எல்லை தாண்டும் சினா!





வட கொரியா இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘சர்வதேச சண்டியர்’ வேடமிட்டு நின்றது. தென் கொரியா மீது போர்  புரியப் போவதாக மிரட்டியது. அங்கிருக்கும் அமெரிக்கர்களையும் அழிக்கப் போவதாகச் சொன்னது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் உடனே சீனாவின் தயவை நாடின. வட கொரியாவை வளர்த்து விடுவது சீனாதான். அந்த நாடு சொன்னால் வட கொரியா நியாயத்தை உணரும் என வல்லரசுகள் நினைத்தன. சர்வதேச பஞ்சாயத்துகளை செய்யும் சீனாவின் யோக்கியதை, இந்தியாவுக்குள் ஊடுருவியதில் அம்பலமாகி இருக்கிறது.

கடந்த 15ம் தேதி தங்கள் எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் 10 கி.மீ தூரம் வந்த சீனப்படை, தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தில் முகாமிட்டது. 50 வீரர்கள் கொண்ட படை. காஷ்மீரின் லடாக் பகுதியில் இருக்கும் ஏரியா இது. 1962ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய - சீனப் போரின்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, காஷ்மீரின் லடாக் பகுதியில் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. ‘அக்சாய் சின்’ என அந்தப் பகுதி அழைக்கப்படுகிறது. ‘இது எங்க ஏரியா’ என அது அடம் பிடித்ததால், இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சீனா கைப்பற்றிய பகுதிகளுக்குத் தெற்காக ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்துக் கொண்டு, அதைத்தான் இருநாட்டு எல்லையாகக் கருதி வருகிறது.

ஐம்பது ஆண்டுகளைத் தாண்டி இதை இரு நாடுகளுமே மதிக்கின்றன. ஆனாலும் அடிக்கடி சீன ராணுவம் எல்லை தாண்டி வருவதுண்டு. கொஞ்ச நேரம் உலாவிவிட்டு திரும்பிப் போய் விடுவார்கள். மோதல், துப்பாக்கிச் சூடு என எப்போதும் இந்திய ராணுவம் இறங்கியதில்லை. தற்காப்பு பாதுகாப்பையே சீன எல்லையில் இந்தியா கடைப்பிடிக்கிறது.

இந்தமுறையும் அப்படி திரும்பி விடுவார்கள் என்றே இந்திய ராணுவம் நினைத்தது. ஆனால், அவர்கள் டென்ட் அடித்து தங்கிவிட்டனர். மனிதர்கள் வாழத் தகுதியற்ற, புல் கூட முளைக்காத பனிப் பாலைவனம் அது. -30 டிகிரி செல்சியஸில் நடுக்கும் பிரதேசம். அவ்வப்போது பனிக்காற்று வீசி குலை நடுங்கச் செய்யும். ஆனாலும் தவுலத் பெக் ஓல்டி இந்திய ராணுவத்துக்கு மிக முக்கியமான இடம். லடாக் பனிப் பிரதேசத்தில் இந்திய ராணுவ விமானங்கள் தரையிறங்கும் ‘ஏர் ஸ்ட்ரிப்’ இங்குதான் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், எல்லை அரண்களையும் புதுப்பித்துவிட்டது. காஷ்மீரை ஒட்டிய 4057 கிலோமீட்டர் நீள எல்லைப்புறத்தில் பாதுகாப்பு அரண் ஏற்படுத்துவது, விமான இறங்கு தளங்கள் போடுவது, எல்லைகளுக்கு படைகளைக் கொண்டு செல்ல வசதியாக சாலைகள் அமைப்பது என எல்லாவற்றையும் முடித்துவிட்டது. நாளைக்கே போர் மூண்டாலும், சீனாவால் சில மணி நேரங்களில் கவச வாகனங்களையும் பீரங்கிகளையும் எல்லைக்கு நகர்த்துவது சாத்தியம். விமானங்களைக் கொண்டுவந்து நிறுத்தவும் முடியும்.

இந்தியா தாமதமாக விழித்துக் கொண்டு, இப்போதுதான் எல்லாவற்றையும் புனரமைக்கிறது. இதை சீனா விரும்பவில்லை. ‘‘எல்லையில் தேவையின்றி படைகளை அதிகரிக்கக் கூடாது, இரவு நேர ரோந்துகள் வேண்டாம் என்பவை உள்ளிட்ட சில அம்சங்களைக் கொண்ட ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்’’ என கடந்த மாதம் சீனா கோரியது. இந்தியத் தரப்பிலிருந்து அதற்கு எந்த பதிலும் இல்லை. எனவேதான் இந்த ஆக்ரோஷம்.

ஏற்கனவே அருணாசலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தவருக்கு தனி விசா தந்தார்கள், கில்கிட் பகுதியில் இந்திய எல்லைக்குள் கட்டிடம் கட்டினார்கள், இப்போது ராணுவ முகாம்... இலங்கை போன்ற குட்டி நாடுகளைக் கூட தட்டிக் கேட்கமுடியாமல் ஐ.நா சபை இருக்கும் ஒரு சர்வதேச சூழலில், சீனா என்ற சண்டியரை எதிர்கொள்ள இந்தியாவின் பக்கம் யாரும் இல்லை!
- அகஸ்டஸ்