சினேகாவை பாராட்டிய விஜய்




‘‘நீயெல்லாம் நல்லா வருவ’’ என்று சந்தானம் போலல்லாமல் சீரியஸாகவே கமென்ட் சொன்னாராம் விஜய். செம குஷியில் இருக்கிறார் இயக்குனர் சினேகா. ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் ரீமேக்கை இயக்கியுள்ள இந்த 18 வயது மாணவி, இயக்குனர் எஸ்.ஏ.சிக்கு பேத்தி உறவு. விஜய் இவருக்கு சித்தப்பா!

‘‘விஸ்காம் செகண்ட் இயர் படிச்சிட்டு இருக்கேன். எஸ்.ஏ.சந்திரசேகர் தாத்தா டைரக்ட் பண்ணும் படங்களோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அடிக்கடி போயிட்டு வந்தப்போதான், இயக்குனராகணும்கிற விதை எனக்குள்ள விழுந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய கத்துக்க முடிஞ்சது. ஒரு படத்தை எப்படி எடுக்குறாங்கன்னு உன்னிப்பா கவனிப்பேன்.  முப்பதுக்கு வருஷத்துக்கு முன்னால தாத்தா இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’, பல மொழிகள்ல ஹிட்டாச்சு. தாத்தாவின் முதல் படமே எனக்கும் முதல் படமா அமைஞ்சதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்’’ - நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கைகுலுக்குகிறது சினேகாவின் பேச்சில்.



‘‘கதையில மாற்றம் ஏதும் இருக்கா?’’
‘‘இளைஞர்களை ஈர்க்கும்படியா, யூத்ஃபுல்லான லவ் போர்ஷனை சேர்த்திருக்கேன். அதனால திரைக்கதை ரொம்ப ஃபிரஷ்ஷா தெரியும். விஜயகாந்த் கேரக்டரில் தமன்குமார் நடிக்கிறார். ரீமாசென் அவரோட சிஸ்டரா பண்றாங்க. இந்தியில் இந்த கேரக்டர்களில் ரஜினி சாரும் ஹேமமாலினியும் நடிச்சிருந்தாங்க. பியா, பிந்துமாதவின்னு ரெண்டு ஹீரோயின்ஸ். யாரு யாரைக் காதலிக்கிறாங்கன்னு இப்பவே சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும். ரொம்ப நாள் கழிச்சு போலீஸ் கேரக்டரில் எஸ்.ஏ.சி தாத்தாவும் இயல்பா நடிச்சிருக்கிறார்.

ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே வொர்க் ஷாப் வச்சி ரெடியானது ஸ்பாட்டில் வொர்க் பண்றதுக்கு ஈஸியா இருந்துச்சு. ஹாங்காங்கில் ஹெலிகாப்டர் சீன் ஒன்ணு எடுத்தப்போ பியா கால்ல அடிபட்டுடுச்சு. ஆனாலும் முகத்தில் வலியைக் காட்டாம, சிரிச்சுக்கிட்டே நடிச்சிக் கொடுத்தாங்க. அத்தனை பேருமே முழு உழைப்பையும் ஒத்துழைப்பையும் கொடுத்திருக்காங்க. விஜய் ஆண்டனி இசையில் 5 பாடல்கள் அழகா வந்திருக்கு. சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவில் ஹாங்காங் லொகேஷன் கண்களுக்கு விருந்தா இருக்கும்...’’



‘‘சித்தப்பா விஜய் என்ன சொன்னார்?’’
‘‘திடீர்னு ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டார். என்னதான் சித்தப்பாவா இருந்தாலும் பெரிய ஸ்டாராச்சே! எனக்கு கையும் ஓடல; காலும் ஓடல. டென்ஷன்ல கையெல்லாம் சில்லுன்னு ஆயிடுச்சு. என்ன சொல்லப் போறாரோன்னு நினைச்சப்போ, ‘குட்... வெரிகுட்...’னு என்னை ஆசீர்வாதம் செஞ்சதை மறக்கவே முடியாது. பழைய ‘சட்டம் ஒரு இருட்டறை’ தெலுங்கு பதிப்பில் நடிச்சிருந்த சிரஞ்சீவி சாரை மீட் பண்ணினேன். அவரோட மகள் டைரக்ட் பண்ணினா எப்படி சந்தோஷப்படுவாரோ, அதே நிறைவோட என்னை வாழ்த்தினார். இது எல்லாத்துக்கும் காரணமா இருக்கிற எஸ்.ஏ.சி தாத்தாதான் எனக்கு காட் ஃபாதர் மாதிரி தெரியுறார்’’ என நெகிழும் சினேகா, ‘‘சினிமாவில் இப்போதான் நான் ‘அ’ போட்டிருக்கேன். சித்தப்பாவை வச்சு இயக்குற அளவுக்கு வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல. அதுக்கெல்லாம் இன்னும் நிறையா உழைக்கணும். உழைப்பேன், ஜெயிப்பேன்’’ என நம்பிக்கை சிறகு விரிய விடை கொடுக்கிறார்.
- அமலன்