+2வுக்குப் பிறகு... என்ன படிக்கலாம்?

சில தினங்களில் பிளஸ் 2 ரிசல்ட் வர இருக்கிறது. மே 4ம்தேதி எஞ்சினியரிங் படிப்புக்கும், 5ம் தேதி மருத்துவப் படிப்புக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன. மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அடுத்த டென்ஷன் ஆரம்பமாகிவிட்டது.
ஏராளமான கல்லூரிகள்... எக்கச்சக்க படிப்புகள்... எதைத் தேர்வு செய்வது? எப்படித் தேர்வு செய்வது? எந்த மாணவனுக்கு எந்தப் படிப்பு பொருந்தும்? படிப்பை தேர்வு செய்வதில் பெற்றோரின் பங்கு என்ன? வேலைவாய்ப்புள்ள படிப்புகள் எவை? புதிதாக அறிமுகமாகியுள்ள, நல்ல எதிர்காலம் உள்ள படிப்புகள் எவை? நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் என்னென்ன? அங்கு படிப்பதில் உள்ள லாப, நஷ்டங்கள் என்ன? ஸ்காலர்ஷிப் பெறுவது எப்படி? கல்விக்கடன் பெறுவது எப்படி? கல்வியும் தந்து வேலையும் தரும் நிறுவனங்கள் எவை?
திணற வைக்கிற இதுபோன்ற எல்லாக் கேள்விகளுக்கும் துறை சார்ந்த வல்லுனர்கள் மூலம் தீர்வு தந்து, பெற்றோர் மற்றும் மாணவர்களின் சுமையைக் குறைக்கவே இந்தப் பகுதி.

படிப்பை எப்படித் தேர்வு செய்வது?
‘‘நான்கைந்து வயதில் குழந்தைகளிடம் ‘நீ பெரியவனாகி என்னவாகப் போகிறாய்’ என்று கேட்பார்கள். அந்தக் குழந்தை, ‘டாக்டராவேன்’, ‘கலெக்டராவேன்’ என்று சொல்லும் பதிலால் பூரித்துப் போவார்கள். ஆனால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்று நிற்கும் மகனிடம், ‘நீ என்ன படிக்கப் போகிறாய்?’ என்று எந்தப் பெற்றோரும் கேட்பதில்லை. பெரும்பாலும், அடுத்தவரின் ஆலோசனையைக் கேட்டோ அல்லது அடுத்தவர்களைப் பார்த்தோ தம் பிள்ளையின் படிப்பை முடிவு செய்கிறார்கள். இதனால், 50 முதல் 60 சதவீத மாணவர்கள், ‘ஏதோ சேர்த்துவிட்டார்கள், படித்து முடிப்போம்’ என்ற மனநிலையில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார் மனித வளத்துறை நிபுணரும், கல்வி ஆலோசகருமான சுஜித்குமார்.

‘‘படிப்பைத் தேர்வு செய்வதில் பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம்தான். ஆனால் அதில் மாணவனின் விருப்பமே பிரதானமாக இருக்கவேண்டும். படிப்புக்கான துறை என்பது வாழ்க்கைக்கான துறை. பிள்ளையின் ஆர்வம், செயல்பாடு, விருப்பம் அறிந்து பெற்றோர் வழிகாட்ட வேண்டும். தங்கள் முடிவை திணிக்கக் கூடாது. எவ்வளவோ விழிப்புணர்வு வந்தபிறகும், பெரும்பாலான பெற்றோர்கள் பொறியியலையும், மருத்துவத்தையும் மட்டுமே நல்ல படிப்பாகக் கருதுகிறார்கள். இந்த மனநிலை மாறவேண்டும். இவற்றைத் தாண்டி, குறைந்த செலவில் படிக்கக்கூடிய, உடனடி வேலைவாய்ப்புள்ள, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை உருவாக்கக்கூடிய ஏராளமான படிப்புகள் இங்கே உண்டு’’ என்கிறார் சுஜித்குமார்.

‘‘ஒரு காலத்தில், ஆண்டுக்கு 5000 பொறியாளர்கள் படிப்பு முடித்து வெளியே வந்தார்கள். உடனடியாக அவர்களுக்கு வேலை கிடைத்தது. இப்போது ஆண்டுக்கு 1 லட்சம் பேர் முடிக்கிறார்கள். 70 சதவீதம் பேருக்கு வேலை கிடைப்பதில்லை. கனவுகள் கருகி விடுகின்றன. எஞ்சினியரிங் முடித்துவிட்டு பீட்ஸா டெலிவரி செய்யும் இளைஞர்கள் இங்கு உண்டு. பிள்ளையிடம் மனம்விட்டுப் பேசுங்கள். மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் எதை விரும்புகிறார்களோ, எதில் திறமைசாலிகளாக இருக்கிறார்களோ, அந்தத் துறையைத் தேர்வு செய்யுங்கள்’’ என்கிறார் கல்வி ஆலோசகர் செந்தில்குமார்.
‘‘80 சதவீதம் பெற்றோர், ‘தங்கள் பிள்ளைகள் பொறியியல் படிக்கவேண்டும்’ என்று விரும்புகிறார்கள். என் மகன் பி.இ படித்திருக்கிறான் என்று சொல்வதில் அவர்களுக்குப் பெருமை. வெறும் டிகிரியை வைத்து என்ன செய்வது..? வேலை கிடைக்க வேண்டுமானால், பாடப் புத்தகத்தைத் தாண்டி வெளியிலும் நிறைய தேடல் இருக்கவேண்டும். அந்த அளவு ஈடுபாடு இல்லாதவர்களுக்கு பொறியியல் பொருந்தாது.

பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட, பொறியியல் படிப்பில் திணறுகிறார்கள். காரணம், இரண்டுக்குமான சூழல் வேறுபாடு. பிளஸ் 2வில் ஒரு விஷயத்தை ஏன் படிக்கிறோம் என்று புரியாமலே மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுத்துவிடலாம். ஆனால் பொறியியலில் ஒவ்வொன்றையும் செயலோடு தொடர்புபடுத்தி பார்க்கவேண்டும். எனவே நன்கு புரிந்து படிக்கும் திறன் உள்ளவர்களே பொறியியலைத் தேர்வுசெய்ய வேண்டும்.  

பொறியியலில் கணிதமும், அறிவியலுமே பிரதானம். அவற்றில் ஆர்வம் உள்ளவர்கள், பொறியியல் படிக்கலாம். மேலும் பொறியியல் படிப்பில் 90 சதவீதத்துக்கு மேல் ஆங்கிலம்தான். ஓரளவுக்கேனும் ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். அல்லது வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் செந்தில்குமார்.

‘‘படிப்பை தேர்வு செய்யும்போது, இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொள்ளக்கூடாது’’ என்கிறார் சுஜித்குமார். ‘‘இப்போது மின்வெட்டு பிரச்னை இருக்கிறது. அதனால் ‘எலெக்ட்ரிகல் படித்தால் வேலை கிடைக்கும்’ என்பார்கள் சிலர். நிறைய சாலைகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘சிவில் படித்தால் உடனே வேலை கிடைக்கும்’ என்று சிலர் சொல்வார்கள். எப்போதும் அடுத்த 10 வருடங்களை மனதில் வைத்தே கணிக்கவேண்டும். மாணவனின் குணாதிசயத்துக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். வெயிலில் நின்றால் மயங்கிவிடக்கூடிய ஒருவருக்கு சிவில் ஒத்து வராது. கம்ப்யூட்டரைப் பார்த்தாலே அலர்ஜி என்றால் அந்த மாணவனை ஐ.டி படிக்க வைத்துப் பயனில்லை.

தன்னால் முடியாததை தன் மகன் செய்யவேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் நீங்கள் வேறு, உங்கள் பிள்ளைகள் வேறு. இருவருக்கும் இருவேறு இதயங்கள், மூளைகள். அவர்களுக்கான உலகம் வேறு. அவர்கள் மேல் சுமைகளை வைத்து அழுத்தத்தை உருவாக்காதீர்கள்’’ என்கிறார் சுஜித்குமார்.

‘‘பொறியியலைப் பொறுத்தவரை, ‘கோர் எஞ்சினியரிங்’ எனப்படும் எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் ஆகியவற்றுக்கு மினிமம் கியாரண்டி உண்டு. ஏரோநாட்டிகல் படிக்க விரும்புபவர்கள் இளங்கலையில் ‘மெக்கானிகல் எஞ்சினியரிங்’ முடித்துவிட்டு முதுகலை ஏரோநாட்டிகல் படிப்பது பாதுகாப்பு. நிச்சயம் ஏதாவது ஒரு துறை காப்பாற்றிவிடும். அதேபோல், பெட்ரோகெமிக்கல் சேர விரும்புபவர்கள் இளங்கலையில் கெமிக்கல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு முதுகலையில் ‘பெட்ரோ’வுக்கு செல்வது நல்லது. இது எல்லா படிப்புகளுக்குமே பொருந்தும்.    

இங்கே புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள் முளைத்திருக்கின்றன. எந்தக் கல்லூரியில் படித்தாலும் அண்ணா பல்கலைக்கழக டிகிரி கிடைத்துவிடும். ஆனால் வேலை கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். பொறியியலைப் பொறுத்தவரை, ‘நாலட்ஜு’க்குத்தான் மரியாதை.

கலை, அறிவியல் படிப்புகளைப் படிப்பதே அசிங்கம் என்ற மனநிலை இங்கே நிலவுகிறது. உண்மையில் பொறியியலை விட கலை அறிவியல் படிப்புகளுக்கே வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அண்மைக்காலமாக சாஃப்ட்வேர் நிறுவனங்கள் கூட, கலை, அறிவியல் கல்லூரிகளில் இருந்து ஊழியர்களைத் தேர்வு செய்கிறார்கள். எனவே தைரியமாக கலை, அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்’’ என்கிறார் சுஜித்குமார்.
எதிர்காலமுள்ள படிப்புகள் எவை? நல்ல கல்லூரி எது?
அடுத்த வாரம் அலசுவோம்...  
- வெ.நீலகண்டன்