இப்போ ஹேப்பியா இருக்கேன்!





‘‘நான் நடிக்கவே வரலை. டான்ஸராத்தான் வந்தேன். எனக்குள்ளே இருந்த ரசிகன்தான், ‘அடுத்த கட்டத்துக்குப் போ’ன்னு டைரக்ஷன் பக்கம் தள்ளிவிட்டான். அதுதான் என் தாகமா இருந்ததோன்னு இப்ப நினைக்கிறேன். நடிகன் ஆனதே எனது முதல் ஆச்சரியம். ஆனால் பெரும் வர்த்தக வெற்றிக்கும், இன்னிக்கு நீங்க என்னோட பேசறது வரைக்கும் அதுதான் காரணம். இப்பக்கூட தமிழில் என்னோட ‘ஆடலாம் பாய்ஸ், சின்னதா டான்ஸ்’ வருது. நிஜமாகவே நல்ல படம். என் நடிப்பு கூட மெருகேறிட்டுதோன்னு நானே நினைக்கிற அளவுக்கு இருக்கு’’
- நிதானமாகவும் நேர்மையாகவும் பேசுகிறார் பிரபுதேவா. இன்று தேசமே கொண்டாடுகிற டான்ஸ் மாஸ்டர்.



‘‘முழுக்கவே டான்ஸ்தான்... உங்களோட உச்சகட்ட டான்ஸ் இதுலதான்... இப்படி ஏகப்பட்ட செய்திகள்... நிஜம் என்ன?’’
‘‘படத்துல 10 பாடல்கள் இருக்கு. அதற்கேற்ற மாதிரி டான்ஸ். ஒவ்வொரு டான்ஸும் சோகம், சந்தோஷம், கலாட்டா, காதல், கொண்டாட்டம்னு வேற வேற தினுசில் இருக்கும். வெறும் பாட்டு, டான்ஸ் மட்டுமே கிடையாது. ரொம்ப அழகான கதையில் உணர்ச்சிகரமா டான்ஸ் பின்னப்பட்டிருக்கும். நவரசத்திற்கும் ரெடியாக நீங்க வந்தா நல்லாயிருக்கும். நானே எல்லா டான்ஸையும் ஆடிடலை. பயப்பட வேண்டாம். ‘என்னடா இது, மிஞ்சுறாங்களே பசங்க’ன்னு நானே மிரண்ட டான்ஸ் எல்லாம் இதில் இருக்கு. நம்மளை விட இப்ப இருக்கிற பசங்க ஸ்பீட். எல்லாத்திலும் வேகமா போறாங்க. சில இடங்களில் படம் பார்த்துட்டு நானே நெகிழ்ந்து போயிட்டேன். ரெமோ என்னுடைய நண்பர், நல்ல டைரக்டர். கதையைச் சொன்னதுமே கொஞ்சமும் யோசிக்காமல் சரி சொன்னேன். என்னை விடுங்க, பசங்க ஆடியிருக்காங்க பாருங்க... படம் 3டி வேறயா... அள்ளுது. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியுது. ஒரு பாட்டு மாதிரி இன்னொண்ணுல சாயல் இருக்கக்கூட அனுமதிக்கலை. ‘சடசட’ன்னு ரெடியாகி ‘பரபர’ன்னு ரிலீஸுக்கு நிற்கும்போது பார்த்தால் நிஜமாவே சந்தோஷம். டைரக்ஷன் பண்ணி மூளையைப் பிச்சிக்கிட்டு இருந்தபோது, குழந்தைகள், பெரியவர்கள் எல்லாருக்காகவும் நடிச்சு ஒரு படம் செய்திருக்கறது எனக்கே பெரிய ரிலீஃப்.’’

‘‘முக்காப்லா பாட்டை ரீமிக்ஸ் பண்ணி, டான்ஸ் ஆடியிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்..?’’
‘‘அடடா, அது படத்தில் இல்லைங்க. ச்சும்மா ப்ரமோஷனுக்கு செய்தேன். கவனத்தைக் கவரணும் இல்லையா... அதுக்குத்தான்!’’
‘‘அப்பா, அண்ணன்னு எல்லாரும் டான்ஸர்ஸ்... இந்தப் படம் பார்த்துட்டு வீட்டில் என்ன சொன்னாங்க?’’



‘‘வீட்ல எப்பவும் சினிமாவைப் பத்தி பேசிக்கிறது கிடையாது. எல்லோரும் சேர்ந்து ஒண்ணா உட்கார்ந்து பேசுறதே பெரிய விஷயம். ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில ஓடிட்டு இருப்போம். ஒண்ணா இருக்குறப்பவும் சினிமாவா? நோ சான்ஸ்! அம்மாவைக் கொஞ்சுவேன். அப்பா ரூம்ல ‘எப்படியிருக்கீங்க ஃபாதர்’ன்னு ஒரு எட்டு போய்ப் பார்ப்பேன். சென்னைக்கு வந்தால் இதுக்குத்தான் நேரம் சரியா இருக்கும். சினிமாவை வீட்டுக்குள்ளே விடறதில்லை. இப்போ மும்பையில் தங்கிட்டேன்ல... அதனால் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்.’’

‘‘ ‘ரவுடி ராத்தோர்’ பெரிய ஹிட். பணத்தை மழையா கொட்டியது. ஆனால், நல்லா புதுசா வந்திட்டு இருந்த இந்தி சினிமாவை பயங்கர கமர்ஷியலா ஆக்கிட்டீங்கன்னு குற்றச்சாட்டு வருதே?’’
‘‘அப்படியா? ஏதோ ஒரு ஹோட்டலில் சாப்பிட போனப்போ ஒருத்தர் வந்து என் கையைப் பிடிச்சு ‘சார், உங்க படம்தான் சிங்கிள் தியேட்டரையெல்லாம் காப்பாத்திச்சு’ன்னு கண்ணீர் மல்க சொன்னார். பெரிசா லாபம் சம்பாதிச்சாங்க. மக்கள் சந்தோஷமா இருந்தா, சம்பந்தப்பட்டவங்க காசு பார்த்தா, உங்களுக்கு கஷ்டமா இருக்கா? நான் மத்த படங்கள் ஓடக்கூடாதுன்னா சொல்றேன்? எனக்குத் தெரிஞ்சதை நான் செய்றேன். பெரும் பணம் புழங்கற ஏரியா இது... சும்மா விளையாட முடியாது. கமர்ஷியலா படம் எடுக்கிறதும், பார்க்கிறதும் தப்பா?



இந்தியா முழுக்க ‘ரவுடி ராத்தோர்’ வாங்கினவங்க எல்லாரும் லாபம் பார்த்தாங்க. அது தப்புன்னு சொல்றீங்களா? இத்தனைக்கும் பெரிய வெற்றிப் படம் கொடுத்திட்டேன்னு நான் டமாரம் அடிச்சிருக்கலாம். அதைக்கூட செய்யாமல் அடுத்த வேலையை பார்த்துட்டு அமைதியாத்தான் இருந்தேன். தியேட்டருக்கு ஜனங்களை வரவழைக்கிறதுதான் இன்னிக்கு பெரிய சவால். நான் டைரக்ட் செய்தாலும், யார் டைரக்ட் செய்தாலும் இதை மனசில வச்சிக்கணும்.’’

‘‘அக்ஷய்குமார், சல்மான் எப்படி பழகுறாங்க?’’
‘‘இந்த இண்டஸ்ட்ரியில் என்ன சந்தோஷமான விஷயம்னா, இங்கே என்னை எல்லோருக்கும் கொஞ்சம் பிடிக்கும். இங்கேயே தங்கிட்டோமா... அதனால நிறைய ஃப்ரண்ட்ஸ். அக்ஷய் ரொம்ப ஃப்ரண்ட்லி. எங்கேயிருந்தாலும் ‘எப்படியிருக்கீங்க’ன்னு பேசிக்கிட்டே இருப்பார். நம்மளை ரொம்ப கொண்டாடுவார். அவர் பிரியத்தை எவ்வளவு சொன்னாலும், கம்மியா தெரியும். சல்மான்கான் நமக்கு படு தோஸ்த். திடும்னு வந்து முன்னாடி நிற்பார். அடுத்த படம்கூட ஷாகித் கபூரோட பண்றேன். இனிமே அவரும் நம்ம வட்டத்திற்குள்ளே வந்திடுவாரு. பிரபுதேவான்னாலே ஃப்ரண்ட்லிதானே.’’
‘‘தனிமையில இருக்கீங்க... கஷ்டமா இல்லையா?’’

‘‘ஏங்க, குழந்தைகளை விட்டுட்டீங்க. எப்பவும் அவங்களோட பேசுவேன். இப்பக்கூட அவங்களை பாங்காக் கூட்டிட்டுப் போயி ஒரு வாரம் ஜாலியா சுத்தினேன். சந்தோஷமாத்தான் இருக்கேன்... பாருங்க! சும்மா இருந்தாதான் கஷ்டம். பரபரன்னு காலு நிற்காம ஓடிட்டே இருக்கும்போது தனிமையே இல்லையே? நீங்க கேட்ட பேட்டியைத் தரவே எத்தனை நாள் ஆச்சு பாருங்க. அவ்வளவு பிஸி. குழப்பம் எல்லாம் போய், இப்ப தெளிவா இருக்கேன். படங்கள், அதற்கான தயாரிப்பு, சென்னைக்கு நடுநடுவே போறது, குழந்தைகளைப் பார்க்கிறதுதான் இப்போ ஷெட்யூல். ஹேப்பி... வேணும்னா இதை சத்தமா சொல்லவா?’’

‘‘நீங்க டைரக்டரா வந்த நாளிலிருந்து ஏதோ ஒரு பர்சனல் கேள்வி உங்களை விரட்டிக்கிட்டே இருக்கு. அதை உணர்றீங்களா?’’
‘‘நிச்சயமா! எனக்கு ரெண்டு விஷயம் இருக்கு சார். ஒரு பக்கம் தனிப்பட்ட வாழ்க்கை. இன்னொரு பக்கம் தொழில். இரண்டையும் வீணாக்கக் கூடாது. யாருக்குப் பிரச்னை இல்லை? நெருக்கடி இல்லை? சந்தோஷமா, நிறைவா இருக்கிற மனுஷனா ஒருத்தரைக் காட்டுங்க பார்ப்போம். இந்தப் பேட்டியை எழுதி முடிக்கிறதுக்குள்ளே உங்களுக்கு எவ்வளவு பிரச்னையோ! மத்தவங்க பிரச்னைய அவங்க சொந்தப் பிரச்னையா மதிக்கணும். அதில் நுழையக் கூடாதுன்னு தோணணும். நான் எடுக்கிற எல்லா முடிவின் சாதக பாதகங்களும் எனக்கே சொந்தம். பிரபுதேவா நல்லா நடிக்கிறாரா... பார்க்கிற மாதிரி டைரக்ட் பண்றாராங்கிறதை எல்லாம் விட்டுட்டு, அவனைப் பத்தி துப்பு துலக்கினா என்னங்க சொல்றது? நான் கொஞ்சம் நடிச்சிட்டு, சினிமா பண்ணிட்டு இருக்கேன். என்னை அப்படியே விட்டால் சந்தோஷப்படுவேன்!’’
- நா.கதிர்வேலன்