ரஜினியைவிட கமலுக்கு அதிக சம்பளம்!





ஒரு காட்சி பற்றி கமலிடம் இயக்குனர் சித்ரா லட்சுமணன் விளக்கிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை அவரிடம் காட்டினோம். ‘‘நான் இயக்கிய ‘சூரசம்ஹாரம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த படம் இது. குதிரைமூக் என்ற இடத்தில் பெரிய பங்களா செட் போட்டு இந்தக் காட்சியை எடுத்தோம். அது மாதிரி பங்களா செட் போடுவதென்றால் இன்றைய மதிப்பில் மூன்று கோடி ரூபாய் செலவாகும். இதைப் பார்த்ததும் கமல் பற்றிய பல சுவாரஸ்ய சம்பவங்கள் மனதில் நிழலாடுகின்றன’’ என்றவர், அதில் ஒன்றை மட்டும் பகிர்ந்தார்.

‘‘பாரதிராஜாவிடம் நான் உதவி இயக்குனராக சேர்ந்திருந்த சமயம். ‘16 வயதினிலே’ படத்தில் சப்பாணி கேரக்டரில் கமல் நடித்தால் நல்லாயிருக்கும் என்று பாரதிராஜா நினைத்தார். அதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் கே.ஆர்.ஜி தயாரித்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’ படத்துக்காக, 17 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு கமலை புக் பண்ணிக் கொடுத்தேன். ‘நம் படத்துக்கு இன்னும் ரெண்டாயிரம் குறைத்து 15 ஆயிரத்துக்கு பேசி முடிக்கலாம்’ என்று பாரதிராஜாவிடம் நம்பிக்கையாகச் சொன்னேன். நானும் பாரதிராஜாவும் கமலைப் பார்க்கப் போனோம்.

அருணாசலம் ஸ்டூடியோவில் ஷூட்டிங்கில் இருந்தார் கமல். அந்தப் படத்தின் பெயர், ‘பணத்துக்காக’. நாங்கள் பேசப் போனதும் சம்பள விஷயமாகத்தான். கமல் நாங்கள் நினைத்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக 30 ஆயிரம் ரூபாய் கேட்க, அப்படியே ஷாக் ஆகிட்டோம். அந்தப் படத்துக்கு ரஜினியோட சம்பளம் வெறும் 2 ஆயிரம் ரூபாய்தான். படத்தின் மொத்த பட்ஜெட்டே நாலே முக்கால் லட்சம் ரூபாய்தான். கமலுக்கு அவ்வளவு சம்பளம் கொடுத்தால், பட்ஜெட் தாங்காதே என்று பாரதிராஜா சார் தயங்கினார். ‘அப்படின்னா அந்தக் கேரக்டருக்கு சிவகுமாரை போட்டுடலாம்’ என்று நான் சொன்னேன். ‘இல்லை... கமல்தான் நான் மனசுல வச்சிருக்கற கேரக்டருக்கு கரெக்டா இருக்கும்’ என்று ஃபீல் பண்ணிய டைரக்டர், கடைசியா கமல் கேட்ட சம்பளத்துக்கே சம்மதித்து கால்ஷீட் வாங்கினார்.

ஷூட்டிங் தொடங்கியது. ஈஸ்ட்மேன் கலர் அதிக செலவாகும் என்று ஆர்.ஓவில் எடுத்தோம். ஈஸ்ட்மேன் கலரைவிட இது பாதிதான் செலவாகும். பெங்களூரிலிருந்து 400 அடி கேன், 500 அடி கேனில்தான் ஃபிலிம் வரும். ஒரு கேன் முடிந்ததும் பெங்களூரிலிருந்து அடுத்த கேன் வரும்வரை வெயிட் பண்ணுவோம். இப்படி காத்திருந்தும் கஷ்டப்பட்டும் எடுத்த படம் பாரதிராஜா, கமல் மட்டுமின்றி, தமிழ் சினிமாவுக்கே பெரிய சகாப்தமாக அமைந்தது!’’
- அமலன்
படம் உதவி: ஞானம்