‘நீ சிகரெட் பிடிப்பியா?’‘ஒயின் குடிப்பியா?’‘உனக்கு பாய் ஃபிரெண்ட் உண்டா?’‘டேட்டிங் போயிருக்கியா?’+2 முடித்துவிட்டு கல்லூரிக்குக் காத்திருக்கும் இளம்பெண்ணை இப்படியெல்லாம் கேட்கலாமா?
கேட்டார்கள்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தமது வீட்டுக்கு விருந்தாளியாக வந்து தங்கிய கோயம்புத்தூர் பெண் சந்தியாவை இப்படி நலம் விசாரித்தது அவருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் வெட்கமுமாக இருந்தது.
‘‘ஐரோப்பிய கலாசாரப்படி வயது வந்த ஆணோ பெண்ணோ பெற்றோருடன் தங்குவதில்லை. ஒரு தெரு தள்ளியாவது & ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள் என்று யாருடனாவது தங்குவார்கள். மனம் ஒத்துப்போனால் திருமணம். இல்லையேல் இன்னொரு தோழன், தோழி.
விவாகரத்து செய்தால் நஷ்டஈடு அதிகம் என்பதால் திருமணம் செய்யாமல், பத்திரத்தில் ஒப்பந்தம் செய்து வாழ்பவர்களும் உண்டு. மனம் வெறுத்துப் போய் வேறு வழியின்றி குழந்தைகளுடன் தனித்து வாழும் ‘சிங்கிள் பேரன்ட்’ தாய்மார்களும் உண்டு.’’
படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது ‘இயகோகா’ சுப்பிரமணியம் எழுதிய ஐரோப்பிய பயண அனுபவ நூல்: ‘இன்னொரு யுகசந்தி’ & விஜயா பதிப்பக வெளியீடு. இயகோகா சுப்பிரமணியம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த உலகளாவிய தொழிலதிபர். கதை, கவிதை, கட்டுரை என்று நான்கைந்து நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
+2 சந்தியா வேறு யாருமல்ல... இவருடைய தம்பி மகள். சந்தியாவையும் தனது தாயையும் தனித்தனியாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்று, இரண்டு தலைமுறைகளின் பார்வைகளைப் பதிவு செய்துள்ளார். மேலை நாட்டுக் கலாசாரத்தை நம்நாட்டுக் கலாசாரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பார்த்து இந்நூலைப் பின்னியிருக்கிறார்.
பாஸல் நகரில் ஓர் இந்திய உணவகம். சுப்பிரமணியத்துக்குத் தெரிந்த ஒரு நண்பர், மனைவியோடு பசியாறிக் கொண்டிருக்கிறார். கணவனும் மனைவியும் தாங்கள் சாப்பிட்டதற்கான பில்லை தனித்தனியாகக் கொடுக்கிறார்கள். திரையரங்குகளிலும் தனித்தனியாக டிக்கெட் வாங்குகிறார்கள். இது புதிராக இருக்கவே, தயங்கியபடியே விசாரிக்கிறார் சுப்பிரமணியம்...
‘‘இருவரும் நான்கைந்து ஆண்டுகாலமாக ஒன்றாக வாழ்ந்து, சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டோம். அப்போதே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அதாவது, அவரவர் செலவை அவரவரே செய்வது. பொது நண்பர்கள் வந்தால், யாருடைய நண்பரோ அவர் அந்தச் செலவை செய்து கொள்வது. அவள் என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறாள். அதனால் சில நேரம் விலையுயர்ந்த ரெஸ்டாரன்ட்டுக்குப் போவதானால் நான் தவிர்த்து விடுவேன்.’’
‘‘அப்படியானால் வீட்டு வேலை?’’
‘‘அதையும் பங்கிட்டுக் கொள்வோம். ஒரு வாரம் நான் துணிகளைத் துவைத்தால், அவள் தோட்டத்தை சுத்தம் செய்வாள். மறுவாரம் மாற்றிக் கொள்வோம். ஷாப்பிங் சேர்ந்து செல்வோம். சமையலில் மட்டும் நான் சில உதவிகள் செய்வேன். எனக்குச் சமைக்க இயலாது என்று முன்னமேயே அவளுக்குத் தெரியும்.’’
‘‘சரி... குழந்தை பிறந்தால்?’’
‘‘இருவரும் செலவைப் பகிர்ந்து கொள்வோம். வெரி சிம்பிள்!’’
‘ஆனால், மேலை நாட்டில் எல்லோருமே மேற்கூறிய நண்பரைப் போல் வாழ்கின்றார்கள் என்பதல்ல’ என்று சொல்லும் சுப்பிரமணியம், இன்னொரு நண்பரைப் பற்றிச் சொல்கிறார்...
மனைவியை விவாகரத்து செய்திருந்த அந்த நண்பர், தனது வருமானத்தின் பெரும் பகுதியைக் குழந்தைகளின் செலவுக்குத் தந்துவிடுகிறார். குழந்தைகளை மாதம் ஒருமுறை சென்று பார்த்து வருகிறார்.
லேப்டாப்பில் சில படங்களைக் காண்பித்து, ‘‘இவள்தான் என் மாஜி மனைவி. உடன் இருப்பவர் அவளது சமீபத்திய கணவர். இது எனது மூத்த பெண். இது இளைய பெண். அந்தப் பையன் எனது மனைவியின் பையன் & அதாவது சமீபத்திய கணவருக்குப் பிறந்த பையன். விடு முறையில் எடுத்த புகைப்படங்களை நான் காண்பதற்காக அனுப்பியிருக்கிறாள்’’ என்று மனவருத்தமோ, முகச்சுளிப்போ இல்லாமல் பேசுகிறார்.
அது சரி... பெண் துணையே இல்லாமல் எப்படி வாழ முடிகிறது என்று கேட்டால் &‘‘இனி இன்னொரு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. நல்ல தோழியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அதுவரை செக்ஸுக்காக என்றால் அதற்கென சில இடங்கள் இருக்கின்றன’’ என்கிறார்.
இயகோகா சுப்பிரமணியத்தின் பயண அனுபவங்களைப் படித்தபோது எனக்குப் பெரியார் சொன்னது நினைவுக்கு வந்தது.

ஒரு சுயமரியாதைத் திருமணத்தில் தம்பதியைப் பார்த்து, ‘‘உங்களின் வாழ்க்கையைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் எங்கும் ஒன்றாகவே போக வேண்டும். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் பிரியக்கூடாது’’ என்று வாழ்த்தினார்.
ஆனால் இன்று எதற்காக இணைகிறோம், எதற்காக பிரிகிறோம் என்று தெரியாமலேயே ஜோடிகள் பிரிந்து பிரிந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்திலும் குடும்பநல நீதிமன்றங்களிலும் விவாகரத்து வழக்குகள் வழிந்து கொண்டிருக்கின்றன. குடும்பநல நீதிமன்றத்தின் வழக்குரைஞர் நீதிச்செல்வத்திடம் இதுகுறித்து பேசினேன்.
‘‘ஐ.டி&யில் பணியாற்றுகிறவர்களிடமிருந்துதான் விவாகரத்து வழக்குகள் நிறைய வருகின்றன. இருவரும் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதுவே அவர்களுக்குள் பெரிய அகங்காரத்தை வளர்த்துவிடுகிறது. ‘என்னை நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னை நீ பார்த்துக்கொள்’ என்று வார்த்தைகள் தடித்து விலகிப்போய்விடுகிறார்கள். வழக்குக்காக அவர்கள் செலவழிக்கும் பணத்தையும் நேரத்தையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள செலவழிப்பதில்லை. தங்கள் குழந்தைகளை முன்வைத்துக்கூட அவர்கள் யோசிப்பதில்லை. அம்மா இல்லாவிட்டாலும் அப்பா இல்லாவிட்டாலும் பிள்ளை பாவம்தானே?’’ என்றார்.
பன்னாட்டு நிறுவனங்கள் நமக்குப் பணத்தைக் காட்டி மனத்தைப் பாழடித்துவிட்டார்கள். கணவனும் மனைவியும் சந்தித்துக் கொள்ள முடியாமல் இரவும் பகலும் மாறி மாறிப் பணியாற்றுகிறார்கள். தப்பில்லை என்கிற மனோபாவத்தில் உடலுறவையும்கூட ஒரு பொழுதுபோக்காக அணுகத் தொடங்கிவிடுகிறார்கள். தவறி விழுகிறவர்கள் எழுந்து கொள்ள இயலாமல் திணறுகிறார்கள். இருந்தாலும், இல்லை என்றாலும் கணவனுக்கு மனைவி மீது சந்தேகம்; மனைவிக்குக் கணவன் மீது சந்தேகம். சந்தேகத்தின் மூடுபனியில் அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.
அவனுக்குள் இருக்கிற அவளும் அவளுக்குள் இருக்கிற அவனும் சேர்ந்துதான் அவர்களைத் தேட வேண்டும்.
‘தேவன் தந்த வீணை & அதில்தேவி செய்த கானம்தேடும் கைகள் தேடினால் &அதில்ராகமின்றிப் போகுமோ?’ கண்ணதாசன்
அவர்கள் அதிர்ஷ்ட சாலிகளாக இருந்தனர்அவர்கள் அதிர்ஷ்ட சாலிகளாக இருந்தனர்.கொஞ்சம் வேலை கொஞ்சம் காதல் என்றிருந்தவர்கள் ஒரு வேலை போல காதலையும் எடுத்துக் கொண்டவர்கள். அல்லது தம் வேலையை மட்டும் நேசித்தவர்கள். நானும் என் வழியில் அலுவல் மிகுந்தவனாகத்தான் இருந்தேன்.சிறிது காதலித்தேன்; சிறிது பணியாற்றினேன். வேலை என் காதலைத் தகர்த்தது. காதலும் அடிக்கடி என் வேலையில் குறுக்கிட்டு வந்தது. இறுதியில் சோர்ந்து போனேன்இரண்டையும் பூர்த்தி செய்யாது விட்டேன். ஃபெயிஸ் அகமத் ஃபெயிஸ்
தமிழில்: சுந்தர ராமசாமி
ஊழல் சக்கரம்‘வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது’ என்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி.‘ஊழலை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.‘சுத்தமான அரசியல் வேண்டும்; ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும்; இந்தியாவின் கறுப்புப்பணத்தை மீட்டு வரவேண்டும்’ என்கிறார் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி.‘லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்’ என்கிறார் அன்னா ஹசாரே. உண்மையில் யார்தான் ஊழல் செய்கிறார்கள்? அரசியல் தலைவர்களா? அதிகாரிகளா? பொதுமக்களா?(சலசலக்கும்...)
பழநிபாரதி