கடல் துளசி! முதல் பேட்டி





பூவின் இதழ் தாங்கும் பனித்துளி போல ஃபிரஷ்ஷாக இருக்கிறது துளசியின் முகம். பொத்திப் பொத்தி வைத்திருந்த அவரது படத்தை ‘கடல்’ புறத்திலிருந்து முதல்முறையாக வெளியிட்டுள்ளனர். பெயரில் நறுமணமும் பேச்சில் தமிழ் மணமும் கமழ்கிறது துளசியிடம்.

‘‘எங்க பெரியம்மாதான் எங்க தாத்தாவுக்கு ‘துளசி’ பிடிக்கும்னு சொல்லி இந்தப் பேரை வச்சாங்க. ஓஹோன்னு இல்லாட்டியும் ஓரளவு தமிழ் தெரியும். அம்மா, பெரியம்மா, அக்கா... வரிசையில் நானும் நடிகையாவேன்னு ஒரு ஆசை மனசு ஓரத்தில் துளியளவு இருந்திருக்கலாம். ஆனா அது இப்படி கடல் அளவு நனவாகும்னு நினைக்கவே இல்லை. ஒரு விநாயகர் சதூர்த்தி அன்னிக்கு மும்பையில எங்க வீட்டுக்கு திடீர்னு வந்தார் மணிரத்னம் அங்கிள். அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தவர், திடீர்னு என்னை நடிக்கக் கேட்டார். இப்படி ஒரு அதிர்ஷ்டம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?’’

‘‘முதல்நாள் ஷூட்டிங்கில் பயம்..?’’
‘‘பயம்னு சொல்ல முடியாது. மணிரத்னம் அங்கிள் முன்னாடி நிற்கிறோமேங்கிற மரியாதையும் தயக்கமும் இருந்துச்சு. எதப் பத்தியும் கவலைப்படாம நடிச்சதால அங்கிள்கிட்டயிருந்து அப்பப்போ பாராட்டுதான் கிடைச்சது. அந்தமான், தூத்துக்குடி, சென்னைன்னு நிறைய கடல் லொகேஷன்ஸ்... புது அனுபவமா இருந்துச்சு. எமோஷன், காமெடின்னு எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் பண்ண வாய்ப்புள்ள ஒரு கேரக்டர். கடல் பின்னணி கதை என்பதால் எனக்கு டல் மேக்கப் இருக்கும்னு நினைக்காதீங்க. ரியலா நான் எப்படி இருப்பேனோ, அப்படியே இருப்பேன். சிரமமே இல்லாம டயலாக்கெல்லாம் பேசுறேன்னு அம்மா பாராட்டினது எனக்கு நல்ல எனர்ஜி கொடுத்தது. மணி அங்கிள் மூலமாக கடவுள் தந்த பரிசு ‘கடல்’. அக்கா கார்த்திகாவுக்கும் நான் நடிக்க வந்ததில் சந்தோஷம். வீட்ல ரொம்ப ஃபிரண்ட்லியா இருப்போம். சினிமாவிலும் போட்டியெல்லாம் இல்லாம ஃபிரண்ட்லியா இருப்போம்.’’

‘‘கௌதம் எப்படி?’’
‘‘ம்... சூப்பர்! நான் இப்போதான் டென்த் படிக்கிறேன். அவருக்கு என்னைவிட அஞ்சு வயசு அதிகம் இருக்கும். ஆனா, பிளஸ் 2 ஸ்டூடன்ட் மாதிரி அவ்ளோ யூத்தா இருக்கார். அவருக்கும் எனக்கும் படத்தில கெமிஸ்ட்ரியும், வெளில நல்ல ஃபிரண்ட்ஷிப்பும் போய்க்கிட்டிருக்கு.’’

‘‘படிப்பு கஷ்டமா... நடிப்பு கஷ்டமா?’’
‘‘ஹீரோயினா கமிட் ஆகுற வரைக்கும் ஆக்டிங் ரொம்ப ஈஸின்னுதான் நினைச்சேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை திரும்பத் திரும்ப பார்த்தப்போதான் எந்தெந்த சீன்ல எவ்வளவு கஷ்டப்பட்டு அம்மா நடிச்சிருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். புரிஞ்சு படிச்சா படிப்பு ஈஸி; புரிஞ்சுக்கிட்டு நடிக்கும்போது நடிப்பும் ஈஸி. அடுத்து ரவி கே.சந்திரன் டைரக்ஷன்ல ‘யான்’ படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். படத்திலும், படிப்பிலும் பாஸாக வேண்டிக்குங்க!’’
- அமலன்