மனதை வருடும் மயிலாடி கற்சிலைகள்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

தமிழர்களின் கலைத்திறன் ஈடு இணையற்றது. கற்களின் உள்ளே உறங்கும் ஆன்மாவை உயிர்ப்பித்து உலவ விடுகிற வல்லமை, தமிழ்நாட்டு சிற்பக்கலைஞனின் சிற்றுளிக்கு உண்டு. சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் சுடுமண் சிலைகள், கள்ளக்குறிச்சி மரச்சிலைகள் வரிசையில், உலகையே வியக்க வைக்கும் கற்
சிலைகளுக்கு பெயர் போன கிராமம் மயிலாடி.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை ஒட்டியுள்ள இந்த சின்ன கிராமத்தின் எல்லையைத் தொட்டாலே, கல்லோடு உளி மோதும் ஓசை காதில் ஸ்வரம் மாறாத இசையாக ரீங்காரமிடுகிறது. இரவு பகலாக சிற்பப் பணி நடக்கிறது. சிறுசிறு குடிசைகள், தாழ்வாரங்கள் என எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்கின்றன கற்கள். இடையிடையே, பெருமாள், நடராஜர், ஐயப்பன், காமாட்சி, மீனாட்சி, துர்க்கை, சுடலைமாடன் என செதுக்கியும், செதுக்காமலும் கிளைத்து நிற்கின்றன சுவாமி சிலைகள்.
கற்சிற்பத் தொழில் மயிலாடியை மையம் கொண்டது
எப்படி..?
‘‘பிரமாண்டமான கோபுரங்களையும், வியப்பூட்டும் சிற்பங்களையும் கொண்ட சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலை கட்டுறபோது, திருவிதாங்கூர் மன்னர்கள் நாடு முழுவதும் இருந்து சிற்பக்கலைஞர்களை இந்தப் பகுதிகளுக்கு அழைத்து வந்தாங்க. ஒவ்வொரு பகுதியில் இருந்து வந்தவர்களும் தனித்தனியாக ஒவ்வொரு கிராமத்தில் குடியமர்த்தப்பட்டாங்க. அப்படி வந்தவங்க சுசீந்திரம் கோயில் பணிகள் முடிஞ்சதும் அவங்கவங்க ஊருக்குக் கிளம்பிட்டாங்க. ஆனா கழுகுமலையில இருந்து வந்த சிற்பிகள் மட்டும் மயிலாடியிலேயே தங்கிட்டாங்க. அவங்க பரம்பரையில வந்தவங்கதான் இப்பவும் இந்தத் தொழிலைச் செஞ்சுக்கிட்டிருக்கோம்’’ என்கிறார் மூத்த சிற்பிகளில் ஒருவரான நல்லதாணு ஆசாரி. மயிலாடி, சேந்தன்புதூரில் இவரது சிற்பப் பட்டறை செயல்படுகிறது. குமரிக்கடலில் வானுயர்ந்து நிற்கிற அய்யன் வள்ளுவன் சிலையை வடிவமைத்த கணபதி ஸ்தபதியின் சீடர் இவர். இவரிடம் பத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் பணிபுரிகிறார்கள்.

அக்காலத்தில் இருந்த அதே அர்ப்பணிப்பு உணர்வோடு இன்றைக்கும் சிற்பத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். சிற்பிகள் குடும்பத்தில் யாரும் வேறு தொழில் நாடிச் செல்வதில்லை. உலகம் முழுதும் இருந்து சிலைகளுக்கான ஆர்டர்கள் வருகின்றன. சிறு சிறு சிதறல்களாக கிடந்த இத்தொழிலை ஒருங்கிணைத்து ஒரு வடிவம் கொடுத்ததோடு, பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தந்தவர் சுப்பையன் ஆசாரி. 1975ல் மயிலாடி கற்சிற்பத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியவர் இவர்தான். இச்சங்கம் உருவாக்கப்பட்ட பிறகுதான் மயிலாடி சிற்பிகளின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைத்தது.

சுப்பையன் ஆசாரியின் கைத்திறன் லேசுப்பட்டதில்லை. மனிதர் உளியைப் பிடித்தார் என்றால் சிலைக்குத் தேவையற்ற செதில்கள் எல்லாம் சிதறி விலகுமாம். அவ்வளவு நேர்த்தி. மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை, கயத்தாறில் உள்ள கட்டபொம்மன் சிலை ஆகியவை சுப்பையா ஆசாரியின் கைவண்ணம்தான்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நாகர்கோவில் வந்தால் மயிலாடிக்குப் போகாமல் சென்னை திரும்பமாட்டார். இந்த கிராமத்தோடு அவருக்கு அப்படியொரு பந்தம். தெருத்தெருவாக நடந்து சிற்பம் வார்க்கும் தொழிலை பார்வையிடுவாராம். இதற்கு ஒரு காரணமுண்டு. சிவாஜியின் தாயார் உருவச்சிலையை அற்புதமாக செதுக்கிக் கொடுத்திருக்கிறார் சுப்பையா. ‘அம்மா உயிர்பெற்று நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது’ என்று சிவாஜி நெகிழ்ந்து போனாராம். அதுமுதல் மயிலாடி அவரது விருப்பத்திற்குரிய இடமாகிவிட்டது. இப்படி மயிலாடியின் சிலையழகில் மயங்கிப்போன பிரபலங்கள் பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன.

‘‘ஒவ்வொரு சிற்பத்துக்கும் ஒவ்வொருவிதமான இலக்கணமும், கணக்கீடும் இருக்கு. அது கத்துக்கிட்டு வர்றதில்லை. ரத்தத்துலயே ஊறணும். சுத்தியலோட வேகம் கல்லுல இறங்கக்கூடாது. உளியோட நின்னு போகணும். மனசு, கை, கண், காதுன்னு எல்லா புலனும் ஒரே நேர்கோட்டுல வந்து நிக்கணும். கல்லுக்குத் தகுந்த உளி இருக்கு. ஒரு கல்லைப் பாத்தவுடனே அதுக்குள்ள இருக்கிற சிலையை கண்கள் கண்டுபிடிச்சிடும். சிலைக்கு மேலே ஒட்டியிருக்கிற கற்களைப் பெயர்த்து எடுக்கிறது மட்டும்தான் சிற்பியோட வேலை’’ என்று தொழில்
நுணுக்கம் பேசுகிற நாராயணப் பெருமாளுக்கு 85 வயது.    

‘‘இன்னைக்கு சிற்பத்தொழில்ல பல நவீனங்கள் வந்திருக்கு. அந்தக்காலத்துல எவ்வளவு பெரிய சிலையா இருந்தாலும், உளியும் சுத்தியலும் வச்சுத்தான் வாட்டப்படுத்துவோம். கல்லை வெட்டியெடுக்க நாள்கணக்குல உளியை வச்சு தட்டிக்கிட்டிருப்போம்.. இன்னைக்கு மெஷின் வந்திருச்சு. பெரிய கல்லை சேதாரமில்லாம நொடிப்பொழுதுல வெட்டிப் போட்டுடுது. ஆனா, எவ்வளவு மெஷின் வந்தாலும் உளியும், சுத்தியலும்தான் சிலைக்கு உயிர் கொடுத்தாகணும்...’’ என்று சிரிக்கிறார் நாராயணப் பெருமாள்.
இங்கிருந்து தமிழகத்தை விட கேரளா, கர்நாடகாவுக்குத்தான் அதிக சிலைகள் செல்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. லண்டன் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை, அமெரிக்காவில் உள்ள நடராஜர் சிலை ஆகியவை மயிலாடி மண்ணில் உயிர்பெற்றவை.
மயிலாடி தவிர, சேந்தன்புதூர், காமராஜர் நகர், மார்த்தாண்டபுரம், வழுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சிற்பிகள் வசிக்கிறார்கள். சிற்பத்தொழில் சார்ந்த பிற தொழில்களும் இப்பகுதியில் நிறைந்துள்ளன.  

‘‘இந்தச் சிற்பத்தொழில் தெய்வீக அம்சம் கொண்டது. எங்க கைபட்டு உருவாகிற சிற்பம் கோடானுகோடி பேர் வணங்குற சிலையா கருவறைக்குப் போகுது. அதனால கட்டுப்பாட்டோடும், அச்ச உணர்வோடவும் இருக்கணும். முதல்ல கல்லுல கரித்துண்டால் சிற்பத்தை ஓவியமா வரைஞ்சுக்குவோம். அப்புறம் காவி மூலம் அடையாளங்களை குறிச்சுக்கிட்டு செதுக்கத் தொடங்குவோம். எல்லா பாகங்களும் தட்டி முடிச்சதும், கடைசியா கண் திறப்போம். விரதம் இருந்து, பூஜை பண்ணித்தான் கண் திறப்போம். இதுக்குன்னு சிற்ப மந்திரங்கள் இருக்கு. பெரியவங்க மூலமா வழிவழியா இதைக் கத்துக்குவோம். அப்படி கண் திறக்கப்படுற சிற்பத்துக்குத்தான் தெய்வீக அம்சம் இருக்கும்’’ என்கிறார் சேந்தன்புதூரைச் சேர்ந்த சுந்தர்.   
சுந்தருக்கு 12 வருட அனுபவம். சராசரியாக நாளொன்றுக்கு 400 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்கிறார். வருமானத்தை விடவும் இதில் கிடைக்கிற மனநிறைவு பெரிது. சிற்பங்கள்
மட்டுமின்றி கோயிலுக்கான தூண்கள், தலைவர்களின் சிலைகளும் செய்கிறார்.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இசைத் தூண்கள், மயிலாடி சிற்பிகளின் கைத்திறனுக்குச் சாட்சி. கேரளாவின் ஆற்றுக்கால் பகவதியம்மன் கருவறை சிற்பமும் இங்கு உருவானது தான். இப்படி தமிழக கைத்திறனுக்கு சாட்சி சொல்ல உலகம் முழுதும் இருக்கின்றன மயிலாடி சிற்பங்கள்.
- ஏ.ஹரிதாஸ்
படங்கள்: மணிகண்டன்