கவிதை : முகில் தினகரன்






எதையும் வித்தியாசமாகவே செய்யும் கிருஷ்ணபிரசாத் யோசித்தான்.
'இந்த வாரம் நடக்கும் கவியரங்கிலும் புதுமையான ஒரு கவிதை வாசித்து வழக்கம் போல் முதல் பரிசை நாம்தான் தட்ட வேண்டும்... எல்லோரும் வழக்கம் போல காதல் கவிதைகளையும் இளைஞர்களை உசுப்பேற்றிவிடும் தன்னம்பிக்கை கவிதைகளையும் எடுத்துவந்து முழங்குவார்கள். அதிலிருந்து வித்தியாசப்பட்டு நாம் எப்படி எழுதலாம்?’

சட்டென யோசனை உதித்தது.
‘கரெக்ட்... காதலில் தோல்வியடைந்த ஒரு இளைஞன், தன் தற்கொலைக் கடிதத்தை கவிதையாகவே எழுதி காவல்துறைக்கு சமர்ப்பிப்பது போல் ஒரு கவிதை எழுத வேண்டும். யாரும் சிந்திக்காத கோணம் என்பதால், நிச்சயம் இது கவனிக்கப்படும். முதல் பரிசு நமக்குத்தான்!’

இரவு கண் விழித்து அதை எழுதி முடித்தவன், காலை அதை மறக்காமல் எடுத்து சட்டைப் பாக்கெட்டில் செருகிக் கொண்டு கிளம்பினான். கவியரங்கம் துவங்கி விடுமோ என்கிற பரபரப்புடன் தண்டவாளத்தைக் கடக்கும்போது மின்சார ரயில் எமனாகி எடுத்துக் கொண்டது அவனை.

இன்ஸ்பெக்டர் பக்கத்திலிருந்த கான்ஸ்டபிளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்...
‘‘லவ் ஃபெயிலியர் கேஸு... கவிதையாவே லெட்டர் எழுதி நமக்காக வெச்சிருக்கான். கிறுக்குப்பய!’’