யாரு கண்டுபிடிச்சா?





‘‘அப்பாவைப் பிரியாத மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்; மகளைப் பிரியாத அப்பாக்கள் பாக்கிய வான்கள். ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை!’’
- நீரோடிய தடத்தைப் பிரதிபலிக்கும் ஆற்று மணலின் சுவடைப் போல ‘தங்கமீன்கள்’ கதையில் இழையோடும் அடிநாதத்தை அழகாகப் பந்தி வைக்கிறார் இயக்குனர் ராம். ‘கற்றது தமிழ்’ படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கும் இந்தப் படத்தில் அவரே நாயகனாக நடித்து இரட்டை சவாரி செய்திருக்கிறார். ‘ரஷ்’ பார்த்துவிட்டு படத்தைத் தயாரிக்கும் கௌதம் மேனன் கலங்கிவிட்டார் என்று கோடம்பாக்கத்தில் பரவிக்கிடக்கும் செய்தியால் படம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘படத்தின் கதை என்ன?’ என்ற அரதப்பழசான கேள்விக்கெல்லாம் இடம் கொடுக்காமல் ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திய இயக்குனர் ராமின் பதில்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கான நெற்றியடி.

‘‘நாவல்கள், சிறுகதைகளிலிருந்து எடுக்கப்பட்ட கதையோ, தழுவலோ அல்ல; எங்கோ பார்த்தோ, யாரோ சொல்லிக் கேட்டோ செய்த கதை அல்ல; பிரெஞ்ச், கொரியன் பட டி.வி.டிக்களிலிருந்து அடித்த காப்பியும் இல்லை. பக்கத்து வீட்டில், அடுத்த தெருவில் அன்றாடம் சந்தித்துக்கொண்டிருக்கும் விஷயங்கள்தான் ‘தங்கமீன்கள்’. இது குப்பையோ, கடவுளோ... ஆனால் ஒரிஜினல்!
சிறுமி ‘சாதனா’ங்கிற செல்லம்மாள். படத்தில் என் மகளா நடிச்சிருக்கும் அவளைச் சுற்றித்தான் கதையே அமைஞ்சிருக்கு. படத்துக்காக  தேர்வு செய்தபோது அவளுக்கு வயசு 7. ஷூட்டிங் போகும்போது எட்டரை வயசு. படத்தை முடிக்கும்போது பத்து. 60 நாட்களில் ஷூட்டிங்கை முடிச்சிட்டாலும், இதற்கான காத்திருப்பு மூணே முக்கால் வருஷம். ரொம்ப அற்புதமா பண்ணியிருக்கா. என் மனைவியா கேரளாவைச் சேர்ந்த ஷெர்லி நடிச்சிருக்காங்க. கெஸ்ட் ரோலில் பத்மப்ரியா நடிச்சிருக்காங்க. வர்றது ரெண்டே சீன்தான்; ஆனா படம் பார்க்கிறவங்க மனசுல பதியுற மாதிரி அழுத்தமான கேரக்டர். என் அம்மாவா ரோகிணி மேடம் நடிச்சிருக்காங்க. வில்லன், காதல், பாட்டுன்னு வழக்கமான விஷயம் இருக்காது. என்றாலும், ‘யாரும் பண்ணாத விஷயத்தை பண்ணிட்டேன். தமிழ் சினிமா விதிகளை உடைத்து புதிய புரட்சி பண்ணிட்டேன்’ என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஒரு சினிமா எடுத்திருக்கேன். அதை சிறப்பாக செய்திருக்கேன். அவ்வளவுதான்! இந்தக் கதைக்கு சொந்தக்காரர்னு சொன்னா என் மகளின் பெயரைத்தான் சொல்லணும். மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளிடமிருந்துதான் இந்த கதைக்கான நிறைய விஷயங்களை பெற்றுக்கொண்டேன்.’’
‘‘ஆரம்பத்தில் கருணாஸ் நடிப்பதாதானே இருந்துச்சு?’’



‘‘ஆமா. கருணாஸை நான் வெறும் காமெடியனா பார்க்கல. அவருக்குள்ள இருக்குற திறமைக்கு யாரும் முழுசா தீனி போடல. ஐதராபாத்தைச் சேர்ந்த துரைங்கிறவர்தான் முதல்ல இந்தப் படத்தை தயாரிக்கிறதா இருந்துச்சு. சில சூழ்நிலைகளால அது முடியாம போச்சு. அப்புறம் கருணாஸே தயாரிக்க முன்வந்தபோது அவருக்கும் பண நெருக்கடி. அந்த சமயத்தில்தான் கௌதம் மேனன் இந்தக் கதையைக் கேட்டார். நான் கதை சொன்ன விதம், கதாபாத்திரம் பற்றி விளக்கிய விதம்... இதையெல்லாம் பார்த்து, ‘நீங்க நடிச்சா இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன்’னு சொல்லிட்டார். அவரோட நிர்ப்பந்தத்திற்கு என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியல. ஒரு மாசம் டைம் எடுத்துக்கிட்டு யோசிச்சு, நடிக்கலாம்ங்கிற முடிவை எடுத்தேன்.

‘நீங்க நடிச்சா எடுக்கிறேன்’ங்கிற ஒரு நிர்ப்பந்தம் வைத்ததைத் தவிர, படம் ஆரம்பிச்சு முடியுற வரை எந்தவித தலையீட்டையும் காட்டாத கௌதமுக்கு நன்றி. ஒரு இயக்குனராக இருக்கறதாலதான், படைப்பாளனுக்கான சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். படத்தை பார்த்துட்டு ரொம்பவே திருப்தி அடைஞ்சிருக்கார். அடுத்தும் அவர் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப் போறேன். அதுக்கு முன்னாடி சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்குறேன். இதோ அந்தப் படத்துக்கு லொகேஷன் பார்க்கத்தான் கிளம்பிட்டிருக்கேன்’’ என்றவரின் பேச்சு ‘தங்கமீன்கள்’ டெக்னீஷியன்கள் மீது திரும்புகிறது.



‘‘ஒரு படத்தின் கதையை உள்வாங்கி அதற்கேற்ற பாடல்களையும், பின்னணி இசையையும் தருவதில் யுவனுக்கு ஞானம் அதிகம். படத்தில் நான்கு பாடல்கள். அனைத்தையும் நா.முத்துக்குமார்தான் எழுதியிருக்கார். ‘ஃபர்ஸ்டு லாஸ்டு பாஸு பெயிலு ஹோம்வொர்க் எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் யாரு கண்டுபிடிச்சா?’ங்கிற பாட்டுல முத்துக்குமாரோட வரிகள் கவனிக்க வைக்கும். அரபிந்து சாரா அற்புதமான ஒளிப்பதிவை கொடுத்திருக்கார். நாகர்கோவில், அச்சன்கோயில், கொச்சி உள்ளிட்ட லொகேஷன்களில் படமாக்கியிருக்கோம். பனியை விலக்கியதும் காட்சி விரிவது மாதிரியான ஒரு சீனுக்காக உயரமான ஒரு மலை மேல 40 பேர்கொண்ட படக்குழுவினர் ஏறி படமாக்கிய அனுபவம் ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது. மலையில ஏறிமுடித்து அந்த காட்சியை எடுக்கற வரைக்கும் நாங்க எவ்வளவு உயரத்துல இருக்கோம்னு தெரியல. பனி விலகிப் போனபிறகுதான் நாங்க இருக்கிற உயரம் தெரிந்து ரொம்ப ஷாக்கானோம். திரையில் பார்க்கப்போகும் ரசிகர்களுக்கும் அந்தக் காட்சி புது அனுபவத்தைக் கொடுக்கும்...’’
- அமலன்