"Erotica is pornography I am willing to publicly admit I like." Spider Robinson, Canadian Writer ‘எரோட்டிக்கா’ என்பது இன்ப உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யும் ஓவியம், சிற்பம், புத்தகம், பத்திரிகை, நிழற்படம், நிகழ்படம், திரைப்படம், ஒலிப்பதிவு, அனிமேஷன், வீடியோ கேம் ஆகியவற்றைக் குறிக்கும். ‘போர்னோக்ராஃபி’ என்பதும் கிட்டத்தட்ட இதேதான். ஆனால் அதில் கலையம்சம் மிஸ்ஸிங்! “ The difference between pornography and erotica is time" என சொல்வது போல நேற்றைய ஆபாசம் என்பது இன்றைய சாதாரணம், நாளைய இலக்கியம்.
கற்காலத்திலிருந்தே குகை ஓவியங்கள் மற்றும் செதுக்கல்கள் வழி எரோட்டிக்கா இருந்து வந்திருக்கிறது. விலங்குகள், வேட்டையாடல் போன்ற காட்சிகளுடன் மனிதர்களின் அந்தரங்க உறுப்புகளையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். தெற்கு பிரான்ஸில் அப்ரி கேஸ்டானெட் என்ற இடத்திலிருக்கும் 37 ஆயிரம் வருடப் பழமையான குகை செதுக்கலில் ஒரு பெண்ணுறுப்பு காணப்படுகிறது. 12 ஆயிரம் வருடங்கள் பழமையான இங்கிலாந்தின் கார்ஸ்வெல் க்ராக்ஸ் குகையிலும் இதேபோல செதுக்கியிருக்கிறார்கள்.
பண்டைய எகிப்தில் (கிமு 1292-1075) பேப்பிரஸில் வரையப்பட்ட ஓவியங்கள் கொண்ட ட்யூரின் என்ற படைப்பில் கலவிக்காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அக்கால ஆண்கள் பத்திரிகை! கிரேக்கர்கள் சுடுமண் பொருட்களில் காமக்காட்சிகளை வரைந்தனர். முதல் லெஸ்பியன் பதிவு கிரேக்கர்களுடையதே! ரோமப் பேரரசின் பொம்பெய் மற்றும் ஹெர்குலனியம் ஆகிய இடங்களில் கிடைக்கப் பெற்ற இடிபாடுகளில் பல பாலியல் ஓவியங்கள் காணப்படுகின்றன. மர்மங்களின் மாளிகை என்று அழைக்கப்படும் கோயிலில் இவை மதநோக்கங்களுக்காகப் பயன்பட்டிருக்கின்றன. பொம்பெயில் இவை விபசார விடுதிகளின் வெளிச்சுவர்களிலும் அவற்றுக்கு வழிகாட்டும் கைகாட்டிகளிலும் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்தன!

பெருவின் ‘மோஷே’ நாகரிகத்தில் மண்பானைகளில் பாலியல் காட்சிகளை வரைந்து வைத்தனர். மரணித்தவர்களின் உலகம் நம் உலகத்திலிருந்து முற்றிலும் எதிரானது என அவர்கள் நம்பினர். அதனால் இறப்புச்சடங்குகளில் பயன்பட்ட பாத்திரங்களில், குழந்தைப் பேறினை உண்டாக்காத கலவி முறைகளை வரைந்து வைத்தார்கள்.
பண்டைய இந்தியா, ஜப்பான், சீனா, பெர்ஷியா நாடுகளிலும் கலவி பற்றிய பதிவுகள் உண்டு. வாத்ஸாயனரின் ‘காமசூத்ரா’, கிபி ஆரம்ப நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட மிக விரிவான கலவிக் கையேடு. கஜுராஹோ சிற்பங்கள் இந்திய எரோட்டிக்காவின் முக்கிய மைல்கல்.
13ம் நூற்றாண்டில் ஜப்பானில் மரப்பலகைகளில் பாலியல் கலைப்படைப்புகளைப் பதிந்தனர். இதற்கு ஷுங்கா என்று பெயர். புதுமணத் தம்பதிக்கு தரப்படும் மகுராஈ தலையணையில் பாலியல் விஷயங்கள் தொடர்பான டிப்ஸ்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தன. சீன எரோட்டிக்கா வரலாறு யுவான் வம்சத்திலிருந்து (1271-1368) தொடங்குகிறது. நாவல் என்ற இலக்கிய வடிவம் உருவாக எரோட்டிக்கா மிகப்பெரும் உந்துதலாக சீனா, ஜப்பான் இரு நாடுகளிலுமே இருந்தது. உலகின் முதல் நாவலாகக் கருதப்படும் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த The Tale of Genji என்ற படைப்பு, ஜப்பானிய உயர்குடிப் பெண்களின் கள்ளத் தொடர்புகளை நாகரிகமான பாலியல் மொழியில் சொன்னது. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த The Plum in the Golden Vase நாவல் வெளிப்படையான மொழியைக் கையாண்டது. இது சீனாவின் நான்கு செவ்விலக்கியங்களுள் ஒன்று.
மத்திய கால ஐரோப்பாவில் புழக்கத்தில் இருந்த ‘ஒளிவீசும் கைப்பிரதி’ நூல்களில் பாலியல் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. கையால் எழுதப்பட்ட இவற்றின் விலை அதிகம் என்பதால் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்தன. இதில் பிரபலமானது Books of hours என்ற பக்திப் புத்தகம். அதன் மார்ஜின்களில் பாலியல் ஓவியங்கள் இடம்பெற்றன. அக்காலப் பொருளாதாரத்தில் ஓர் ஆசாமி ஒரு நூல்தான் வாங்க முடியும் என்பதால், இப்படி மதம், காமம் இரண்டையும் திருப்திப்படுத்தின இந்நூல்கள்.
15ம் நூற்றாண்டில் ஜோகன்னஸ் கூட்டன்பெர்க் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பின், மேற்கத்திய உலகில் பாலியல் ஓவிய விநியோகம் பரவலடைந்தது. ஜூபிடர் போன்ற புராணக் கடவுள்களின் காதல் வாழ்க்கையை ரீமிக்ஸ் செய்து பாலியல் கதைகளாக அச்சிட்டார்கள். Leda and the Swan கதையில் கடவுள் ஜீயஸ் அன்னப் பறவையாக வந்து லேடா என்ற பெண்ணைக் கலப்பதைப் பாலியல் கதையாகச் சித்தரித்தனர். மைக்கேல் ஏஞ்சலோ இதை பிரமாண்ட ஓவியமாக வரைந்தார்.
பிரபல இத்தாலிய ஓவியரான ராஃபெலிடம் எடுபிடியாகப் பணிசெய்த ஜூலியோ ரோமனோவுக்கு ஏதோ காரணத்தால் போப் ஏழாம் க்ளெமன்ட்டுடன் சண்டை வர, அதற்குப் பழிவாங்கும் முகமாக வாடிகனில் ஒரு ஹால் சுவர் முழுக்க கலவி ஓவியங்களை வரைந்து வைத்தார் ரோமனோ. இவற்றை அழிக்கும் முன் சில ஓவியர்கள் பிரதியெடுத்துவிட்டனர். ஐரோப்பா முழுக்க இவை பரவின.
1655ல் வெளியான L‘ Ecole
des Filles நூல் பிரான்ஸில் எரோட்டிக்காவின் ஆரம்பம். இதில் ஒரு 16 வயதுப் பெண்ணிற்கும் அவளது உறவினப் பெண்ணுக்கும் இடையே நிகழும் உரையாடல் ஓவியங்களுடன் இடம்பெற்றது. ‘அறிவொளிக்காலம்’ என்று வர்ணிக்கப்படும் 18ம் நூற்றாண்டில் பிரான்ஸின் சுதந்திர சிந்தனையாளர்கள் எரோட்டிக்காவை நையாண்டியாய் சமூக விமர்சனம் செய்யப் பயன்படுத்தினர். தேவாலயங்களில் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் அத்துமீறிய பாலியல் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டி மதத்தை விமர்சித்தனர். பிரெஞ்சுப் புரட்சியின்போதும் எரோட்டிக்கா படைப்புகள் அரசியல் விமர்சனக் கருத்துக்களை முன்வைக்கும் ஆயுதமாகப் பயன்பட்டது. 16ம் லூயி மன்னரின் இயலாமை மற்றும் அரசி மேரி ஆன்டோனியின் அதீத இச்சைகள் போன்ற வதந்திகளை மையமிட்டு இப்படைப்புகள் இயங்கின.
1748ல் ஆங்கிலத்தில் ஜான் க்ளேலேண்ட் என்பவர் எழுதிய Memoirs of a Woman of Pleasure நூல் வெளியிடப்பட்டது. பிற்பாடு இது சுருக்கப்பட்டு Fanny Hill என்ற பெயரிலும் வெளியானது. இதற்காக அவரை சிறிது காலம் சிறை வைத்திருந்தனர். புத்தகம் தொடர்ந்து பிரசுரம் ஆனது. ஆங்கிலத்தில் அதிக மறுபதிப்புகள் கண்ட நூல்களில் ஒன்றாகும் இது!
1839ல் லூயி டாகியர், புகைப்படக்கலையில் புதிய முறையை உருவாக்கினார். அவரது டாகியரோடைப்கள் அதிக துல்லியமான, எளிதில் மங்காத படங்களைத் தந்தன. இத்தொழில்நுட்பம் பெண்களை எரோட்டிக் படமெடுக்கப் பயன்பட ஆரம்பித்தது. நிர்வாண ஓவியம் வரையும் கலைஞர்கள் பயன்படுத்தும் மாதிரி ஓவியத்திற்குப் பதிலாக புகைப்படங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். டாகியரோடைப்பில் முக்கியப் பிரச்னை, அதில் பிரதியெடுக்க முடியாது. தவிர புகைப்படம் எடுக்க, மாடல்கள் 15 நிமிடங்கள் வரை போஸ் கொடுக்க வேண்டி இருந்தது. இதனால் கலவிக்காட்சிகளை விட ஆண், பெண் நிர்வாணக்காட்சிகளே அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டன. 1840களில் ஒரு புகைப் படத்தை வாங்க ஓர் ஆசாமி ஒரு வார சம்பளத்தைத் தர வேண்டி இருந்தது. இதை வாங்குவதைக் காட்டிலும் பாலியல் தொழிலாளியின் சேவை பெறுவது சல்லிசாக இருந்தது. அதனால் பணக்காரர்கள் மட்டுமே இந்தப் புகைப்படங்களை வைத்திருந்தனர்.
1838ல் ஸ்டீரியோடைப் கண்டுபிடிக்கப்பட்டபின் எரோட்டிக் புகைப்படங்களுக்கும் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இது 3டி புகைப்படங்களை அளித்தது. 1841ல் வில்லியம் ஃபாக்ஸ், கேலோடைப் புகைப்படங்களை அறிமுகப்படுத்தினார். இதில் நெகட்டிவ் கொண்டு ஒரு புகைப்படத்தைப் பல பிரதிகள் எடுக்க முடிந்தது. படத்திற்குப் போஸ் கொடுக்கும் நேரமும் குறைவாக இருந்தது. இக்காரணங்களால் உடனடியாக இதை எரோட்டிக்கா படங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பாரிஸ் எரோட்டிக் புகைப்படங்களின் பிரதான மையம் ஆனது. ரயில் நிலையங்களில், வீதிகளில் சேல்ஸ்மேன்கள் தம் ஆடைகளுக்குள் படங்களை மறைத்து வைத்து விற்றார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்பட்டன. ‘பிரெஞ்ச் போஸ்ட்கார்ட்’ என்றழைக்கப்பட்ட எரோட்டிக் ஓவியங்கள் பரவலாயின.
இங்கிலாந்தில் விக்டோரியன் காலத்தில் எரோட்டிக்கா புகைப்படங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய டீலர்கள் உருவானார்கள். தபால் வசதியைப் பயன்படுத்தி சந்தாதாரர்களுக்கு படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 1880ல் வெளியான ஜிலீமீ றிமீணீக்ஷீறீ பத்திரிகையில் பாலியல் தொடர்கள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் ஓவியங்களுடன் இடம்பெற்றன. பிற்பாடு பத்திரிகை, சினிமா, வீடியோ, இன்டர்நெட் என்று விரிவடைந்தபோது எரோட்டிக்கா தன் கலைத்தன்மையை இழந்து போர்னோ க்ராஃபியாக உருமாறியது...