உபசரிப்பு





ஞாயிறு காலை ஒன்பது மணி... ரவியின் செல்போன் வழக்கம் போல் நாதஸ்வரம் வாசிக்க, உள்ளே ரவியின் புது மனைவி ரேகா சலித்துக் கொண்டாள்.

‘‘சே... இன்னிக்கு எவன்னு தெரியலயே, கடவுளே! நண்பர்கள் தேவைதான்... அதுக்காக இப்படியா? ஒவ்வொரு ஞாயிறும் யாராவது போன் பண்ணி சாப்பிட வரவேண்டியது... முழுநாளும் டேரா போட்டுட்டு, மெதுவா சாயந்திரம் காபி குடிச்சிட்டுக் கிளம்ப வேண்டியது. போகும்போது ஃபார்மாலிட்டிக்கு ‘லீவு நாள்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... சாரி!’ன்னு ஒரு வழிசல்...’’

‘‘ரேகா... நம்ப மூர்த்திதான். வரானாம்! நல்ல லஞ்ச் ரெடி பண்ணிடு... உனக்கு கஷ்டம்தான்! பாவம் பேச்சிலர் பசங்க.. மெஸ் சாப்பாடு சாப்பிட்டு வாய் புளிச்சுப் போயிருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க!’’ - நண்பர்களை விட்டுக் கொடுக்காமல் பேசினான் ரவி.

சில வாரங்கள் கழிந்தது. இப்போதெல்லாம் யாரும் ரவி வீட்டிற்கு வருவதே இல்லை... ரவியே கூப்பிட்டும் கூட!
ரேகாவின் நெருங்கிய தோழி கேட்டாள், ‘‘என்னடி பண்ண?’’
‘‘அது ஒண்ணுமில்லடி, ரெண்டு சமையல். ஒண்ணு என் வீட்டுக்காரருக்கு... இன்னொண்ணு அவரோட
ஃப்ரெண்ட்ஸுக்கு! அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி உப்பையும் தாறுமாறா போட்டுருவேன். என் சமையல் சரியில்லனு என் கணவர்கிட்டயும் நேரா சொல்ல முடியாது... அதான் ஒதுங்கிட்டாங்க!’’ - ரேகா கண்ணடித்தாள்.