விஜய் ரசிகர்களுக்கு மிலிட்டரி மீல்ஸ் தரும் துப்பாக்கி





ஆச்சு... தீபாவளிக்கு விஜய் ரசிகர்கள் வெடிக்க ‘துப்பாக்கி’ தயாராகி விட்டது..! தீபாவளிக்கு முன்னரே, அதாவது நவம்பர் ஒன்பதாம் தேதியன்றே ‘துப்பாக்கி’ வெளியீட்டுக்கான வேலைகளை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தொடங்கிவிட்டதாக வந்த தகவல்களை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் உறுதி செய்தார்.

‘‘ஆமாம். அதுக்கான முயற்சிகள்லதான் இருக்கிறோம். எல்லாம் சரியான இடத்துல வந்து நின்னா, தீபாவளிக்கு சில நாள் முன்னாடியே ‘துப்பாக்கி’ ரிலீசாகிடும்...’’ என்றவர், படம் குறித்து மேலும் மனம் திறந்தார்.



‘‘எனக்கு விஜய் சாரை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பிடிக்கும்ங்கிறதை விட, அவரோட இமேஜ் ரொம்பப் பிடிக்கும். அவருக்கான இமேஜ்ங்கிறது, அவர் நம்மள்ள ஒருத்தரா... நம்ம பிரதிநிதியா ஸ்கிரீன்ல தெரியற இமேஜ்தான். அப்படிப்பட்ட அவரோட சேர்ந்து வேலை செய்ய நேர்ந்தது ஒரு சர்ப்ரைஸ்.  

நானும், விஜய் சாரும் இப்ப இல்லை... நான் அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்த காலத்திலேர்ந்தே ‘ஒரு படம் சேர்ந்து பண்ணணும்’னு பேசியிருக்கோம். ஆனா நான் தயாராகி வந்தப்ப, அவர் டேட்ஸ் இல்லை. பிறகு அவர் ரெடியானப்ப நான் வேற கமிட்மென்ட்ல இருந்தேன். இப்படியே மாறி மாறி தட்டிப்போய், இப்ப இது கனிஞ்சிருக்கு.



விஜய் சாரை நான் அசிஸ்டன்ட்டா இருந்த ‘குஷி’ படத்திலேயே தெரியும்னாலும், இப்பதான் அவரை அருகிலிருந்து பார்க்கிறேன். அவரோட பலம் என்னன்னு பக்கத்துல இருந்து பார்க்கும்போதுதான் என்னால முழுமையா புரிஞ்சிக்க முடிஞ்சது. அவரோட டைமிங் ரொம்ப அற்புதம். டயலாக் டெலிவரிலயும், ஸ்கிரீன் பிரசன்ஸ்லயும் பின்றார். ஒவ்வொரு சீன்லயும் நல்லா டெவலப் பண்ணி நடிக்கிறார். இதனால என் நேரத்தைப் பெருமளவு மிச்சம் பண்ணிக் கொடுத்திருக்கார்.

நடன மூவ்மென்ட்டுகளை டான்ஸ் மாஸ்டரும், அவரோட அசிஸ்டன்ட்டுகளும் பண்ணிப் பார்க்கிறப்பவே இவர் கவனிச்சு வச்சுடறதால, தனியா ரிகர்சல் பார்த்து நேரத்தை செலவு பண்ணாம நேரடியா வந்து ஆடி அசத்தறார்.


இன்னொரு முக்கியமான விஷயம்... விஜய் இந்தப் படத்துல இந்தி பேசி நடிச்சிருக்கார். வழக்கமா நம்ம ஊர்ல கேட்கிற இந்தி மொழியா இல்லாம, மும்பைல இருக்கிறவங்க பேசற வட மாநில இந்தியா அது இருக்கணும்னு விரும்பினேன். அதேபோல அவர் பேசி நடிச்சிருக்கார். மும்பைல வச்சு மத்தவங்களுக்கான டப்பிங்கை அங்கே இருக்கிற டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை வச்சுப் பேசியப்ப, அவங்க விஜய் பேசிய இந்தியைப் பாராட்டினாங்க.

விஜய் சாரை வச்சு நேரடியாவே இந்திப்படம் எடுக்கலாம்ங்கிற தைரியத்தை அது தந்தது. அதுவும் சீக்கிரமே நடக்கும். அவர் சொந்தக்குரல்ல பாடியிருக்க பாடலான ‘கூகுள்... கூகுள்...’ல அவர்கூட ஆன்ட்ரியாவைப் பாட வச்சோம்.  


நான் அவரோட ஸ்ட்ரெங்த்தைப் புரிஞ்சு வச்சிருக்க அளவில, அதுல பெஸ்ட் என்னவெல்லாம் குடுக்க முடியுமோ, அது எல்லாத்தையும் இந்தப் படத்துல கொண்டு வந்திருக்கேன். அவரால இன்னும் கூட கொடுக்க முடியும்னாலும், எனக்கு எவ்வளவு வேலை வாங்கி எடுத்துக்க முடியுமோ அவ்வளவையும் நான் எடுத்துக்கிட்டேன்னுதான் சொல்லணும்.

அடுத்து இந்தப் படத்தோட ஹீரோயின் காஜல் அகர்வால். என் படங்கள்ல தமிழ் பேசத் தெரிஞ்ச நடிகைகளை நான் விரும்புவேன். அப்பதான் உணர்ச்சி குறையாம அவங்களால பேச முடியும்னு நம்பிக்கிட்டிருந்தேன். ஆனா தமிழ் தெரியாட்டியும் காஜல் அகர்வால் அதைப் புரிஞ்சுகிட்டு எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடினாங்க.


நாங்க 150 பேர் மும்பைல உக்காந்துக்கிட்டு, ரூம் போட்டுக்கிட்டு, ஷூட்டிங் பண்ணிக்கிட்டேயிருந்தோம். செலவு பற்றியெல்லாம் கவலைப்படாம, இங்கே இருந்தே உதவிகளை செய்து, எந்த இடத்திலும் சிக்கல் வராம பாத்துக்கிட்ட தயாரிப்பாளர் தாணு சாரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

‘ரோஜா’, ‘தில் சே’ படங்கள் எல்லாம் பார்த்து மிரண்டு போயிருக்கேன். அந்த அற்புதமான ஒளிப்பதிவைத் தந்த சந்தோஷ் சிவன் கூட வேலை செய்வேன்னு கனவுல கூட நினைச்சதில்லை. அதுவும் இந்தப்படத்துல நிறைவேறியிருக்கு. இயற்கை இவருக்கு உதவுதா, இல்லை இவர் இயற்கையோடு இணைஞ்சு படம் பிடிக்கிறாரான்னு தெரியாத அளவுக்கு இயற்கை அழகுகள் இந்தப் படத்துல கொட்டிக் கிடக்குது.

ஒரு படத்துல ஒண்ணு ரெண்டு பாடல்கள் ஹிட்டாகும்ங்கிறதை மாத்தி, எல்லா பாடல்களும் ஹிட்டாகும்னு காண்பிச்ச ஹாரிஸ் ஜெயராஜ் இதுல இன்னொரு முறை அதை நிரூபிச்சிருக்கார். பாடலாசிரியர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, மதன் கார்க்கி எழுதியிருக்க பாடல்களோட பெருமையைச் சொல்லணும்னா, கதையைச் சொன்னது போலாகும். அதை ரிலீசுக்குப் பிறகு சொல்றேன்...’’ என்றவரிடம், ‘‘படத்தில் விஜய் ராணுவ வீரராக வருகிறார் என்று கேள்விப்பட்டோம். உண்மையா..?’’ என்றோம்.
‘‘இந்த சஸ்பென்சோடவே பாருங்களேன். ஆனா ஒரு விஷயம்... இந்தப்படம் விஜய் ரசிகர்களுக்கு ‘மிலிட்டரி மீல்ஸா’ இருக்கும்...’’ என்று முடித்தார்.
அதுக்குள்ளேயே இருக்கே ‘ராணுவ’ ரகசியம்..!
- வேணுஜி