தென்னந்தோப்பு... கீப் இட் அப்பு!





‘ரோஜா’ படத்தில் ‘சின்னச் சின்ன ஆசை...’ பாடல் மூலம் தமிழக ரசிக உள்ளங்களில் மின்னலடித்துச் சென்ற பாடகி மின்மினி மீண்டும் பாட வருகிறார் என்பது அறிந்து ‘பெரிய பெரிய சந்தோஷம்!’
- ந.பேச்சியம்மாள், சிதம்பரம்-1.

‘ஈழ மண்ணின் மனிதர்களுக்கு இந்த உலகத்தில் என்னதான் இருக்கிறது... நம்பிக்கையைத் தவிர?’ என்று ஒற்றை வரியில் தன் வலியும் வேதனையும் பரிவும் கோபமும் கலந்த இதயத்தைப் பிரதிபலித்துவிட்டார் சேரன்.
- கவியகம் காஜூஸ், கோவை-24.

உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்... ஒரு ஹீரோயினைப் பேட்டி எடுத்தால் ஒரு போட்டோதான் போட முடியும் என்பதால்தானே எல்லா ஹீரோயின்களையும் கேமராவுக்குள் அடக்கி வைத்திருக்கும் கார்த்திக் ஸ்ரீநிவாசனைப் பேட்டி எடுத்தீர்கள். எது எப்படியோ, பக்கங்களை திருப்பத் திருப்ப தென்னந்தோப்புக்குள் இளைப்பாறியது போல அப்படியொரு குளிர்ச்சி. கீப் இட் அப்!
- குமாரசாமி, பட்டுக்கோட்டை

பாட்டி, அக்கா, தங்கை, சித்தி என உறவுகளின் தன்மை உணராது வளரும் குழந்தை, பிற்காலத்தில் பெண்ணை பாலியல் பண்டமாகவே பார்க்கும் என்று நெஞ்சில் அறைந்து சொல்லிவிட்டது உங்கள் அலசல் கட்டுரை!
- ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.

‘30 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறேன்’ என்ற ஸ்டேட்மென்ட்டை ஒரு நடிகரிடமிருந்து நாங்கள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. பிரகாஷ்ராஜ் என்ற இந்த ஹீரோவையா தமிழ் சினிமா வில்லனாக்கி ரசிக்கிறது!
- அ.சுகுமார், வேலூர்.

‘ப்ரெஸ்ட் இம்ப்ளான்ட்’டினால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பட்டியலிட்டிருந்தது பகீர். இந்தப் பெண்கள் அதிகம் ஆசைப்பட்டு இயற்கை அழகை எப்படியெல்லாம் பாழடித்துக் கொள்கிறார்கள்!
- எச்.வைரவன், விழுப்புரம்.

ஆண்மைக் குறைவு, எய்ட்ஸ் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துவதற்காக ‘டொகாய் ஜீகோ’ பல்லி இனம் வேட்டையாடப்படுவது வேதனை. அது 20 லட்சம் ரூபாய்க்கு விலை போவது மனிதனின் அறியாமையையே காட்டுகிறது!
- எல்.வேந்தன், புதுச்சேரி.

விலையில்லா இயற்கைக் கொடை தண்ணீர். அதிலும் மத்திய அரசு ‘செக்’ வைத்து விட்டதே! குடிநீர், பாசன நீர் அனைத்துக்கும் விலை நிர்ணயிக்கப் போகும் தண்ணீர் ஆணையம் பற்றியும், அது தனியார்மயமாக இருக்கும் என்ற செய்தியும் படித்து தலையே சுற்றியது. (குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுங்கப்பா!)
- டி.வி.கந்தசாமி, திருவண்ணாமலை.

வழக்கமான ஒரு பக்கக் கதைகளாக இல்லாமல், பொங்கல் ஸ்பெஷலில் இரு பக்கக் கதைகளைப் படித்தது குதூகலத்தையும் இரட்டிப்பாக்கியது. கதைகள் சூப்பர்!
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.