பாலா கொடுத்த விருது!





ஆங்காங்கே அழகோடும் அளவோடும் சுண்டி இழுக்கிறது தன்ஷிகாவின் தேகம். செர்ரி இதழில் தந்தியடிக்கும் தமிழ் வார்த்தைகள் புது வகை மது. ‘பரதேசி’யில் அழுக்கோடும் நடிப்போடும் பாலாவால் பெண்டு நிமிர்த்தப்பட்ட தன்ஷிகா இப்போ ரிலாக்ஸ் ப்ளஸ் ஃபிரஷ்.

எப்படி இருந்தது ‘பரதேசி’ அனுபவம்?
‘‘தாகத்தோட பாலைவனத்துல நடந்து போய்ட்டிருக்கிறவன் முன்னால அடைமழை பெய்தா எப்படி இருக்கும். அப்படி ஒரு சந்தோஷத்தைக் கொடுத்த வாய்ப்புதான் ‘பரதேசி’. நமக்குள்ள ஒளிஞ்சிட்டிருக்கிற திறமையை காட்டுறதுக்குன்னு நல்ல வாய்ப்பு வராதான்னு காத்திருந்தப்பதான் பாலா சார் ஆபீஸிலிருந்து போன். போனேன். மேக்கப் டெஸ்ட் முடிஞ்சு ‘ஓகே... ஆனா ஏதோ மிஸ்ஸாகுது’ன்னு யோசிச்சவர், ‘இன்னும் கொஞ்சம் டார்க்கா இருந்தா நல்லா இருக்கும்’னு சொன்னார். அவர் எதிர்பார்த்த மாதிரி போய் நின்னதும் ‘இப்போ நீ செலக்டட்’னு சொல்லிட்டார்.



ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே, ஸ்பாட்ல குடை பிடிக்கக் கூடாது, ஜூஸ் குடிக்கக் கூடாது, உதடை டிரையா வச்சிக்கணும்னு நோட்ஸ் கொடுத்திட்டாரு. அதை அப்படியே ஃபாலோ பண்ணினேன். டீ எஸ்டேட் பின்னணியிலதான் படத்தோட கதை நடக்குது. பஞ்சம் பிழைக்க எஸ்டேட்களுக்கு வந்து அடிமைத்தனத்துல சிக்கி கொடுமைகளை அனுபவிச்ச மக்களோட வாழ்க்கைதான் படத்தில வருது. நாம குடிக்கிற டீயோட உரமே அந்த மக்களோட ரத்தம்தான். இதுக்கு மேல நான் சொல்ல முடியாது...’’

‘‘இதுல உங்க கேரக்டர் என்ன?’’
‘‘மரகதம். ரொம்ப விரக்தியான வாழ்க்கை வாழுற ஒரு பொண்ணு. முகத்தைப் பார்த்தாலே பரிதாபப்படுற மாதிரியான கேரக்டர். முதல் மூணு நாள் தேயிலை பறிக்க டிரெய்னிங் நடந்துச்சு. ரொம்ப நாளா இலை பறிக்கிறவங்களோட லாவகமும் வேகமும் நடிப்பில வெளிப்படணும்னுதான் அந்த டிரெய்னிங். ஷூட்டிங் முடிஞ்சதும், ‘தன்ஷிகா... நல்லா பண்ணியிருக்க. இல்ல, இல்ல, ரொம்பவே நல்லா பண்ணியிருக்க’ன்னு பாலா சார் பாராட்டினார். யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்டாத பாலா சார் இப்படிச் சொன்னதே எனக்குக் கிடைச்ச பெரிய விருது.’’



‘‘எந்த இடத்திலாவது பாலாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டீங்களா?’’
‘‘ஆரம்பத்துல அந்த பயம் இருந்துச்சு. பாலா சார்கிட்ட கோபம் மட்டும்தான் இருக்கும்னு நினைச்சதுக்கு மாறா, டோட்டலா வேறொரு பாலாவா அவர் தெரிஞ்சார். ஒரு காட்சி எவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கணும்னு மெனக்கெடுறாரோ, அதுக்கு எதிர் மறையா ஷூட்டிங் பிரேக்ல செம ஜாலியா, காமெடி பண்ணிக்கிட்டே இருப்பார். சாப்பாட்ல ஆரம்பிச்சு தங்குற ரூம் வரைக்கும் எல்லாரையுமே ஒரே மாதிரி கவனிச்சிக்குவார். ‘உங்களுக்கு ஏதாவது குறை வச்சிருந்தா மன்னிச்சுக்குங்க’ன்னு சொல்வார். நடிப்புல களிமண்ணா இருக்கறவங்ககூட பாலா கையில் சிக்கினா உயிர் பெறுவாங்க!’’



‘‘அதர்வாவுடன் கெமிஸ்ட்ரி..?’’
‘‘படம் ஆரம்பிச்சு ஒரு வாரம் ரெண்டு பேரும் பேசிக்கல. பாலா சார் அறிமுகப்படுத்தி வச்சப்போ ‘ஹாய்’, ‘ஹலோ’ சொல்லிக்கிட்டதோட சரி. ரொம்ப அமைதியா இருப்பார். சதா அவர் கேரக்டர் பத்தி மட்டும் யோசனை பண்ணிட்டு இருப்பார். ரொம்ப டெடிகேடட் ஆர்ட்டிஸ்ட். படத்தில ஒரு இடத்தில் நான் அவரை அடிக்கிற மாதிரியும் எட்டி உதைக்கிற மாதிரியும் சீன் இருக்கு. அது கிட்டத்தட்ட அஞ்சாறு டேக் போனப்போ நிஜமாவே கலங்குற மாதிரி ஆகிட்டார். நடிப்புன்னாலும் எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு.’’

‘‘வேதிகாவுக்கும் உங்களுக்கும் போட்டி?’’
‘‘போட்டியெல்லாம் இல்லை. ‘பேராண்மை’ சமயத்தில்தான் ‘அந்தப் பொண்ணுக்கு அதிக சீன் எடுக்குறாங்களே... நம்ம கேரக்டரை சின்னதா ஆக்கிடுவாங்களோ’ன்னு பொறாமையும், போட்டியும் எட்டிப் பார்க்கும். இப்ப மனசு பக்குவமாகிட்டதால அப்படித் தோன்றதில்ல. பொதுவா பொண்ணுங்கள அழகா காட்டணும்னு நினைப்பாங்க. ‘பேராண்மை’யில் முகத்தில அழுக்கையும் கரியையும் பூசச் சொன்னப்போ, ‘ஹய்யோ... இப்படி அசிங்கமா காட்டுறாங்களே’ன்னு நினைச்சிப்பேன். ஆனா அசிங்கமா இருக்கவேண்டிய சீனில் அழகா இருப்பதும், அழகா இருக்கவேண்டிய சீனில் அசிங்கமா இருக்கறதும்தான் தப்புங்கிற பக்குவத்தை பாலாவிடமிருந்து தெரிஞ்சுக்கிட்டேன்...’’



‘‘உங்க மேல இருக்கற எதிர்பார்ப்பு ‘பரதேசி’யால கூடியிருக்கா?’’
‘‘சின்ன வயசு வரைக்கும் தஞ்சாவூர்லதான் இருந்தேன். ஸ்கூல் படிக்கிறப்போ அத்லெடிக் வீராங்கனையா இருந்தேன். சென்னைக்கும், சினிமாவுக்கும் வருவேன்னு நான் நினைச்சிப் பார்க்கல. காற்றின் திசையில் பறக்கும் இறகு எந்த இடத்தில் விழும்னு எப்படிச் சொல்ல முடியும்? ‘பேராண்மை’ முடிச்சதும் நான் நடிச்ச சில படங்கள் சரியா போகல. ‘அரவான்’லதான் அங்கீகாரம் கிடைச்சது. இப்போ ‘பரதேசி’. படத்தோட டிரெய்லரை பார்த்துட்டே ‘நடிப்பு ராட்சஸி’ன்னு நிறைய வாழ்த்து வந்துச்சு. ‘இந்தப் படத்துல உன்னோட கேரக்டரைப் பார்த்துட்டு எல்லாரும் கையெடுத்துக் கும்பிடணும்’னு பாலா சார் சொல்லிட்டு இருந்தார். ரொம்ப எதிர்பார்ப்போடதான் இருக்கேன்.



அடுத்ததா மீரா கதிரவன் டைரக்ஷன்ல ‘விழித்திரு’, சந்தானம், சிவா காம்பினேஷன்ல ‘யா யா’ன்னு ரெண்டு படங்களில் மட்டும் கமிட் ஆகியிருக்கேன். ‘பரதேசி’ ரிலீசுக்குப் பிறகுதான் மத்த கமிட்மென்ட்ஸ். ‘பத்து படங்களில் பல்கா புக்காகணும்... அடுத்த மாசமே டாப் ஹீரோயினாகிடணும்’ங்கிற ஆசையை வளர்த்துக்கல. எது நடக்குமோ அது நல்லாவே நடக்கும்ங்கிற நம்பிக்கை மட்டும் இருக்கு!’’
- அமலன்
அட்டை மற்றும் படங்கள்: புதூர் சரவணன்
லொகேஷன் உதவி: அனுஷ்கா சலூன், ராமி மால்