ஹன்சிகா அஞ்சலி... யார் பெஸ்ட்?





‘‘‘சேட்டை’யைப் பத்தி ரெண்டே வார்த்தையில சொல்லணும்னா ‘படு ஜாலி’. முழுக்கவே அந்த மூட்லதான் தினமும் ஸ்பாட்டுக்கு போறேன்!’’ - ஐ.பி.எல் மைதானம் போல் எப்போதும் ஏக எனர்ஜியுடன் பேசுவது டைரக்டர் கண்ணன் ஸ்பெஷல். டைட்டில் தொடங்கி ஹீரோ - ஹீரோயின் ஜோடிப்பொருத்தம் வரை ‘சேட்டை’யில் எக்கச்சக்கமாக கண்ணன் டச்.‘‘எப்படி வந்திருக்கு சேட்டை?’’

‘‘ ‘டெல்லி பெல்லி’ பார்த்தவங்களுக்குத் தெரியும்... அந்தப் படத்தோட குதூகலமும், துறுதுறு வேகமும். நம்ம சூழலுக்கு ஏற்ற மாதிரி, அதில் சில நல்ல மாற்றங்களைச் செய்திருக்கோம். ஒரிஜினல்ல ஒரு பாட்டு கூட கிடையாது. இதுல ரொம்பப் பொருத்தமா ஐந்து பாடல்கள் இருக்கு. அமீர் கானே ஆசைப்பட்டு தயாரிச்ச படம் ‘டெல்லி பெல்லி’. இதில் ஆர்யா பத்திரிகை நிருபரா வர்றார். ப்ரேம்ஜி கார்ட்டூனிஸ்ட். சந்தானம் ‘நடுப்பக்கம்’ நக்கின்னு மிகப் பிரபலமான கிசுகிசு எழுத்தாளரா வர்றார். எந்த நடிகர், நடிகை யார் கூட தொடர்பில் இருக்காங்க... அவங்களோட நட்பின் நெருக்கம் எவ்வளவுன்னு துல்லியமா அளந்து சொல்ற பத்திரிகையாளர்.

ஆர்யா - சந்தானம் ஜோடி இன்னும் ஹிட்டாகும். எங்களுக்கே ஷாட் சரியா அமைஞ்சது தெரிந்தும், வெடித்து சிரித்த அனுபவங்கள் இருக்கு. சந்தானம் ஷாட் படமாகிற முதல் நிமிஷம் வரை சிரிப்பு வெடியில் அக்கறையா இன்னும் இன்னும் கலாட்டாவா சேர்ப்பார்.’’
‘‘ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலின்னு காம்பினேஷனே அள்ளுதே... எப்படிப் பிடிச்சீங்க’’



‘‘ ‘டெல்லி பெல்லி’ படம் தந்த தைரியம், அப்புறம் என் மேல் இருந்த நம்பிக்கை... ரெண்டும்தான். என்கிட்டே எந்த தடையும் வச்சுக்காம வந்தார் ஆர்யா. அப்படி நம்பினவங்களை எப்படி கைவிட? இதுவரைக்கும் பண்ணாத ஒரு மாஸ் ஏரியாவில் பின்னி எடுக்கிறோம். ஆர்யாவை ஹீரோயின்களுக்கு மட்டும் அல்ல, ஹீரோக்களுக்கே ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்டதான் எல்லா ஹீரோக்களும் ‘மச்சான்... இந்தப் படம் பண்ணலாமா’ன்னு ஆலோசனை கேக்கறாங்க. எந்த நேரமா இருந்தாலும் அதுக்கு பதில் சொல்றார். தன்கிட்டே வந்த கதை விஷாலுக்கு பொருத்தம்னா, அவருக்கு போன் பண்ணிச் சொல்றார். இப்படிப்பட்ட ஹீரோ, ஆர்யா மட்டும்தான். பொதுவா சினிமால ரெண்டு ஹீரோயின்ஸ் இருந்தா, அடுத்தவங்க ரோல் எப்படி இருக்கு, டிரஸ் எப்படியிருக்குன்னு ஆராய்ச்சியில இறங்கிடுவாங்க. ஆனா ஹன்சிகா, அஞ்சலி இரண்டு பேருமே அவங்க கேரக்டரை விட்டுட்டு, அடுத்தவங்க கேரக்டர்ல என்ன இருக்குங்கிற கேள்விக்குள்ள போகவேயில்லை. காரணம் என்னன்னா, அவங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து சீனே இல்ல. அடுத்த வாரம்தான் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கப் போறாங்க, அன்னிக்குத்தான் ஏதாவது பிரச்னை வருதான்னு தெரியும். ஆர்யா இருக்கறதுனால எந்தக் கவலையும் இல்லை. இப்போதைக்கு எல்லாமே நட்பு ரீதியா போய்க்கிட்டு இருக்கு.’’

‘‘மணிரத்னம் உங்க ஷூட்டிங்குக்கு வந்திருந்தாரே!’’
‘‘ஆமா, அதுதான் ஆச்சர்யம். சவேரா ஹோட்டல்ல நடந்தது. அந்தப் பக்கம் ஜிம்முக்கு வந்திருந்தார். என் ஷூட்டிங் நடந்ததைப் பார்த்ததும் வந்திட்டார். ரொம்ப சந்தோஷமா விசாரிச்சார். எல்லோரையும் பார்த்தார். அவர் கூட சேர்ந்து படம் எடுத்துக்க அத்தனை பேரும் ஆசைப்பட்டாங்க. வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிட்டார். யதேச்சையா நடந்தது. இருந்தாலும் என் குரு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தது எனக்கு விசேஷம்தான். என்னிக்கும் அவர் மாஸ்டர்தான். ‘கடல்’ ஆடியோ கேட்டாலே படம் எவ்வளவு அருமையா வந்திருக்கும்னு தெரியுதே...’’
‘‘ஹன்சிகா, அஞ்சலி... யார் பெஸ்ட்?’’

‘‘ஐயோ... அழகிங்க சார். என்னால கண்டுபிடிக்க முடியலை. நீங்க வேணும்னா தேர்ட் அம்பயரா பார்த்திட்டு சொல்லுங்க. இதெல்லாம் ஆர்யாவுக்குத்தான் தெரியும். உதாரணத்துக்கு சொல்றேனே... அஞ்சலியோட அம்மா எப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சேலை கட்டிக்கிட்டு வருவாங்க. ‘ஏங்க, நீங்க சுடிதாரில் வந்தா சூப்பரா இருக்குமே’ன்னு ஆர்யா சொன்னார். ‘சும்மா கலாட்டா பண்ணாதீங்க’ன்னு அப்போ சமாளிச்ச அந்தம்மா, அடுத்த நாளே ‘சிக்’னு சுடிதார்ல வந்து நிக்கிறாங்க. பாருங்க... ஆர்யாவோட செல்வாக்கு எது வரைக்கும் போகுதுன்னு! அதான் சொன்னேனே... எங்க ஷூட்டிங் முழுக்க ஜாலிதான். படமும் அப்படித்தான் இருக்கும். எல்லாமே யு டி.வி தனஞ்செயனால்தான் சாத்தியமாச்சு.’’
‘‘அஞ்சலிக்கும், ஆர்யாவுக்கும் சூடான முத்தக்காட்சி இருக்கு. அதைப் படமாக்க நீங்க சிரமப்பட்டீங்கன்னு சொன்னாங்க...’’

‘‘ஆமா, கதைக்கு ரொம்ப அவசியம். அந்த முத்தக்காட்சியை மிஸ் பண்ணவே முடியாது. சும்மா பழைய படங்களில் காட்டுவாங்களே... பூவும் பூவும் உரசுற மாதிரி; அப்புறம் ஹீரோயின் உதட்டை தொடச்சிக்கிட்டு ஹீரோவை பார்க்கிற மாதிரி... அப்படி முத்தம் கிடையாது. ஒரிஜினல் அக்மார்க் முத்தம். முதலில் அஞ்சலிகிட்டே சொன்னேன். ‘என்னால் முடியாது. அப்பா திட்டுவாரு...(!) அப்படி இப்பிடி’ன்னாங்க. ஆர்யாவும் நானும் சேர்ந்து சமாதானப்படுத்தினோம். சரின்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் பார்த்தா ஆர்யா முறுக்கிக்கிட்டாரு. ‘அதென்ன, எப்பவும் ஹீரோயினுக்கு மட்டும் சம்மதமான்னு கேட்கிறீங்க. நாங்க என்ன எல்லாத்துக்கும் ரெடியாவா இருக்கோம்? என் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் இந்த பிரெஞ்ச் கிஸ்ஸை பார்த்தால் என்கிட்டே சண்டைக்கு வரமாட்டாங்களா’ன்னு குண்டைத் தூக்கிப் போட்டார். அப்புறம் ரெண்டு பேரையும் சேர்த்து சமாதானப்படுத்தி கிஸ் பண்ண வைச்சோம். ‘அதுல கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு, இதுல கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு’ன்னு ஏழெட்டு டேக் போயிட்டாங்க. கடைசியா ரெண்டு பேருக்கும் திருப்தியாகவும், எங்களுக்கும் திருப்தியாகவும், சீன் வந்துருச்சு. உண்மையைச் சொல்லட்டுமா... எடுத்த எல்லா டேக்கும் ஓகேதான். ஏதாவது புரியுதா சார்?’’
- நா.கதிர்வேலன்