எம்.ஜி.ஆர் ஃபார்முலா படம் மாற்றான்





அபார நடிப்பாற்றலால் படத்துக்குப் படம் தன் வளர்ச்சி விகிதத்தை இரு மடங்காக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்ற சூர்யாவின் திரை வளர்ச்சி ‘மாற்றான்’ படத்தில் நான்கு மடங்காகலாம். காரணம், படத்தில் அவர் ஏற்றிருக்கும்  ‘அகிலன்’, ‘விமலன்’ என்ற ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடம்.

இதுவரை தான் ஏற்ற பாத்திரங்களிலேயே ‘பிதாமகன் சக்தி’க்குப் பின் இதுதான் சவாலாக இருந்ததாகச் சொல்கிறார் சூர்யா. அப்படி என்ன சவால்..?


‘‘நடிப்புல பெரிய சேலஞ்ச் மேடை நாடகம். ஏன்னா, சினிமாவுல பீச்சுல இருக்கோம்னா பீச்சுல நின்னுதான் பேசுவோம். எதிரே கடல் இருக்கும். காற்று தழுவும். கால் விரல்களில் மணல் இடறும். சுற்றி மனிதர்கள் நடமாட்டம் இருக்கும். காட்சியில் உணர்ச்சி காட்டி நடிக்கிறது மட்டுமே தேவையா இருக்கும்.

ஆனா நாடக மேடையில கடல் இருக்காது. கடல் காற்று வீசாது. மணல் இருக்காது. அதிகபட்சமா அது வரையப்பட்ட திரை வேணும்னா இருக்கும். எதிரே நம் செய்கையைப் பார்த்துக்கிட்டு காட்சிக்கு சம்பந்தமில்லாத மனிதர்கள் இருப்பாங்க. எல்லாம் இருக்கிறது போல பாசாங்கோடு நாம நடிக்கணும்.



அதைவிடக் கொடுமையானது, இந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடம். நாங்க ரெண்டு பேரும் வர்ற காட்சிகளில் எல்லாம் நான் மட்டுமேதான். எங்களை இணைக்க கிராஃபிக்ஸால மட்டுமே முடியும்ங்கிறதால, ஒரு போர்ஷனை நடிச்சு முடிச்சுட்டு, அடுத்த போர்ஷனை நடிக்கணும். இதுக்கான பேக்ரவுண்டுகள் ஒத்துப்போக, கிரீன் மேட் போட்டு எடுப்பாங்க. அதனால சுத்தி பச்சைக் கலரைத் தவிர ஒண்ணுமே இருக்காது. அது பார்க்கோ, பீச்சோ, தியேட்டரோ... நான் நடிக்கும்போது எல்லாமே ஒரு பச்சை பெயின்ட் அடிக்கப்பட்ட அறைதான்.

ஒரு பாத்திரத்துக்கான குணாதிசயத்தோட, அந்த சீனுக்கான எக்ஸ்பிரஷன்களை, கூட இன்னொரு பாத்திரமும், எதிரே மற்ற கேரக்டர்களும் இருக்கிறதா உணர்ந்து செய்யணும். அதேபோல மீண்டும் ஒரு முறை இன்னொரு கேரக்டரின் குணாதிசயத்தோட, வேற உணர்ச்சிகளோட நடிக்கணும். ஒரு காட்சியோட தொடர்ச்சியை எடுக்க 60, 90 நாள் இடைவெளி கூட ஆகிடும். முன்னே நடிச்சதை மனசுல வச்சு மீண்டும் நடிக்கணும்...’’ என்று தோள்குலுக்கிச் சிரிக்கும் சூர்யாவுக்கு, அந்த இரண்டு கேரக்டர்களிலும் அகிலனின் கேரக்டரே மிகுந்த சவாலாக இருந்தது.


‘‘ரெண்டு கேரக்டர்களும் செம இன்ட்ரஸ்டிங். ஒட்டிப் பிறந்ததால இவங்களை குறையுள்ளவங்க போல சித்தரிச்சு, அவங்க கஷ்டங்களைச் சொல்லி மத்தவங்க அனுதாபத்தைத் தேடற படம் இல்லை இது. உடல் பிரச்னையை தற்காலிகமா ஒத்தி வச்சுட்டு, மனம் சம்பந்தப்பட்டு கதையை நகர்த்தியிருப்போம்.


அதுல விமலன் ரொம்ப அடக்கமானவன், ஆழமானவன். மணிரத்னம், வைரமுத்து போல புகழ்பெற்றவங்களின் மகனா பிறந்தும், வர்றது போறது தெரியாம அமைதியா, அறிவாளிகளா இருக்கிற நந்தன், மதன் கார்க்கி போல ஒருத்தன். ஆனா ‘அகி’ இருக்கானே... அவன் கேரக்டர் படு வித்தியாசமானது. ரொம்ப நாட்டி. அவன் கம்யூனிசம் பேசினா இவனுக்கு ஆகாது. பணக்கார மமதையில தள்ளாடித் திரியறவன்.



இப்படி ரெண்டு மனங்கள் ஒட்டியிருக்கு ஒரே உடலுக்குள்ள. விமலன் ஆர்க்கிடெக்ட் எக்ஸிபிஷனுக்குப் போகணும்னா, அகிக்கு ‘பப்’ போகணும். என்ன செய்ய..? அவனுக்காக இவன் எக்ஸிபிஷனுக்கும், இவனுக்காக அவன் ‘பப்’புக்கும் போவாங்க. இந்த இன்ட்ரஸ்டிங்கான முரண்ல என்ன ஆகுதுங்கிற கதையும், அதுவே முழுப்படமும் ஆகிடாம, உள்ளே ஒரு சோஷியல் அவேர்னஸும் இருக்கு. எல்லா சுவாரஸ்யங்களும் கொண்ட எம்.ஜி.ஆர் ஃபார்முலா படமாக இருக்கும் ‘மாற்றான்’.

எல்லா கேரக்டர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் வச்சுக்க முடியும். ஆனா ‘அகி’ மாதிரி ஒருத்தன் இல்லவே இல்லை; அல்லது நான் பார்த்ததில்லைன்னு சொல்லலாம். அப்படித்தான் பிதாமகன் ‘சக்தி’யும், இந்தப்படத்து ‘அகி’யும் ரொம்ப வேறுபடறாங்க. அதனால்தான் என் இந்தக் கேரக்டர்கள் எனக்கு சேலஞ்சா இருந்ததா சொன்னேன்...’’
‘‘இந்தப் படத்துக்கும் வெளிநாடுகள் போனது கதைக்காகவா, புது எக்ஸ்பீரியன்ஸை ரசிகர்களுக்குக் கொடுக்கிறதுக்கா..?’’
‘‘கதைக்கான விஷயங்கள் தேடித்தான் லாட்வியா, ரஷ்யா எல்லாம் போனோம். எதைத் தேடிப் போனோமோ அது அங்கே இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அந்த விஷயத்துல கே.வி.ஆனந்தோட பரந்த அறிவு வியக்க வைக்குது.



படத்துக்கு ஒரு விஷயம் தேவைப்பட்டா, அது புரொடக்ஷன் வேலைன்னு ஒதுங்கி இருக்கிறதில்லை. உதாரணமா, விமலன் கேரக்டர் படிக்கிறவன் கிறதால அவ்வளவு புக்ஸ் அவரா வாங்கிச் சேர்த்தார். காஜல் கேரக்டர் ‘பொட்டானிகல்’ விஷயங்களோட வர்றதால, அதுக்காக பெங்களூருவிலேர்ந்து செடிகள் வாங்கி தன் வீட்டுல வளர்த்தார். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போறதுல முக்கியமான டைரக்டர் அவர்...’’
‘‘அப்படியே காஜல் பத்தியும் சொல்லிடுங்க..’’

‘‘வழக்கமா பொண்ணுங்க எப்பவுமே ஸ்மார்ட். அதிலும் காஜல் ரொம்பவே ஸ்மார்ட். நான் ரெண்டு பேர். காஜல் ஒரே கேரக்டர். அதனால அவங்களுக்கும் ரெட்டிப்பு வேலையும், பிரசன்ஸ் ஆஃப் மைண்டோட நடிக்க வேண்டிய அவசியமும் இருந்தது. அவங்க ரொம்ப ஷார்ப்பா இருந்ததால எல்லாத்தையும் புரிஞ்சு நடிச்சுட்டாங்கன்னு சொல்லணும். ஒரு சீன்ல நான்பாட்டுக்குப் பேசிட்டு வர, பதிலுக்கு அவங்க ரஷ்யன் லாங்குவேஜ்ல பேசணும். ரஷ்யனை ஒரு கிளான்ஸ் எடுத்துக்கிட்டு பேசி அசத்திட்டாங்க...’’
‘‘இப்படி படத்துக்குப் படம் புதுசா செய்யற நீங்க, ‘சிங்க’த்தை மட்டும் சீக்வலா செய்ய வேண்டிய அவசியம் என்ன..?’’



‘‘அதை சீக்வல்னு சொல்ல முடியாது. அதே கேரக்டர். ஆனா வேற கதை; வேற களம். அந்தக் கேரக்டர் மட்டும் குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை, இங்கேர்ந்து இந்தி வரை எல்லாத்துக்கும் பிடிச்சிருந்ததால, அதை அப்படியே வச்சிருக்கோம். அதோட வேற வேற கதைன்னு புதுசா செஞ்சுக்கிட்டிருக்கும்போது, நம்ம கல்ச்சரோட வேல்யூஸ் சொல்ற கதையும் ஒண்ணு சொல்லணும். அப்படி நம்ம சென்டிமென்ட்ஸ், நம்ம சுற்றங்கள், நம்ம கல்ச்சர்னு ஸ்கிரிப்ட் செய்யறதுல டைரக்டர் ஹரியை அடிச்சுக்க முடியாது. அதனாலதான் கிளம்பிட்டேன்...’’
‘‘ஷங்கரோட ‘ஐ’ல நடிக்கக் கேட்டு, அது முடியாமப் போனதுல வருத்தமா..?’’
‘‘ஷங்கர் சார் கேட்ட டேட்ஸும், ‘சிங்கம்’ டேட்ஸும் ஒண்ணா வந்தது. நிஜத்துல எப்படி ரெண்டு வேடம் பண்றது..? அதுவும் ‘சிங்க’த்துக்காக ஸ்கிரிப்ட்டை முடிச்சு வச்சுட்டு ஹரி எனக்காகக் காத்திருந்தார். ஷங்கர் சாரும், நானும் இங்கேதான் இருப்போம். இன்னொரு வாய்ப்பு வராமலா போகும்..?’’
- வேணுஜி