ரூபாய்க்கு அன்று இரண்டு பீட்சாக்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதுஒருபுறம் இருக்க, 2013ம் ஆண்டு ஹோவெல்ஸ் தன்னுடைய வீட்டைச் சுத்தப்படுத்தும்போது பிட்காயின் சேகரித்து வைத்திருந்த ஹார்டு டிஸ்க்கை மறந்துபோய், எந்த டேட்டாவும் இல்லையென நினைத்து குப்பைப் பையில் போட்டுவிட்டார். அவரின் முன்னாள் மனைவியோ அதனை குப்பைக் கிடங்கிற்கு அனுப்பிவிட்டார்.
இந்நிலையில் பிட்காயினின் மதிப்பு கூடுவதை அறிந்த ஜேம்ஸ் அந்த ஹார்டு டிஸ்க்கை தேடியுள்ளார். அப்போதுதான் அதனை குப்பைப் பையில் போட்டது ஞாபகத்திற்கு வந்துள்ளது. உடனே பதறிப்போய் தேடியுள்ளார்.
அது நியூபோர்ட் நகரத்தின் டாக்ஸ்வே குப்பைக் கிடங்கிற்குச் சென்றது தெரிந்தது.இந்நிலையில் 2013ம் ஆண்டில் ஜேம்ஸ், நியூபோர்ட் நகர சபையிடம் முறையிட்டார். அப்போதிலிருந்து அவர் பலமுறை நகரசபையிடம் அந்த ஹார்டு டிஸ்க்கை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கேட்டு வந்தார். அந்தக் குப்பைக் கிடங்கை தோண்டிப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கும்படியும் வேண்டினார். ஆனால், சுற்றுப்புறப் பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் பிரச்னையை உண்டாக்கும் என்பதால் இதற்கு நகர சபை அனுமதி மறுத்தது. அதுமட்டுமில்லாமல், ஹார்டு டிஸ்க் கிடைக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் அது செயல்பாட்டில் இருக்குமா என்பதற்கும் கேரண்டி கிடையாது. இந்நிலையில் எந்த அடிப்படையில் இவ்வளவு பெரிய குப்பைக் கிடங்கை தோண்ட அனுமதிக்க முடியும் என்றது நகர சபை.
இந்நிலையில் 2021ம் ஆண்டின்போது, தோண்ட அனுமதி அளித்தால் 70 மில்லியன் டாலர் நகரசபைக்கு தருவதாகக் கூறினார் ஜேம்ஸ். இது இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி ரூபாய். ஆனால், அப்போதும் நகர சபை மறுத்தது.
இதற்கிடையே தோண்டுவதற்கு அனுமதி அளிக்கும்படி கோர்ட் படியேறினார். கோர்ட்டும் சமீபத்தில் அவரின் வழக்கை டிஸ்மிஸ் செய்தது. இந்நிலையில்தான் அந்தக் குப்பைக் கிடங்கையே விலைக்கு வாங்கப் பரிசீலித்து வருவதாக எக்ஸ் தளத்தில் ஜேம்ஸ் பதிவிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நியூபோர்ட் நகர சபை இந்தக் குப்பைக் கிடங்கை மூடப்போவதாகத் தெரிவித்துள்ளது. தவிர, குப்பைக் கிடங்கின் ஒருபகுதியில் சோலார் ஃபார்ம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அதனை வாங்க பரிசீலித்துள்ளார் ஜேம்ஸ். இதற்கான பணத்திற்கு சில முதலீட்டாளர்களுடன் கலந்து பேசியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சரி; எதற்காக இவ்வளவு முயற்சிகளை மேற்கொள்கிறார் ஜேம்ஸ் எனக் கேட்கலாம். ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனைக்கும் பிரைவேட் கீ தேவை. அது அந்த ஹார்டு டிஸ்க்கில்தான் உள்ளது.
இதனை அவர் 2013ல் தேட முனைந்தபோது 8 ஆயிரம் பிட்காயின்களின் மதிப்பு 9 மில்லியன் டாலராக இருந்தது. இன்று 800 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயாகும். இவ்வளவு பெரிய தொகையை கைவிட யாருக்குதான் மனசு வரும்? அதனால்தான் தன்னுடைய புதையலை எப்படியாவது அடைய முனைப்புக் காட்டி வருகிறார் 39 வயதே நிரம்பிய ஜேம்ஸ் ஹோவெல்ஸ்.
பேராச்சி கண்ணன்
|