தாண்டவம் சினிமா விமர்சனம்





இந்தியாவுக்குள் ஊடுருவிய வெளிநாட்டு உளவாளியைக் கண்டுபிடித்து, இங்கிருந்து அவன் அனுப்பிய ஆயுத ரகசியத்தைக் கைப்பற்ற லண்டனுக்கு செல்லும் இந்திய உளவாளியின் கதை. அதற்குள்ளேயே இருக்கும் ஆக்ஷனோடு, சென்டிமென்ட், காதல், காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

உளவாளியாக விக்ரம். ‘ரா’ அதிகாரியான அவர், இன்னொரு அதிகாரி ஜெகபதிபாபுவுடனான நட்புடனும், கடமை உணர்வுடனும் வரும் காட்சிகள் எல்லாம் ஃபிளாஷ்பேக்கில் நுழைய, மேற்படி லண்டன் ஆபரேஷனால் அவர் தன் மனைவி அனுஷ்காவையும், கண்பார்வையையும் இழந்து, அதன் பின்னணியில் இருக்கும் சதிகாரர்களைப் பழிவாங்கும் எபிசோடிலிருந்து படம் தொடங்குகிறது.
‘ட்தட்... ட்தட்...’ என்று வாயினாலேயே ஒலி எழுப்பி, அதன் எதிரொலி மூலம் தன் சுற்றுப்புறத்தை விக்ரம் அறிந்து கொண்டு செயல்படுவது பார்வையில்லாதவர்களின் உலகில் புது உத்தியாவதைப் போலவே, அவர் ‘காசி’யின் சாயல் வராமல் நடித்திருப்பதும் புதிய மெனு. ஒலியை உணர்வதற்காக காதுகளை ஒலியின் பக்கம் லேசாகத் திருப்பியபடியே முன்னேறுவதில் ‘சபாஷ்’ போட வைக்கிறார் விக்ரம். நம் காட்சியில் தெரியும் அவர் கண்களும் ஒளியில்லாததைப் போன்றே உணரச் செய்திருப்பதும் நன்று.

ஃபிளாஷ்பேக்கில் உளவு அதிகாரியாக மிடுக்குடன் வரும் அவர், தன் பணி நிமித்தமாக திருமணம் வேண்டாம் என்பதும், அவருக்குப் பெண் பார்த்திருக்கும் ‘கண் டாக்டர்’ அனுஷ்காவும் அது போலவே சொல்லிக்கொண்டிருப்பதும் அறிமுக அளவில் ஓகே. ஆனால் திருமணத்துக்குப் பிறகும் ஒருவர் புரொபஷனை இன்னொருவர் தெரிந்து கொள்ளாமலிருப்பதும், தனித்துப் படுப்பதும் காமெடிக்கும் சென்டிமென்ட்டுக்கும் உதவுகிறதே தவிர, லாஜிக்குக்கு உதவவேயில்லை. அறிமுகமாகும்போதும், விடை பெறும்போதும் மட்டுமே ரசிக்க வைக்கும் அனுஷ்கா, இடையில் ‘கெமிஸ்ட்ரி’ இல்லாததால் தீபம் ஏற்றாத குத்துவிளக்காகத் தெரிகிறார்.   

‘‘கூகுள்ல தேடிப் பார்த்தீங்கன்னா கூட என்னை மாதிரி ‘குட்பாய்’ கிடைக்க மாட்டான்...’’ என்று சொல்லி விக்ரம் செய்யும் கொலைகளுக்காக மாட்டிக்கொள்ளும் லண்டன் டிரைவரான சந்தானம் வரும் காட்சிகள் எல்லாம் கலகல. அவர் சொல்வதை வைத்து கொலைகாரனின் மாதிரிப் படத்தை தலையில்லாமல் லண்டன் போலீஸ் வரைகையில் துப்பறிவாளர் நாசர், ‘‘‘தலை’ எங்கே..?’’ என்று கேட்க, ‘‘அவர் தமிழ்நாட்டுல ஷூட்டிங்ல இருப்பார்...’’ என்று சந்தானம் சொல்வது டாப் கிளாஸ் காமெடி.

‘லண்டன் அழகி’ எமி ஜாக்ஸனின் அப்பாவை இலங்கைத் தமிழராக்கி, எமியைத் தமிழச்சியாக மாற்றியிருப்பதைப் போலவே விக்ரமுடனான அவர் காதலுக்கும் இன்னும் சுவை சேர்த்திருக்கலாம். முகத்தைத் தொட்டுப் பார்த்து, ‘‘நீ ரொம்ப அழகு...’’ என்று பார்வையில்லாத விக்ரம் சொல்லும்போது சின்ன மின்னல் வெட்டும் எமியின் எக்ஸ்பிரஷன் அழகு. லஷ்மி ராய் பேரையும் டைட்டிலில் பார்த்தோமே என்று நினைக்கும்போது உள்ளே வரும் லஷ்மி ராய், விக்ரமின் பழிதீர்க்கும் வேலைகளுக்கு மட்டும் உடந்தையாகி வீழ்வது ஐயோ பாவம்..!

ஜெகபதி பாபுவின் குளோஸப்களும், நம் ரசிக ஞானமும் ஒரு புள்ளியில் சந்திக்க, அவர் கேரக்டரின் சஸ்பென்ஸ் உடைபடும்போது எந்த விளைவும் ஏற்படவில்லை. நாசர் தன் வழக்கப்படியே கேரக்டருக்கு நியாயம் சேர்த்து ரசிக்க வைத்திருக்கிறார். விக்ரமின் உயரதிகாரி சாயாஜி ஷிண்டே சம்பந்தமில்லாமல் திருட்டு முழி முழித்து கடுப்படிப்பது, அவரும் சதிக்கு உடந்தையாக இருப்பாரோ என்று நம்மை ரூட் மாற்றி விட உதவுகிறது. இரண்டு பாடல்களில் ரசிக்க வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷின் இசை ஓகே. ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் அற்புத கோணங்களும், வண்ணங்களும் உலகத்தரம். ‘அதிரடி பஞ்ச்’களில் சண்டைக்காட்சிகள் ரசிக்க வைத்திருக்கின்றன.
- குங்குமம் விமர்சனக்குழு