அனுஷ்கா... டாப்ஸி... யாரிடம் காதல்?





‘‘எப்படிடா மச்சீ, திடீர்னு நல்ல நல்ல படமா செலக்ட் பண்றே’ன்னு ஃப்ரெண்ட்ஸ் ஆச்சரியப்படுறாங்க. உண்மையைச் சொல்லணும்னா, நானா எதையும் தேடிப்போறதில்லை. இறைவன் அருளால் எல்லாமே நடக்குது. ‘எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க’ன்னு பாலா சார்கிட்ட யாரும் கேட்கவே முடியாது. கதைக்குப் பொருந்துவோம்னு தோணினா, அவரேதான் கூப்பிடுவார். அப்புறம் ‘மதராசப்பட்டினம்’... அந்த பட்ஜெட்டுக்கு அப்ப நான் தகுதியானவன் கிடையாது. இருந்தாலும் அந்த வாய்ப்பைக் கொடுத்தாங்க. இன்னிக்கு தமிழ் சினிமாவுக்குள்ள அடியெடுத்து வைக்கிற ஒவ்வொரு சின்னப் பையனும், தான் யோசிக்கிற ஒரு கதையில் ஆர்யாவுக்கும் ஒரு இடம் வச்சிருக்கான்’’ - அதி உற்சாகமாகச் சிரிக்கிறார் ஆர்யா.

‘‘எப்படி வந்திருக்கு ‘இரண்டாம் உலகம்’? அனுஷ்காவோட உங்களுக்கு நெருக்கமான சீன்ஸ்னு பேசப்படுதே!’’
‘‘செல்வராகவனின் உலகமே வேற... அவரோட ஸ்டைல்தான் படத்தில் பெரிய விஷயம். இதில் ஆர்யாவுக்கு வேலையெல்லாம் கிடையாது. அவர் சொன்னதை உள்வாங்கி செய்தாலே போதும் போதும்னு இருக்கும். அது அருமையான காதல் கதை. காதல்னா அதை ரொம்ப வெளிப்படையாவும் சொல்லமாட்டார். நம்ம எல்லாருக்கும் பலவீனங்கள் இருக்கும். அதை சாமர்த்தியமா வெளியே காட்டிக்காம சில பேர் தப்பிச்சிடப் பாக்கிறாங்க; சிலபேர் மாட்டிக்கிறாங்க... அது மட்டும்தான் வித்தியாசம்.


பலவீனமான சமயங்களில்தான் நாம் ஒருத்தரைக் காயப்படுத்தறோம். அப்ப, நமக்குள்ள இருக்கிற ஒரு மிருகம் முழிச்சுக்குது. ஒரு தப்பு பண்ணிடறோம்! நாலு பேரை இடிக்காம, ரெண்டு பேரை மிதிக்காம இப்போ பீக் ஹவரில் ஒரு பஸ்ல கூட ஏற முடியாது. இப்படிப்பட்ட இடங் களை... நம்முடைய பலவீனங்களை... அதன் விளைவா வெளிப்படுகிற மனசைத்தான் காட்டுறார் செல்வராகவன். படத்துல எங்களை வாட்டி எடுத்திருப்பார். என் லைஃப் டைம்ல சொல்லிக்கிற படமாகவும் இருக்கும்னு நிச்சயம் நம்புற படம் இது. அனுஷ்காவோட ஸ்பெஷல் என்னன்னா, ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவரை வச்சு ஒரு கிரியேட்டர் விளையாட முடியும். இதில் படத்துக்கு என்ன வேணுமோ, அதை அழகா செய்து கொடுத்திருக்கார் அனுஷ்கா. ரியல் லைஃப் கேரக்டர்னா அப்படித்தான் இருக்கும்!’’



‘‘‘சேட்டை’யில கலகலன்னு நடிக்கிறீங்க போல...’’
‘‘ரொம்ப ஜாலியா, கருத்துச் சொல்லாம, வல்கர் இல்லாம, யாரையும் குழப்பாம தெளிவா வர்ற படம் ‘சேட்டை’. ‘டெல்லி பெல்லி’ன்னு வெற்றிக்கொடி நாட்டின படம். அதை தமிழ்ப் படமாக்க கொஞ்சம் மாற்றமும் நடந்திருக்கு. இந்தப் பொண்ணு அஞ்சலி பாருங்க... எந்தப் படத்துல பார்த்தாலும் அழுது வடிஞ்சக்கிட்டு இருப்பா. இதில் அல்ட்ரா மாடர்ன் சிட்டி பொண்ணா நடிச்சிருக்கா பாருங்க... அவளுக்கே இது ஒரு புது அவதாரம். பின்னியிருக்கா. அவளுக்கு ஈடு கொடுத்து நடிக்கிறதே எனக்கு பெரும் பாடாப் போச்சுன்னா பாருங்க.


ஹன்சிகா இந்த அளவுக்குத்தான் நடிக்க முடியும்னு நினைச்சு வெச்சிருப்பீங்க... ‘சேட்டை’யில அதையும் தாண்டியிருக்கா ஹன்சிகா. எங்க கேங்... அதாவது நான், சந்தானம், பிரேம்ஜி மூணு பேர் கொண்ட படை, படத்துல அடிக்கிற லூட்டி தனி. ஷூட்டிங் முடிஞ்சதும் மும்பையில நாங்க சேர்ந்து அடிக்கிற லூட்டி இருக்கே... அது உங்களுக்கு அடுத்த பேட்டிக்கு ஸ்கூப் மேட்டர். டைரக்டர் கண்ணனுக்கு எங்க எல்லாரையும் சேர்த்து வச்சு படம் எடுக்கிறதுக்குள்ள ‘அப்பாடா’ன்னு ஆகும். ஜாலியா, கலகலன்னு ஒரு படம் பண்ணணும்ங்கிற டார்கெட் கரெக்டா அச்சீவ் ஆகியிருக்குன்னு தோணுது.’’



‘‘ஹீரோயின்களுக்கு உங்களைப் பிடிச்சிருக்குறதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனா, பல ஹீரோக்களுக்கே ஆர்யான்னா பிடிக்குதே... எப்படி?’’
‘‘எல்லோருக்கும் உண்மையா இருப்பேன். ‘எனக்குன்னு விதிச்சதுதான் நடக்கும். யாரும் யாரோட இடத்தையும் பிடிக்க முடியாது’ன்னு நம்புறவன் நான். ‘மச்சான் பின்னிட்டான்’னு மனசு விட்டு பாராட்டுவேன். என்னோட பாச மழைக்கு பத்துபேர் குடை பிடிச்சாலும் தாங்காது. ‘இன்னும் செஞ்சுருக்கலாம்’னு ஒருத்தருக்கு ஒருத்தர் குறை நிறை சொல்லியும் அன்பைப் பகிர்ந்துக்குவோம். ‘அவனே நம்மகிட்டே பேசட்டுமே’ன்னு சினிமா ஈகோ பார்த்துட்டு நின்னா, அங்கே ஃப்ரெண்ட்ஷிப் கவுந்துடும். நண்பர்கள்கிட்டே கர்வத்திற்கு வேலையே கிடையாது. விஷால், ஜீவா, ரவின்னு சும்மா கலகலன்னு இருப்போம். எப்படியாவது எனக்கு கல்யாணம் செஞ்சி பார்த்துடணும்னு இந்த பசங்க எல்லாரும் அலையிறாங்க. ‘சீக்கிரமே உனக்கு ஆப்பு கன்ஃபர்ம்’னு சொல்லிக்கிட்டே திரியுறாங்க.’’



‘‘ஹயாத் ஹோட்டல்ல உங்க எதிர்லயே வந்தேன். நீங்களும் அனுஷ்காவும் போனீங்க. கண்டுக்கவே இல்லையே... மயக்கமா, காதலா?’’
‘‘அடடா! பார்த்திருந்தா உங்களையும் டின்னர்ல சேர்த்திருப்பேனே! பக்கத்தில் அழகான பொண்ணு இருந்தாலே நமக்கு கண்ணு தெரியாது. அனுஷ்கா மாதிரி பொண்ணு இருந்தா கேட்கணுமா பாஸ்? டின்னருக்கு கூப்பிட்டாங்க... போயிருந்தேன். ‘இரண்டாம் உலகம்’ ஷூட்டிங்குக்காக தென்னாப்ரிக்காவுல போய் ரொம்ப நாள் இருந்தோமா... அதுல நல்ல பழக்கம். பழகுறதுக்கு அவ்வளவு நல்ல பொண்ணு. நம்ம மனசு தெரியாதா? எப்பவும் காதலை கொட்டிக்கிட்டுத்தான் இருப்போம். மனசை சொல்லிக்கிட்டேதான் இருப்போம். பொண்ணுங்கதான் தெரிஞ்சிக்கணும்.



நான் யார்கிட்டேயும் ஒழுங்கா, முறையா நடந்துப்பேன். நாம் நினைக்கிறது நம்ம பிஹேவியர்ல தெரிஞ்சுடும். எனக்கும் அவங்களுக்கும் நல்ல வேவ்லென்த் இருக்கு. நல்லா பேசிப்போம். எதையும் மனசு விட்டு சொல்லிக்கிற ஃப்ரெண்ட்ஷிப். ஆனா, நட்பைத் தாண்டி கல்யாணம்ங்கிற கமிட்மென்ட்டுக்குள்ள வர்ற அளவுக்கு இன்னும் எந்தப் பொண்ணும் வரலை. அதுவரைக்கும் யார்கிட்டேயும் பழகாம இருக்க முடியாதே பாஸ்!’’

‘‘‘சேட்டை’ ஷூட்டிங் முடிஞ்சதும், டாப்ஸியை கொண்டுபோய் ஹோட்டலில் விடுவது வரைக்கும் ‘பொறுப்பா’ செய்றீங்கன்னு சொல்றாங்களே!’’
‘‘பொண்ணுங்க என்மேல் வச்சிருக்கிற நம்பிக்கையை கனிவுன்னுதான் சொல்ல முடியும். இப்பத்தான் டாப்ஸியை பார்த்தேன். உடனே பிடிச்சுப் போய்
பழக ஆரம்பிச்சிட்டேன். கார்ல கூட்டிப்போய் ஹோட்டலில் விட்டேன்ங்கிறது சும்மா டூப்.
எங்கேயாவது பார்ட்டிக்கு போயிருப் போம். அப்ப யாராவது பார்த்திருப்பாங்க. அவ்வள வுதான். ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். வேறே ஒண்ணுமே இல்லை.
நம்புங்க பாஸ்!’’
- நா.கதிர்வேலன்