நானூம் சில்க் படம் எடுக்கிறேன்..!





இந்தி, கன்னடம், மலையாளம் என எல்லா மொழி சினிமாவிலும் பரவி வருகிறது சில்க் ‘மேனி’யா. யார் யாரோ சில்க் கதையை ‘சுட்டு’க்கொண்டிருக்க, சில்க்கின் சில வருட காதலனாக நெருங்கிப் பழகிய இயக்குனர் வேலு பிரபாகரன் இப்போது என்ன செய்கிறார்? களத்தில் இறங்கி விசாரித்த நமக்கு காத்திருந்தது அதிர்ச்சி!

‘‘நானும் ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். சில்க் ஸ்மிதாவின் வேதனை, வலி, துயரம், ரணம், காதல் அத்தனையும் இந்த படத்தில் வெளிப்படும். படத்தோட டைட்டில் ‘கதாநாயகி கலா’. இதுமட்டுமில்லாமல் இன்றைய சினிமா சூழ்நிலை, பாலியல் வன்கொடுமைக் களமாக மாறிவிட்ட கோடம்பாக்கம், தகுதி இல்லாதவர்களை சிம்மாசனத்தில் அமர வைக்கும் கொடுமைன்னு நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறேன். கதை, திரைக்கதை, வசனத்தை நான் எழுத, ஜோதி முருகன்ங்கிற புதியவர் இயக்குகிறார்.

மங்களூரைச் சேர்ந்த வனிதாதான் கதாநாயகி. தேவைப்பட்டால் நிர்வாணமா கூட நடிக்க வேண்டி வரும் என்ற கண்டிஷனோடுதான் கதை சொன்னேன். நான் ரெடின்னு புறப்பட்ட வனிதாவின் தைரியம் சில்க்கை ஞாபகப்படுத்திவிட்டது.  

இத்தனை நாளாக நான் என்ன செய்தேன் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இயக்குனர், ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன் என்பதைவிட, கடவுள் மறுப்பாளன் என்பதுதான் எனது அடையாளமாக இருக்கிறது. ஒரு படத்தை பூஜையோடு தொடங்கும் தயாரிப்பாளர்களுக்கு என்னையும் எனது கொள்கையையும் எப்படிப் பிடிக்கும்? யாரையும் ஏமாற்றி, பித்தலாட்டம் செய்து படம் எடுக்க என்னால் முடியாது.’’



‘‘உலகத்தரத்துக்கு தமிழ் சினிமா உயர்ந்து வருவதாகச் சொல்லப்படும் நேரத்தில் நீங்கள் அதை விமர்சிப்பது சரியா?’’
‘‘நேற்று வரை கோலி விளையாடிய பையன் கூட, சினிமாவில் நடித்து முதல்வர் ஆகும் ஆசையில் சென்னைக்கு வருகிறான். எம்.ஜி.ஆரும் கலைஞரும் சினிமாவிலிருந்து முதல்வர் ஆனார்கள் என்றால் அவர்களின் பின்னால் பெரியாரும், அண்ணாவும் இருந்தார்கள். ஆராய்ந்து பார்த்தால், கடந்த 40 ஆண்டுகால தமிழ் சினிமாவில் எல்லாமே பொய்யாக இருக்கும். சமூக மேம்பாட்டுக்காக எதையும் செய்யவில்லை. ஒரு சிலரைத் தவிர தமிழ் சினிமாவில் யாருக்கும் பொறுப்பில்லை. சினிமா இயக்குனர்கள் நாட்டை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.’’
‘‘மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... நீங்க என்ன செஞ்சிருக்கீங்க?’’

‘‘சமூக விழிப்புணர்வுக்காக படங்களில் நான் சொன்ன விஷயங்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. செக்ஸ் படம் எடுத்ததாகத்தான் சொல்வார்கள். பெண் விடுதலை அடைவதே உண்மையான விடுதலை என்ற கருத்தைத்தான் ஆண்களின் பார்வையிலிருந்து ‘காதல் அரங்கம்’ சொன்னது. ஆனால், அதை வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டார்கள்.’’
‘‘சில்க்கின் கதையாக எடுக்கப்பட்டிருக்கும் ‘நடிகையின் டைரி’ படத்தில் சில்க்கின் சாவுக்கு ஒரு தாடிக்காரர்தான் காரணம் என்று வருகிறதாமே... அது யார்?’’
‘‘அந்த தாடிக்காரர் நான் இல்லை. படம் வந்த பிறகுதான் நான் அது பற்றி கருத்து சொல்ல முடியும். சாதாரண ரசிகன் போலவே சில்க் மீது எனக்கும் ஈர்ப்பு இருந்தது. ‘பிக்பாக்கெட்’ பட சமயத்தில்தான் சில்க் எனக்கு அறிமுகம். ஷூட்டிங் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே அவரை எனது வலையில் வீழ்த்திவிட நினைத்தேன். அப்படியே அது நடந்தது. நெருக்கமாகப் பழகினோம். நாளடைவில் அந்த நெருக்கம் அவர் வீடு வரை என்னை அழைத்துச்சென்றது. தவறான நேரத்தில் வந்த சரியான காதல் அது. ஏனென்றால், அதற்குமுன் இயக்குனர் ஜெயதேவியை திருமணம் செய்துகொள்வதாக நான் வாக்கு கொடுத்திருந்தேன். அது எனக்கு உறுத்தலாகவே இருந்தது. ஒருநாள் சில்க் வீட்டில் நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஜெயதேவி வந்தார். சில்க்கிற்கும் அவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சில்க்கிடமிருந்து விலகினேன். சில்க்கை ஏமாற்றிய குற்ற உணர்வு இப்போது எனக்குள் இருக்கிறது.

டச் அப் பெண்ணாக இருந்து வளர்ந்து வந்த சில்க்கை இந்த சினிமாவும் சினிமாக்காரர்களும் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டார்கள்! கொடூர பிடியில் அவர் அகப்பட்டிருந்த விஷயங்கள் எல்லாமே எனக்குத் தெரியும். தனக்கு சில சினிமா வாய்ப்புகளை வாங்கித் தந்த நன்றி விசுவாசத்திற்காக ராதாகிருஷ்ணன் மீது பாசம் பொழிந்தார். கடைசி வரை
அவருக்கானச் தேவைகளை செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ராதாகிருஷ்ணன் மகனுடனும் சில்க்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத் தவறென்று நான் சொல்ல மாட்டேன். சில்க்கை இந்த சமூகம் எப்படிப் பயன்படுத்தியதோ, அந்தப் பழக்கம்தான் அவருக்கு இருக்கும். ராதாகிருஷ்ணன் ஒரு ரேஸ் பிரியர். தினமும் 50 ஆயிரம், 1 லட்சம் என செலவு செய்வார். சில்க்கின் சம்பாத்தியம் இப்படியே கரைந்தது. கடைசியில் சொந்த வீடு கூட இல்லாமல் இறந்துபோனார் சில்க்!’’
- அமலன்