என்னைத் திட்ட பாலாவுக்கு உரிமை இருக்கு!





தக்காளிப் பழம் மாதிரி தளதளன்னு இருக்கிற ஆளா இருந்தாலும், பாலா கண்ட்ரோலுக்கு போய்விட்டால் தார் டப்பாதான். அப்படித்தான் ‘பரதேசி’ படத்தில் வேதிகாவையும் கரிசல் மண்ணில் புரட்டி எடுத்திருக்கிறார். ‘‘சிவப்பா அழகா இருக்கிற வேதிகாவை கறுப்பா மாத்தினதுக்கு பதில், கறுப்பா ஒரு நடிகையைப் பிடிச்சிருக்கலாமே..?’’ - சமீபத்தில் மீடியாக்காரர்கள் இப்படிக் கேட்க, அதற்கு பாலா சொன்ன பதில் அச்சச்சோ ரகம். ‘‘வேதிகாவை சிவப்பா இருக்கிற நடிகைன்னு சொல்லுங்க. அழகான நடிகைன்னு சொல்லாதீங்க!’’ ‘‘நீங்க அழகான பொண்ணு இல்லைன்னு பாலா சொன்னதைக் கேட்டு வருத்தம் இல்லையா?’’ என்று வேதிகாவிடம் திரி கொளுத்தினோம்.

‘‘ஆமா. நான் அழகில்லைன்னு சொல்லியிருக்காருதான். ஆனா அதை நான் பெரிசா எடுத்துக்கல. அவர் காமெடிக்காகத்தான் அப்படி சொன்னார். மீடியாகாரங்க கூட அதுக்கு சிரிக்கத்தான் செஞ்சாங்க. அப்படியே சீரியஸா அவர் திட்டியிருந்தாக் கூட, என்னைத் திட்ட அவருக்கு உரிமை இருக்கு. பாலா சார் எவ்வளவு திட்டினாலும் நான் வாங்கிக்குவேன். அந்த அளவுக்கு அவரை நான் மதிக்கிறேன்.’’
‘‘சரி... அழகுன்னு எதை நினைக்கிறீங்க?’’

‘‘மனசுதான் அழகு. பேரழகியா இருந்தாலும், மனசில கள்ளம் கபடம் இருந்தா, அவ அழகைப் பத்தி யாரும் பேச மாட்டாங்க. அடுத்தவங்களோட பாராட்டையும், வாழ்த்தையும் பெறாத அழகுல என்ன யூஸ்?’’

‘‘ ‘பரதேசி’ படத்துல உங்களுக்கு என்ன கேரக்டர்?’’

‘‘பதினேழு வயசு பொண்ணா நடிக்கிறேன். இதுக்கு மேல, அதர்வாவுக்கு லவ்வரா, வொய்ஃபான்னு நீங்க என்ன கேட்டாலும் அந்த கொஸ்டின பாலா சாருக்கு ஃபார்வர்டு பண்ணிடுவேன். டிரெய்லரையும், பாட்டையும் பார்த்துட்டு வைரமுத்து சார் பாராட்டினார். டயலாக்கே இல்லாம, ‘இப்படிப் பாருங்க, இப்படி நில்லுங்க’ன்னு சில சீன்ஸ் ஷூட் பண்ணினாங்க. அப்புறம்தான் அது பாட்டுக்காகன்னு தெரிஞ்சது. முதல்ல ஷூட் பண்ணிட்டு அப்புறம் சாங் கம்போஸ் பண்ணியிருக்காங்க.

பூர்ணிமா ராமசாமி காஸ்ட்யூம் டிசைனர். கால்ல போடுற கொலுசு டிசைன் மாதிரியான ஒரு நெக்லஸ், மெட்டி மாதிரி மூக்குத்தி - கம்மல், சிலம்பு போன்ற வளையல்னு வித்தியாசமான அக்ஸசரீஸ் போட்டு நடிச்சது புது அனுபவம்!’’
- அமலன்