பிளாட்பார போட்டோ கிராபர்கள்!





‘‘வாவ்! இத்தனை கலையம்சத்தோடு தேடித்தேடி இயல்பான புகைப்படங்கள் எடுத்த அந்த ஜீனியஸ் யார்?’’ - உங்களுக்குத் தோன்றும் அதே கேள்விதான் நமக்கும் தோன்றியது.

‘‘இவங்கல்லாம்தான் அந்த ஜீனியஸ்!’’ என்று பதில் வந்த திசையில் இருந்தவர்கள், வீடின்றி சென்னையின் தெருவோரங்களில் வசிக்கும் ஏழைக் குழந்தைகள். இந்தியா முழுவதும் கிளை பரப்பி, குழந்தைகளின் மேம்பாட்டுக்காக இயங்கும் ‘வேர்ல்ட் விஷன்’ என்ற தொண்டு நிறுவனம், சமீபத்தில் சென்னையில் நடத்திய புகைப்படக் கண்காட்சியில்தான் இந்த இன்ப அதிர்ச்சி!
வேர்ல்ட் விஷனின் சென்னைக் கிளையின் சமூக ஆய்வாளரான மெல்வினிடம் பேசினோம்...

‘‘வீடில்லாத தெருவோர மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புன்னு நாங்க சில உதவிகளைச் செய்யறோம். அதுல ஒரு பகுதியாத்தான் அவங்க பிரச்னைகளை அவங்களையே விட்டு சொல்ல வைக்க நினைச்சோம். சென்னையில உள்ள தெருவோரக் குழந்தைகள்ல 20 பேரை இதுக்காக செலக்ட் பண்ணினோம். மூணு நாள் பயிற்சியில அவங்களுக்கு டிஜிட்டல் கேமரா பத்தி சொல்லிக் கொடுத்து, கேமராவைக் கொடுத்தனுப்பிட்டோம்.

இந்தப் படங்களைப் பார்த்தாலே அவங்க வாழ்க்கை தெரியும். இவங்களோட சொத்தெல்லாம் தெரு ஓரமா வச்சிருக்குற ஒரு சின்ன பெட்டி தான். தண்ணீர், கழிப்பறை, ஏன்... தூக்கம்கூட இவங்களுக்கு சிரமமான காரியம்தான். இவங்கள்ல சிலராவது நல்ல நிலைமைக்கு வந்தா, அந்தக் குடும்பங்கள் ஓரளவு நிமிரும்’’ என்றார் அவர்.



ரயில் தண்டவாளங்களில் உலர்த்தப்படும் துணிமணிகள், ரயில்களைக் கழுவும் தண்ணீர்க் குழாய்களில் குளிக்கும் மக்கள் என மனதைப் பிசையும் இந்தக் காட்சிகளைப் பதிவு செய்த குட்டி சத்யஜித்ரேக்கள் சிலரிடம் பேசினோம்...

‘‘தெருவுலகூட நாங்க நிம்மதியா வாழ முடியல. துணிய காய வைக்கப் போனா போலீஸ்காரங்க விரட்டுறாங்க. ரோட்டுல தூங்கிட்டா காரக் கொண்டாந்து ஏத்திடுறாங்க. அதையெல்லாம்தான் நான் படம் எடுத்தேன்’’ என்றாள் எக்மோர் பகுதியில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ரபீஷா.

‘‘குடிக்கிற ஆட்களாலத்தான் இப்ப ரொம்ப தொல்ல. இன்னும் கொஞ்ச நாள்ல பிளாட்பார குடிசைகளைக்கூட இடிக்கப் போறாங்கன்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் எங்க போறதுன்னு தெரியல’’ என்ற பவுல்ராஜுக்கு 15 வயதுதான் இருக்கும். குடும்பத்துக்காக தபால் உறைகள் செய்யும் வேலைக்குச் செல்கிறானாம்.
வாய்ப்பும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டால் இவர்களின் இந்த யதார்த்தப் புகைப்படங்கள் இந்தியாவையே உலுக்கலாம்!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்