அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கு பி-2... உலகமே அப்பீட்டு!



அழித்ததா இல்லையா... என உலகமே தலையைப் பீய்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அழித்தாகி விட்டது என்கிறார். அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்களோ இன்னும் அழிக்கவில்லை என்கிறார்கள்.

புரிந்திருக்குமே... அதேதான்.

ஈரானின் அணுசக்தி தளங்களில் மூன்றை முற்றிலுமாக அழித்தாகிவிட்டது என்கிறார் டிரம்ப்.இல்லை... அமெரிக்கா தாக்குவதற்கு முன்பாகவே அங்கிருந்த முக்கியமான பொருட்களை ஈரான் வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று அப்புறப்படுத்திவிட்டது என்கிறது அதே அமெரிக்காவின் இராணுவத் துறை.இந்நிலையில் யார் சொல்வது சரி என பதில் தேடுவதை விட பி-2 போர் விமானங்களைக் குறித்து அறிந்துகொள்வது நல்லது.

ஏனெனில் இந்த பி-2 அதி

நவீன போர்விமானம்தான் ஈரான் எங்கு அணுசக்தி தளங்களை வைத்திருப்பதாக சொல்லப்பட்டதோ அந்த இடத்தைத் தாக்கியது. மட்டுமல்ல... பூமிக்கு கீழே... வெகு வெகு கீழே இயங்கி வந்த ஈரானின் அணுசக்தி தளங்களை அழிக்க அல்லது துளைக்க இந்த பி-2 போர் விமானங்களில் இருந்தே ஏவுகணைகள் / குண்டுகள் வீசப்பட்டன.துல்லியமாக இலக்கை... மிக மிக துல்லியமாக பி-2 போர் விமானங்கள் தாக்கின என்பது மட்டும் இன்று அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.

இச்சூழலில்தான் பி-2 அதி

நவீன போர்விமானங்கள் குறித்த செய்திகள் உலகெங்கும் வைரலாகி வருகின்றன.காரணம், உலகிலேயே... ஏன் பிரபஞ்சத்திலேயே அமெரிக்காவிடம் மட்டும்தான் இந்த பி-2 ரக போர் விமானங்கள் இருக்கின்றன!1970களில் அதிநவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது. புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது. கடந்த 1989ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக அன்று முதல் பி-2 கருதப்படுகிறது. 172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்தப் போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. 

அணுகுண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் இந்த விமானத்துக்கு உண்டு.அதாவது ஒரு பி-2 போர் விமானத்தில் 40,000 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கி.மீ. வரை தரையிறங்காமல் பறக்கும். இது மணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 50,000 அடி உயரம் வரை பறக்கும்.

இப்படியாக அமெரிக்க விமானப் படையிடம் மொத்தம் 21 பி-2 போர் விமானங்கள் உள்ளன. ஒரு விமானத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.18,000 கோடி! அமெரிக்காவின் எப்.16, எப்.35 ரக போர் விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன; விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. 

ஆனால், பி-2 ரக போர் விமானங்களை வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா இதுவரை விற்பனை செய்யவில்லை. ஈரான் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய 7 பி-2 போர் விமானங்களும், அமெரிக்காவின் மிசோரி மாகாணம், வெயிட்மேன் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டவைதான். ஒவ்வொரு பி-2 விமானத்திலும் இரு ஜிபியு-57 வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இரு விமானிகள் இணைந்து விமானத்தை இயக்கினர்.

அமெரிக்காவில் இருந்து ஈரானுக்கு செல்லும் வழியில் பி-2 போர் விமானங்கள் வேறு எங்கும் தரையிறங்கவில்லை. சுமார் 37 மணி நேரங்கள் தொடர்ச்சியாகப் பறந்தன. நடுவானிலேயே 7 போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டன. ஈரானின் 3 அணுசக்தி தளங்களைத் தாக்கிவிட்டு பின்னர் 7 விமானங்களும் பத்திரமாக அமெரிக்காவுக்குத் திரும்பின.

ஆக, வடிவேலுவின் ‘கையைப் பிடிச்சு இழுத்தியா’ கதையாக ஈரானின் அணுசக்தி தளங்களை அமெரிக்கா வீழ்த்தியதா இல்லையா என்ற வினா, உலகளவில் மீம்ஸ் கன்டென்ட் ஆக உலாவிக் கொண்டிருக்க... சப்தமில்லாமல் பி-2 அதிநவீன போர் விமானங்கள் குறித்த ஆராய்ச்சி ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறத் தொடங்கியிருக்கின்றது.

என்.ஆனந்தி