ஆடு மாடு மற்றும் மனிதர்கள்



மண் மணம்


புழுதிமண் கிளம்பி எழும் பாதைகள், சிமென்ட் சாலைகளுக்குள் அமுங்கிவிட்ட பிறகு, ஊருக்குள் மிஞ்சியிருப்பது ஞாபகங்களும் அதற்கான அடையாளங்களும்தான். செடிகள் கிளை விரித்து இருக்கிற சிதைந்த கோயில் கோபுரம், எங்கோ சரிந்து கிடக்கிற கல்மண்டபங்கள், முட்கள் அடைந்து கிடக்கிற தூர்ந்து போன பொதுக் கிணறுகள், மண்ணுக்குள் முகம் புதைந்திருக்கிற படித்துறைகள்... இன்னும் இன்னுமாய் நீங்கள் பார்க்கிற ஏதாவது ஒன்றில் சிதையாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது ஒரு வரலாறு. அப்படியான வரலாறுகளைக் கொண்டிருக்கிற கிராமங்களின் எளிய மனிதர்களைப் பற்றிய கதைகள் இவை...

குருசாமி மகன் வேலுவுக்கு முதன்மைத் தொழில் முடி வெட்டுவது. இரண்டாவதாக ஆடு உரிப்பது. தினமும் சோலி இருக்காது என்பதே, இது இரண்டாவதாக வருவதற்கு காரணமாகியது.
பிள்ளையார் கோயிலிலிருந்து கருவேலப்பறை செல்லும் வழியில்தான் குருசாமியின் வீடு. தரையில் இருந்து ஓர் ஆள் உயரத்துக்குப் படிகள் வைத்து, அந்தக் காலத்திலேயே கட்டியிருந்தார்கள் வீட்டை. படிகளில் ஏறி உள்ளே சென்றால் பெரிய திண்ணை.

‘‘அப்பல்லாம் என்ன மழை அடிக்கும்கியெ. விடாம ஏழெட்டு நாளு பெய்யும். நண்டு நசுக்கெல்லாம் நடமாட முடியாது. அப்படி பெஞ்சா தெருவுக்குள்ள நடக்க முடியுமா சொல்லுங்க? குளம் கெணக்கதான் இருக்கும். அதுக்காவ, தண்ணி வீட்டுக்குள்ள வந்திரக்கூடாதுன்னு இவ்வளவு ஒசரமா எங்கய்யா வீட்டைக் கட்டியிருக்காரு’’ என்பதை, கேட்காவிட்டாலும் சலிக்காமல் சொல்வதை வேலையாகவே வைத்திருந்தார் குருசாமி.

குருசாமிக்கு மூன்று மகன்கள். இதில் முதலாமவன் வேலு. ஒரு வரைமுறைக்குள் கட்டுப்படாத தேகம் வேலுவுடையது. சிறு வயதிலேயே வயிறும் முன்பற்களும் நீட்டிக்கொண்டு வந்து நின்றிருந்தன. பேச்சும் வேகமாக வராது. ஏதாவது கேட்டால் கொஞ்சம் சிரிப்போடு மெதுவாகத்தான் வந்து விழும் வார்த்தை. கோபமாகவோ, எடுத்தெறிந்தோ அவன் பேசி யாரும் பார்த்ததில்லை. பெரிய வாருடன் வேட்டியை இறுக்கிக் கட்டி, கைகளை பின்பக்கம் வைத்துக்கொண்டு அவன் வருவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். வாரைத் தாண்டி பெரும் பொட்டலம் போன்று வலது பக்க இடுப்பில் வேட்டியைத் துருத்திக் கொண்டிருக்கும். முகச்சவரம் மற்றும் ஆடு அறுப்பதற்கான உபகரணங்கள் அதில் எப்போதும் உண்டு.

கரடுமுரடான தலைமுடியுடன் வீட்டில் அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால், ஐயமார் தெருப் பிள்ளைகள் அவனிடம் முடிவெட்டப் பயப்படுவார்கள். அவன் அழைத்தால் காது கேட்காத மாதிரி இருந்து விடுவார்கள். இல்லையென்றால் எழுந்து வெளியில் சென்றுவிட்டு திரும்பி வருவார்கள். குருசாமியும் அவரது மற்ற மகன்களும் வெட்டவுமே காத்திருப்பார்கள். யாராவது அவசரத்துக்காக வந்தால், ரெடியாக இருப்பான் வேலு.

‘‘என்ன குருசாமி, லேட்டாவுமோ? கல்யாண வீட்டுக்குப் போணும்...’’
‘‘செத்த நேரம் ஒக்காரும்யா!’’
‘‘அடுத்த காருக்கு போணும்டே. பொண்டாட்டிக்காரி கார்சாண்ட்ல நிய்க்கா!’’
‘‘கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு வந்துதாம் நிப்பீரு எப்பவும். ஏல, ஏய் வேலு, அவருக்கு சேவிங் பண்ணிரு’’ என குருசாமி ஆர்டர் போட்டதும் கத்தியை எடுப்பான்.
உடலில்தான் சிறு சிறு குறைகளே தவிர, தொழிலில் இல்லை. திண்ணையில் இருக்கிற மூன்றாவது தூண் அவனது ஏரியா. அவன் உட்கார்வதற்காக ஒரு மரத் துண்டு இருக்கும். அதில் உட்கார்ந்து தூணில் சாய்ந்துகொள்வான். அந்த மரத்துண்டு அவனது உயரத்தைக் கூட்ட. எதிரில் உட்கார்பவர்களுக்கு சிறிய மரத்துண்டு. இப்படி வேலை பார்த்தால்தான் அவனுக்கு வசதி. கொஞ்சம் வளர்ந்திருக்கிற ஆட்கள் வந்தால் கஷ்டம்தான். மரத்துண்டில் இல்லாமல் தரையில் உட்கார வைத்துக்கொள்வான்.

எந்தத் தெருவிலாவது கோயில் கொடை என்றால் அவனைப் பிடிக்க முடியாது. கொட்டு சத்தம் கேட்டதும், ‘‘இன்னைக்கு என்ன கிழமை?’’ எனக் கேட்பான். செவ்வாய்க்கிழமை என்றால் அவனது வேலை இரவு, வெள்ளிக்கிழமை என்றால் அவனது வேலை அதிகாலை என முடிவு செய்துகொள்வான். பெரும்பாலும் அம்மன் கோயில்களுக்கு செவ்வாய்க்கிழமையும், கருப்பசாமி, சுடலை போன்ற கோயில்களுக்கு வெள்ளிக்கிழமையும் கொடை வைப்பது வழக்கம். செவ்வாய்க்கிழமை சாமக்கொடையில் ஆடு வெட்டினால் அடுத்த நிமிடமே உரிக்க அழைப்பார்கள். வெள்ளிக்கிழமை என்றால் நள்ளிரவு வெட்டப்படும் ஆடுகளை மறுநாள் அதிகாலையில் பார்த்துக் கொள்ளலாம்.

கோயில் கொடைக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் வெட்டப்பட்டு, கோயில் ஓரத்தில் மாலைகளோடு கிடக்கும். நேர்ந்துவிட்டவர்கள் அவரவர் ஆட்டை வீட்டுக்கு எடுத்துப் போவார்கள். போனாலும் ஆடு உரிப்பது லேசுப்பட்ட காரியமல்ல. அதற்கு கண்டிப்பாக, வேலு வேண்டும். யார் வீட்டு ஆடோ, அவர்கள் வீட்டுத் தொழுவில், இந்தப் பக்கத்தையும் அந்தப் பக்கத்தையும் இணைத்து, நடுவில் கம்பு கட்டி ஆட்டைத் தொங்கவிட வேண்டும். கழுத்திலிருந்து அடிவயிறு வழியாக கத்தியால் ஒரு இழு. பிறகு அப்படியே தோலுக்குள் கையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தென்னி தென்னி இழுத்தால் கால்கள் மட்டும் சிக்கும். மூட்டுகளில் சின்னதாக ஒரு கீறலைப் போட்டால் சரி. பிறகு லாவகமாக இழுத்தால் வெளியே வந்துவிடும் தோல்.

பிறகு வீட்டுக்காரர் மூஞ்சை ஏறிட்டுப் பார்ப்பான். ‘ஆட்டைத் துண்டாக்க கதவு வேண்டும்’ என்று அதற்கு அர்த்தம். வாசல் மரக்கதவை கழற்றிக் கொண்டு வருவார் வீட்டுக்காரர். ஓர் ஆளால் இது முடியாது என்பதால், வீட்டிலிருக்கிற மற்றவர்களும் ஒத்தாசை செய்வார்கள். அலங்காரமான முன் பக்கத்தை அப்படியே கவிழ்த்து, பின்பக்கம் பார்ப்பான் வேலு. அதில் தண்ணீரை ஊற்றி வாரியலால் கழுவுவான். கதவின் சிராய்ப்புகளில் அடைந்து கிடக்கிற மூட்டைப்பூச்சிகள் வெளியேறி ஓடும். நன்றாகக் கழுவி விட்டு, தொங்கும் ஆட்டை இதில் தூக்கிப் போட்டு வெட்ட ஆரம்பிப்பான். பிறகு, ‘‘எத்தனை கூறு வைக்கணும்?’’ என்பதை சைகையால் கேட்பான்.

ஒவ்வொரு கூறுக்கும் பக்கத்து வீட்டில் அல்லது சொந்தக்காரர்களிடம் காசு வாங்கியிருப்பார்கள். எத்தனை பேரிடம் வாங்கியிருப்பார்களோ, அத்தனை கூறு பிரிப்பான். இதற்காக ஓலைப்பாய்கள் விரித்து வைக்கப்பட்டிருக்கும். பாய்களில் வைக்கப்படும் கூறுகளில் மற்றவர்களுக்கு கொடுத்ததில் கொஞ்சமும் குறையக் கூடாது, கூடக் கூடாது. அது கௌரவக் குறைச்சல். ‘நான் என்ன கேவலப்பட்ட பயலாடே?’ என்று ஆரம்பிப்பார்கள் சண்டையை. ஈரல் ஒரு கூறில் அதிகமென்றால், பிறகு நடக்கிற வெட்டுக்குத்துக்கு வேலுவும் பதில் சொல்லவேண்டும். அதனால் கூறு வைப்பதில் அவனுக்கு அதிக கவனம் உண்டு. கால்களும் தலையும் மச்சினன்மார்களுக்கு. சிலுப்பிக்கு யாராவது வந்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

வெட்டி முடித்து விட்டு கத்தியைக் கழுவி உட்காருவான் வேலு. ஆட்டுக்காரர், ‘தோலை நீ கொண்டு போயிரு. கறி வேணுமா? காசு தரவா?’’ என்பார்.
‘‘ஒங்களுக்கு எது சௌரியமோ... அதான்’’ என்று சிரிப்பான். காசென்றால் காசு; கறியென்றால் கறி. இதற்குள் வேலுவைத் தேடி நான்கைந்து பேர் நிற்பார்கள், அடுத்த ஆட்டை வெட்டுவதற்கு. வேலுவின் மகனோ, மகளோ வந்து, அப்பாவை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆடு வெட்டும் வீட்டில் கிடைப்பதை அப்படியே மகளிடம் கொடுத்து அனுப்புவான். அடுத்த வீட்டுக்கு மகன் வருவான். அதற்கடுத்த வீட்டுக்கு மகள்.



முடியோ, ஆடோ, வெட்டுதல் அவனது தொழிலாகிவிட்டது. அவனது தம்பிகளில் ஒருவன் வீட்டில் துட்டைத் தூக்கிக்கொண்டு யாருடனோ மும்பைக்கு ஓடிவிட்டான்.
‘‘ஏங் குருசாமி, எவ்வளவு எடுத்துட்டு போனாம்?’’
‘‘நெல் வித்து எட்டாயிரம் ரூவா வச்சிருந்தேன். மூவாயிரத்தை விட்டுட்டு அஞ்சாயிரத்தை தூக்கிட்டுப் போயிட்டாம் செரிக்கி புள்ள’’ என்றார் குருசாமி. பேசிக்கொண்டிருக்கும்போது வேலு குறுக்கிட்டு, ‘‘அவன் போறேன்னு கேக்கும்போதே இவரு கொடுக்க வேண்டியதானே. கஞ்சப் பிசினாறி’’ என்றான்.
‘‘யாரை கஞ்சப் பிசினாறிங்கல. உன்னைய பாவம் பாவம்னு பாத்துட்டிருந்தா, துட்டை தூக்கிட்டுப் போனவனுக்கு சப்போட்டால?’’
கோபத்தில் அடுத்தடுத்து நடந்தது சொத்துப் பிரிப்பு.

குருசாமி வீட்டுக்கு முடிவெட்ட வருகிறவர்களை யாரும் தடுக்கக் கூடாது. மும்பைக்கு ஓடிப் போனவனைத் தவிர நடுவுள்ளவனுக்கு வீட்டின் பின்பக்கமும், வேலுவுக்கு வீட்டுக்கு எதிரில் இருக்கிற குச்சிலும் முடிவெட்டுவதற்கான இடமாக ஒதுக்கப்பட்டது. வேலு முடி வெட்டுவதை விட, ஆடு வெட்டுவதில் அதிக கவனம் செலுத்தினான். நடுவுள்ளான் கார்சாண்ட் அருகே சின்னதாக சலூன் கடை போட்டான்.

ஊர் இப்போது மாறிவிட்டது. சிமென்ட் சாலைகளாகியிருக்கிற தெருவெங்கும் அவசரத்தின் கால்கள் பதிந்து கிடக்கின்றன. தலையை இப்படியும் அப்படியும் இழுத்து, வளைத்து, நறுக்கி அலைகிற இளசுகளுக்காக நான்கைந்து மாடர்ன் சலூன் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஊரின் ஒதுக்குப்புறத்தில் திறக்கப்பட்ட ஆட்டிறைச்சிக் கடை, இப்போது தினந்தோறுமாக மாறியிருக்கிறது. உடல் இளைத்துப்போன வேலு, அங்கு வலுவோடு ஆட்டுத்தோலை உரித்துக் கொண்டிருக்கிறான், வாயில் பீடியை வைத்துக்கொண்டு!
- வாசம் வீசும்