கொசுமூ





‘‘வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில், ஒவ்வொரு மாதமும் தங்க வேட்டை!’’ - அந்த விளம்பரம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

‘‘இவை ‘கொசுமூ’ எனப்படும் காங்கோ நாட்டு ராட்சத கொசுக்கள். பத்து வாரத்திற்கு ஒரு முறை, இவை இரண்டு கிராம் அளவில் தங்க முட்டை இடும். ஒரு லட்ச ரூபாயில் உங்களுக்காக 20 கொசுக்களை நாங்களே பராமரித்து வளர்க்கிறோம். ஒவ்வொரு பத்தாவது வாரமும், இந்த கொசுக்கள் இடும் தங்க முட்டைகள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கே சொந்தம்’’ - விளம்பரம் பார்த்து வந்த ஒவ்வொருவரிடமும் கோட் - சூட் ஆசாமிகள் விளக்கினர். தங்க முட்டைக் கனவில், பலரும் லட்சத்தைக் கொட்டினர்.

ஒவ்வொரு மாதமும் தங்கள் கொசுக்கள் கர்ப்பம் தரித்திருக்கின்றனவா என்பதை அறிய ஆவலோடு வந்தவர்களுக்கு, ‘‘நீங்க அடிக்கடி வர்றதால அதுங்களுக்கு பிரைவசி இல்லாம வெட்கப்படுதுங்க...’’, ‘‘தம்பதிகளை ஆடிக்கு பிரிச்சு வச்சிருக்கிறோம்...’’, ‘‘அபார்ஷன் ஆயிடுச்சு... அடுத்த மாசம் வாங்க!’’ என்று வெவ்வேறு விதமான விளக்கங்கள் காத்திருந்தன. இப்பொழுது அந்த இடத்தில் ஈ, காக்கை இல்லை. முதலீட்டாளர்கள்தான் கொசுக்கடியுடன் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

‘‘நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களா..?’’ என்ற அசரீரி மட்டும் அங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.