சமர் : சினிமா விமர்சனம்





சூடம் ஏற்றி சத்தியம் செய்யலாம், இப்படி ஒரு கதை தமிழ் சினிமாவில் வந்ததில்லை என. இதைக் கையில் எடுத்த துணிச்சலுக்கே இயக்குநர் திருவிற்கு போடலாம் ஒரு சபாஷ். ஆனால், கதையைக் கொண்டு போன விதத்தில் அவருக்குக் கொஞ்சம் மைனஸ்தான்.

ஊட்டியில் காட்டை சுற்றிக் காட்டும் வேலை செய்கிறார் விஷால். சுனைனாவின் விழியில் விழுந்து இதயம் நுழைகிறார். அவர் எந்நேரமும் காட்டையே கட்டிக்கொண்டு அழ, விஷாலின் காதலை முறித்துக்கொண்டு பாங்காக் பறக்கிறார் சுனைனா. சில மாதங்களில் பாங்காக் வரச்சொல்லி சுனைனாவிடமிருந்து வருகிறது கடிதம். சரி, இனி காதல் கும்பமேளாதான் என்று நினைக்கும்போது விஷாலுக்கும் நமக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுத்து பகீர் திருப்பங்களில் தடதடக்கிறது கதை.

காதலியைப் பார்க்க பாங்காக் செல்லும் விஷால், ஒரு பக்கம் தனது உயிருக்கு உலை வைக்க துரத்தும் கூட்டம்; இன்னொரு பக்கம் கோடீஸ்வரராக நினைத்து சகல மரியாதை தரும் ஆட்கள் என நடப்பது புரியாமல் திகைக்கும் இடத்தில் படு இயல்பு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் த்ரிஷா தரிசனம். விஷாலுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறும்போதும், வில்லன் ஆட்களால் விளையாட்டு பொம்மை ஆக்கப்படும்போதும் எக்ஸ்பிரஷனில் இதயம் பறிக்கிறார்.

சாதாரண மனிதர்களின் வீக்னஸை வைத்து, அவர்களை வீடியோ கேமாக மாற்றி விளையாடும் வில்லத்தனம் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதுசு. இந்தியின் சூப்பர் ஆக்டர் மனோஜ் பாஜ்பாய், சக்ரவர்த்தி அருமையான தேர்வு. அசகாய சூரரான பாஜ்பாயை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். கோடீஸ்வரராக கவனிக்கப்பட்ட விஷால், அடுத்த ரெண்டு நாட்களில் வீதியில் நிற்பது, தனது பி.ஏ என்று சொல்லிக்கொண்டு ஆடம்பரமாக வந்த ஜான் விஜய், அடுத்த நாளே பெண் புரோக்கராக அலைவது, தனக்கு உதவி செய்த த்ரிஷாவே துரோகியாக மாறுவது போன்ற ட்விஸ்ட்கள் படத்துக்கு பலம். கடைசியில் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் சபாஷ் போட வைக்கிறது.

குளிர் ஊட்டியின் தென்றலாய் வந்த சுனைனா ஆரம்பக் காட்சிகளுக்குப் பின்னால் காணாமல் போய், த்ரிஷாவுக்கு வழிவிடுகிறார். சில இடங்களில் பரவச ஆச்சரியம் காட்ட மட்டுமே அவருக்கு ஸ்கோப். பிறகு பாங்காக்கில் போகிற போக்கில் விஷாலைப் பார்ப்பதோடு சரி. த்ரிஷா இன்னும் ஐந்து வருடத்திற்குக் கூட தம் கட்டி நிற்பார் போலிருக்கிறது. இடைவெளியில் இன்னும் மெருகேறி களையாக மிளிர்கிறார். விஷாலின் ஆக்ஷன் அருமை. ஓங்கு தாங்காக நின்று எதிரிகளைத் தாக்கும்போது நமக்கே வலிக்கிறது.

பாங்காக், பாட்டியாலாவின் அழகை சுட்டிருக்கும் ரிச்சர்டு நாதனின் கேமரா அழகு. காதல் காட்சிகளில் கேமரா கவிதை வாசிக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் வசனம் படத்திற்கு பலம். யுவன் பாடல்களில் ‘அழகோ அழகு’ பாடல், முதல் தரம். மற்றவை சுமார்தான். தொட்டதெல்லாம் ஹிட்டு என்ற வசீகரத்தை யுவன் இழந்துவிட்டார் போல! காமெடியை கையில் தனியாக எடுக்காமல் விட்டிருப்பது துணிச்சல் ரகம்.
குழப்பமில்லாமல் திரைக்கதையைத் தந்திருந்தால் ‘சமர்’ இன்னும் அமர்க்களப்படுத்தியிருக்கும்.
- குங்குமம் விமர்சனக் குழு