இது கெமிஸ்ட்ரி இல்லை... ஹிஸ்டரி!





‘‘கதைன்னா எதுங்க? ஒருத்தன் பிறந்தது முதல் சாகிற வரைக்கும் சொல்லி முடிக்கிறதும் கதைதான்; சட்டுனு நிமிஷத்தில் நிகழ்ந்துடுற அதிசயத்தையும் விபத்தையும் விவரிப்பதும் கதைதான். இதை நீங்க எப்படிச் சொல்லி, பார்க்கிறவங்க மனசுக்குள்ளே அழுத்தமா உட்காரப் போறீங்க என்பதுதான் சினிமா. அப்படி என்னோட ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ இரண்டு பேரின் அருமையான வாழ்க்கையை முன் எடுத்து வைக்கிற முயற்சி. கடுமையும், வன்முறையும், பரபரப்பும் இருக்கிற சினிமாவில், அழகா சிரிக்க வைக்கிற காமெடி படம். அன்பின் அமைதியோட ஒரு மெசேஜ் சொல்லி, முடியும். ‘மெரினா’விற்குப் பிறகு, இது எனக்கு சந்தோஷமான படம்’’ - அமைதியாகப் பேசுகிறார் டைரக்டர் பாண்டிராஜ். ‘பசங்க’ மூலம் ‘பளிச்’சென்று வெளியே வந்தவர்.
‘‘இதிலேயும் ஒரு ஜாலி காதல் இருக்கா?’’

‘‘பெரியவங்க பார்க்கிற சினிமாவை பசங்க பார்த்துக்கிட்டு இருந்தாங்க. என்னோட முதல் சினிமா குழந்தைகளுக்காக இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் ‘பசங்க’. ‘கலகலன்னு அஞ்சு பாட்டு, நாலு ஃபைட், ஹீரோ அறிமுகம்னு அதகளப்படுத்தாம, என்னடா இது?’ன்னு பலர் பயமுறுத்தினாங்க. எனக்கு தமிழ் ரசிகர்களோட ரசனை ஓரளவு புரியும். சரியா சொன்னா, நல்லதை எடுத்துக்கிற அருமையான ஜனங்க. அதுல கிடைச்சதுதான் ‘பசங்க’ வெற்றி.

எல்லாருக்கும் ‘பசங்க’ படத்தில் இழையோடிய காதல் பிடிச்சது. ‘இன்னும் வந்திருக்கலாம்’னு சொன்னாங்க, அதுதான் இப்போ விரிவா வந்திருக்கு. இன்றைய இளைஞர்களிடம் இருக்கிற முக்கிய பிரச்னை, தான் என்னவாகணும்னு எடுக்கிற முடிவு. நிறைய குழம்புறாங்க. அதில் சில இடங்களை சொல்லியிருக்கேன். சீரியஸான விஷயத்தை சிரிச்சுக்கிட்டே சொன்னால் ஒரு அழகுதானே!
திருச்சி பொன்மலைக்கு வந்திருக்கேன். ரயிலும் ரயில் சார்ந்த இடமும் தர்ற பரவசமே வேற. பிரமாதமான டவுன்ஷிப்; அழகான வீடு. சந்தோஷமா விமல், சிவகார்த்திகேயன்னு இரண்டு ஃப்ரண்ட்ஸ். பொறுப்பானவங்களா மாறத் துடிக்கிற பசங்க அவங்க. அம்சமான கோயில் திருவிழா மாதிரி கொண்டாட்டமா போயிட்டிருக்கிற வாழ்க்கையில் பொளேர்னு நடக்கிற சம்பவங்கள். உலகத்திலேயே இல்லாத கதை இல்லை. ஆனா, பக்கா காமெடி இருக்கு. மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஓடும்போது, திடீர்னு குறுக்கே ஒரு அழகான பொண்ணு வந்து, தன் குடைக்குள்ளே இழுத்தா எப்படி இருக்கும். அப்படி ஒரு இளமை விளையாட்டு படம் பூரா இருக்கு. விமலும், சிவகார்த்தியும் பண்ணுகிற காமெடி, சீட்ல உட்கார வைக்க கேரண்டி!’’
‘‘விமலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் சண்டை ஒண்ணும் வரலையே..?’’


‘‘முதல் நாள்தான் அறிமுகம்... அடுத்த நாள் கொஞ்சம் பேசிக்கிட்டே இருந்தாங்க... மூணாவது நாள் பார்த்தா ‘மாற்றான்’ மாதிரி தோளுல கையைப் போட்டுக்கிட்டு பிரியவே மாட்டேங்கிறாங்க. நாங்க ஆபரேஷனுக்கே ரெடியாகிட்டோம். கார்த்தியை ‘ஷூட்’டுக்கு கூப்பிட்டா விமலும் வருவார். இவரைக் கூப்பிட்டா அவரு. அழிச்சாட்டியம் தாங்க முடியலை. எனக்கு சந்தோஷமா இருந்தது. இந்த அளவுக்கு இரண்டு பேரும் ஜாலியா நடிச்சு நான் பார்த்ததில்லை. ட்வென்ட்டி 20 ஆட்டத்துக்கே ஹைலைட்ஸ் கட் பண்ணிப் போட்டா எப்படியிருக்கும்? அப்படி ஒரு விறுவிறுப்பும் எனர்ஜியும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெறிக்கும்.’’

‘‘ஹீரோயின்ஸ கச்சிதமா பிடிச்சிட்டீங்க?’’
‘‘நான் ரெஜினாவை ‘பாப்பா’ன்னுதான் கூப்பிடுவேன். அதே மாதிரி பிந்து மாதவியை ‘மித்ரா’ன்னு சொல்லுவேன். அதெல்லாம் கேரக்டர் பெயர். சொந்தப் பேரை செல்லமா கூப்பிடப் போயி பிரச்னையாகிடப் போவுதுனு இப்படி ஒரு செட்டப். டான்ஸ், பாட்டுன்னு வந்திட்டா, ‘அந்தப் பொண்ணு சும்மா கதையடிச்சுட்டு இருக்கு பாருங்க, அவங்களையும் கூப்பிடுங்க’ன்னு ஒருத்தருக்கொருத்தர் இழுத்து விடுவாங்க. ‘விடாதீங்க மாஸ்டர், ட்ரில் வாங்குங்க’ன்னு டான்ஸ் மாஸ்டரை உசுப்பி விடுவாங்க.



விமல் - கார்த்தி ரெண்டுபேரும் லவ்ல கூட ஃபீலிங் பார்ட்டி கிடையாது. காதலையும் காமெடியா பார்க்கிற பசங்க கூட இந்தப் பொண்ணுங்க மேட்ச் ஆனது சும்மா பார்க்கவே ஜில்லுனு இருக்கு. ‘நீங்க பின்னிட்டிங்க’ன்னு கார்த்தி விமலையும், ‘அட... உங்க ரவுசு வருமா’ன்னு விமல் கார்த்தியையும் பாராட்டிக்கிட்ட இடம் நிறைய இருக்கு. சிவகார்த்தி - ரெஜினா, விமல் - பிந்துமாதவி... இவங்களுக்குள்ள இருக்கறது கெமிஸ்ட்ரி இல்ல... அது ஹிஸ்டரி! ரெண்டு ஜோடியும் போட்ட ஆட்டத்துக்கு மூணு சென்டரும் ஆடும்!’’
‘‘திடீர்னு யுவன்ஷங்கர் ராஜா பக்கம் வந்துட்டீங்க?’’

‘‘ரொம்ப நாளா யுவனோட ஒர்க் பண்ணணும்னு ஆசை. அது செட்டாயிருக்கு. யுவனை ஏன் எல்லாரும் விரும்புறாங்கன்னு பக்கத்தில் இருந்து பார்க்கும்போது தெரியுது. அவருக்குப் பிடிச்ச டியூன், எனக்குப் பிடிச்ச டியூன்னு இல்லாம, ரசிகர்களுக்கு புடிச்ச விஷயங்களைத் தேடிப் பிடிக்கிறார். இசையை ஒரு ரசிகனா, ரொம்ப உணர்வுபூர்வமா செய்யணும்னு ஆசைப்படுறார். இதுதான் அவரோட வெற்றிக்கு ஆதாரம். ஆர்ப்பாட்டமான பாட்டும் இருக்கு. மெலடியில் கொஞ்சுறதும் இருக்கு. காதலை விடவும் சந்தோஷமான விஷயத்தை கடவுள் இன்னும் இந்த பூமிக்குக் கொடுக்கலை. அதனால் கடவுளுக்கும் நன்றி... காதலுக்கும் நன்றி!’’
- நா.கதிர்வேலன்